Saturday, January 26, 2019

SONNATHUM SOLLAATHATHUM -SACHCHIN

"வெற்றி ,தோல்வி இரண்டிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களின் முக்கியத்துவம் சமமானவை.  வெற்றி , மகிழ்ச்சியைக் காட்டிலும், தோல்வியும் துன்பமும் கற்றுக்கொடுப்பதில் சிறந்த பேராசிரியர்களாக விளங்குகின்றன." 
  

 மிகப் பெரிய சாதனை புரிய முயற்சிக்கும் போது தோல்வியைச் சந்தித்தாலும்  அது தோல்வியல்ல.உண்மையில் அது வெற்றியின் முதல் படி .வெற்றியின் ரகசியங்கள் தோல்விகளுக்குள்  தான் புதைந்து இருக்கின்றன .தோல்வியால் துவண்டு முயற்சியை விட்டுவிடுவது தான் மெய்யான தோல்வி . வெற்றிக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன ஒன்று செய்ய வேண்டியத்தைச் சரியாகச் செய்வது , மற்றொன்று  செய்யக்கூடாததைச் செய்யாமல் தவிர்ப்பது. .சரியாகச் செய்து வெற்றி பெற்றவனைக் காட்டிலும் சரியாகச் செய்யாமல் தோல்வி கண்டவன் கூடுதலான அனுபவத்தைப் பெறுகின்றான். அந்த அடிப்படையில் தோல்வி கூட ஒருவருடைய முயற்சிக்கு இயற்கை கொடுக்கும்  பரிசு என்ற நினைக்க வேண்டும் .
"குறை கூறுபவர்கள் நான் எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர்கள் இல்லை. என்னுடைய உடல் வலிமையையும் மனத் திடமும் எத்தகையது  என்பதை அவர்கள் அறிவார்களா ? குறையும் நிறையும் ஒருவரை மற்றவருடன் ஒப்பிடும் போதுதான் தோன்றுகின்றது. .அதனால்  ஒப்பிட்டுப்பார்ப்பதை விட்டுவிட வேண்டும்"
"பந்து என்னை நோக்கி வரும்போது அதை மிகக் குறுகிய நேரத்தில் மதிப்பிட்டு விளையாட வேண்டும். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன சொல்கின்றார்கள் என்பதைப் பற்றிப் நான் நினைத்துக் கொண்டிருக்க முடியாது .என்னுடைய செயலை என் உள்ளுணர்வுகளுக்கு அர்ப்பணித்து விடுவேன். என் அக மனத்திற்குத் தெரியும் நான் இனி என்ன செய்யவேண்டும் என்பது . நான் என்னை  அப்படிப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றேன் ."
திறமை உண்மையானதாக இருந்தால்  மனதில் நம்பிக்கை இயல்பாக  இருக்கும். ஒவ்வொருவரும் சுயசார்புடன் செயல்படுவதற்கு இந்தத் தன்னம்பிக்கை தேவை. நம்பிக்கை இருக்கும் போதுதான் வழிமுறைகள்  எளிதாகக் கிடைக்கின்றன  வழிகாட்டல்களும்  தாமாகத் தோன்றுகின்றன. முயற்சி செய்வதற்கு வேண்டிய ஆற்றலையும் , வெற்றி பெறுவதற்கு வேண்டிய திறமையையும் தருகின்றது 

Friday, January 25, 2019

sonnathum sollaathathum

சச்சின் டெண்டுல்கர் எழுதிய  "  Playing it my way " என்ற நூலில்  முன்னேறத்  துடிக்கும் இளைஞர்களுக்கு  பல நல்ல கருத்துக்களைக் கூறியுள்ளார் .


"உன் மீது பிறர் தூக்கி எறியும் கற்களை படிக்கல்லாக மாற்றிக் கொள்ள உன்னால் முடியும். "

பொதுவாக ஒருவரது வளர்ச்சியை விரும்பாதவர்கள் தடைப்படுத்துவதற்காக எதிர்ச் செயல்களை செய்வார்கள் . உற்சாகத்தை மட்டுப்படுத்துவதற்காக குறை கூறுவார்கள்.  போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் துணிந்து செல் என்று சான்றோர்கள் கூறுவார்கள் . குறை சொல்லுவோர் கருத்துக்களையெல்லாம்  செவிடராய் இருந்துகேட்டால் ,ஊமையாய் இருந்து தொடர்ந்து செயலைச் செய்தால்  எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. கடிய சொற்களால் மனம் துவண்டு போனால்  செய்யப்படும் செயல்கள் செயல்களாய் இருப்பதில்லை .குறை என்று நினைப்பது மனம்தான் நிறை என்று நினைப்பதும் அதே மனம் தான் . குறைகளையெல்லாம் நிறைகளாகத் திருத்தி நினைக்கத் தெரிந்தால் வாழ்க்கையின் வளர்ச்சிப் பாதையில்  வீழ்ச்சியேயில்லை. மனமிருந்தும் மனப்பக்குவம் இல்லாவிட்டால்  சொல் கூட கல்லைவிட பலமாகத் தாக்கும்

"கனவுகள் ஒரு நாள் நிச்சியமாக நனவாகும் . கொஞ்சம் கால தாமதமாகிறது  என்பதற்காக  கனவு காண்பதை விட்டு விடாதீர்கள் . "

கனவுகள் முன்னேறத் துடிக்கும் மனிதர்களின் சுயவழிகாட்டி . உள்ளுணர்வைத் தூண்டிக்கொண்டே இருக்கும் -விழித்திருக்கும் போது செயல்களாய் ,தூங்கிக் கொண்டிருக்கும் போது கனவுகளாய்.முன்னேற்றம் என்பது ஒரு திட்டம். அதற்கு ஒரு செயல் வடிவம் கொடுப்பது சுய விருப்பம். முயற்சிகள் என்பது மனதின் ஒத்துழைப்பு . இந்த கூட்டணி சந்திக்கும் போது கனவுகள் மலரும்.  கனவுகள் உறங்கும் போது இரவில் பூக்கும் வண்ணப் பூக்கள் .   செய்யவேண்டிய செயல்கள் நிறைய இருக்கு எழுந்திரு என்று அதன் நறுமணம் உன்னை எழுப்பிவிடுவதற்காக பூக்கின்ற  பூக்கள் .

" உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெற்று விளையாடுவவதற்குப் பின்னால்   ஒரு நெடிய வழிமுறை உள்ளது.  50 வது மாடிக்கு நேரிடையாகத் தாவிக்குதிக்கும் முயற்சியை  விட்டுவிட்டு அடித்தளத்திலிருந்து தொடங்கி முன்னேறிச் செல்ல வேண்டும் ."       

எதையும் நினைத்த மாத்திரத்தில்  அடைய முடியாது. எதை அடைய விரும்புகின்றோமோ அதை அடைய முதலில் நம்மைத் தகுதியுடையவர்களாக்கிக் கொள்ள வேண்டும் ,தகுதியின்மையால் மேற்கொள்ளும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிகின்றன .  எந்தத் துறையில் முன்னேற விரும்பினாலும் முதலில் தகுதியுடையவனாக இருக்க வேண்டும். அந்தத் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும். அப்படி ஈடுபட்டால் வளர்ச்சி யில் தடை ஏற்படுவதற்கு வழியில்லை .
 கணப்பொழுதில் ஒரு பெரிய மாட மாளிகையைக் கட்டுவதும். கையை அசைத்து தங்கக் காசுகளைக் கொட்டுவதும், ,அறுசுவை உணவைப் பரிமாறுவதும்,  இயற்கைக்கு  அப்பாற்பட்ட  மந்திர தந்திரங்களுக்கு  வேண்டுமானால் இயலுவதாக இருக்கலாம்.  ஆற்றலின்றி ஒருநாளும் பொருட்கள் விளைவதில்லை என்பது இயற்கையின் மாறாத விதிகளில் ஒன்று என்பதை மறந்தவர்கள் மட்டுமே குறுக்கு வழியில் முன்னேற வழி தேடிக்கொண்டிருப்பார்கள்  .