Sunday, April 26, 2020

காந்தியின் பொன்மொழிகள்


காந்தியின் பொன்மொழிகள்.
“நீ நினைப்பதும் , சொல்வதும் ,செய்வதும் ஒருங்கிணைந்து செல்லும்போது மகிழ்ச்சி உள்ளத்தில் பொங்குகின்றது”.

இன்றைக்கு பெரும்பாலான மக்களிடம் ஒரு குறைபாடு வளர்ந்து வருகின்றது .பலர் நினைத்ததைச் சொல்வதில்லை. சொல்வதைச் செய்வதில்லை .   அகமொன்று நினைத்து புறமொன்று செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர், அதனால் முன்திட்டமிடுவதில் குழப்பமே மேலிடுகிறது  .நினைப்பதையே சொல்லி, சொல்வதையே செய்யும் போது உடலும் மனமும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளினால் செயல் சிறப்பாகச் செய்து முடிக்கப்படுகின்றது. செயலின் வெளிப்படைத் தன்மை எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது . உண்மையில் அது வேலைசெய்வதின் நேர்மைத்தன்மையாகும் .
சொல்வதைச் செய்யவேண்டும்  அல்லது செய்வதைச்  சொல்லவேண்டும் .அதனால் சமுதாயம் நலம் பெறும். சொல்வதைச் செய்யாமல் விடுவதும் செய்யக்கூடாததைச் சொல்வதும் சமுதாயத்தின் நலன் கெடுக்கும் .

பிறரிடமிருந்து உதவி பெறுவதைக்காட்டிலும் பிறருக்கு உதவி செய்யும் போதுதான் மனதில் அதிக மகிழ்ச்சி உண்டாகின்றது. தியாகம் செய்யும் போது, விட்டுக் கொடுக்கும் போது மனதில் பொங்கும் அந்த மகிழ்ச்சியை எல்லோராலும் உணரமுடியும். இறைவனுக்குப் படைக்கும் போது ஒரு திருப்தி ஏற்படுகின்றது . ஆனால் ஒரு வறியவனுக்கு உணவு கொடுத்து பசியாற்றும் போது மகிழ்ச்சி ஏற்படுகின்றது .

“நாம் நாளைக்கே இறந்துபோய்விடலாம் என்று நினைத்து வாழ் , நெடுங்காலம் வாழப்போகின்றோம் என்று நினைத்து கற்றுக்கொள்”

வேலை செய்ய நினைத்தால் அதை ஒருபோதும் தள்ளிப்போடாதீர்கள் , நாளை , நாளை என்றால் அந்தாள் நாள் அவர்க்கு விடியாமல் கூட போய்விடலாம் . உடலும் மனமும் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்காததால் செய்ய வேண்டிய வேலைகள் பெரும்பாலும் தள்ளிப்போகின்றன ..நாளை என்ற பொழுது நமக்கில்லை என்று நினைத்து வேலை செய்தால் விரைந்து முடிக்கலாம். அப்படிச் செய்யும் போது கூடுதல் வேலைகள் செய்வதற்கு பொழுது கிடைக்கின்றது . இன்னும் நெடுங்காலம் வாழப்போகின்றோம் என்று நினைத்து  கல்வி கற்பதை த் தொடர்ந்து செய்யவேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் துணிவைத் தரக்கூடிய திறமைகளை அது வளர்க்கின்றது
இதையே மாற்றி யோசித்துப் பார்த்தால் அதனால் ஏற்படும் விபரீதங்கள் புரியும் . நாம் சாகாமல் வாழப்போகின்றோம் என்றால் யாரும் வேலை செய்ய விரும்பமாட்டார்கள். நாளைக்கே சாகப்போகின்றோம் என்றால் யாரும் படிக்க முன்வரமாட்டார்கள் .

“உற்சாகமின்றி செய்யப்படும் எந்தச் சேவையும் செய்வோருக்கும் ,பயன் பெறுவோருக்கும் பயன்  தருவதில்லை
 
எந்த வேலை செய்யத் தொடங்கினாலும் ,அது சிறிய வேலையோ இல்லை பெரிய வேலையோ உற்சாகத்துடன் ஈடுபடவேண்டும் . இந்த உற்சாகம் தான் இறுதிவரை துணைநின்று செயலை பயனுறு திறனுடன் செய்து முடிக்க உதவுகின்றது .காலதாமதம் தவிர்க்கப்படுவதுடன் , கூடுதல் வேலைகளை மேற்கொள்ள கால அவகாசமும் கிடைக்கின்றது. உற்சாகமின்றிச் செய்யப்படும் வேலைகள் ,முழுமையாக முடிக்கப்படுவதில்லை ,காலதாமதம் புதிய பிரச்சனைகளை வரவழைத்து அறிமுகப்படுத்திவிடும் .

எந்தச் செயலைச் செய்தாலும் அதை முழு ஈடுபாட்டுடனும் மகிச்சியுடனும் செய்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அது செயல்திறனை முடுக்கிவிடுகின்றது , காலதாமாதமின்றி ,இடைத்தடைகளின்றி பலனைக் கொடுக்கின்றது . செய்வது எப்போதும் சொல்வதை விட மேலானது. ஒன்றைச் செய் கட்டளையிடுவதை விட அதைச் செய்து காட்டுவதே உயர்வானது . அது பிறருக்கு வழிகாட்டலாகவும் இருப்பதால் சமுதாயத்தையும் நல்வழிப்படுத்தும் . செய் என்றால் அது எதிர்வினைச் செயல் . தானே செய்து முடிப்பது என்பது தன்வினைச் செயல் . தன்வினைச் செயல்கள் மட்டுமே எந்த எதிர்ப்புமின்றியும் கால தாமதமின்றியும் செய்து முடிக்க  முடியும்.  ஒன்றைச் செய்வதற்கு ஆள் தேடாதே . நீயே செய்து முடி . அதைப்பார்த்து பிறரும் அந்த வேலையைச் செய்ய முன் வருவார்கள். உனக்காக வேறொருவன் விருப்பமின்றி வேலை செய்தால் அந்த வேலை முழுமையடையாது என்பதோடு ,அந்த மனப்போக்கு மனிதர்களோடு ஒட்டிக்கொண்டுவிடுகின்றது.

“உன்னை நீயே தெரிந்துகொள்ள சிறந்த வழி பிறருக்கு சேவை செய்வதில் உன்னை ஈடுபடுத்திக் கொள்வதுதான்”

எல்லோரும் அவர்களைப் பற்றி மிக உயர்வாகவே மதிப்பிடுவார்கள் அவரைப் பிடிக்காத ஒருவர் மிகத் தரக்குறைவாக பேசுவார் .ஒருவரின் உண்மையான தோற்றம் யாருக்கும் தெரிவதில்லை. பலர் ஏமாற்றுவதும் ஏமாந்து போவதும் இந்த பொய்முகத் தோற்றத்தினால்தான் . உன்னுடைய உண்மையான சமுதாய மதிப்பைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் , நீ  பிரதிபலன் எதிர்பாராது மற்றவர்களுக்குத்  தொடர்ந்து சேவைசெய்யவேண்டும்.. அதுதான் இயற்கையின் வழி. அதன்  மூலம்தான் நம்மைப்  படைத்த இறைவனுக்கு நம்மை நாமே நிரூபிக்க முடியும்.கடவுளை நாம்  நிரூபிக்க வேண்டியதில்லை .ஏனெனில்  நிரூபித்தாலும் நிரூபிக்காவிட்டாலும் அதனால் வாழும் நிலையில் எந்த  மாற்றமும் ஏற்படுவதில்லை .ஆனால் அதைவிட மிக முக்கியமானது நாம் நம்மை  கடவுளுக்கு நிரூபிக்க வேண்டும் . அது மட்டுமே நம் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும். .


“ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமான அளவு  கொடுத்திருக்கும் பூமி , அவர்களுடைய பேராசைகளுக்கு கொடுக்கவில்லை

உயிரினங்களுக்கு என்னென்ன தேவையோ அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் உண்டாக்கி வைத்துவிட்டுத்தான் பூமியில் இயற்கை உயிரினங்களைப் படைத்திருக்கிறது. ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ என்னென்ன உறுப்புக்கள் தேவையோ அவற்றையெல்லாம் பிறப்பிப்பதற்கு முன்பே திட்டமிட்டு பிறக்கும் போது அளித்திருக்கிறது. அதன் நோக்கம் அவனவன் தேவையை அவனவனேபூர்த்தி செய்து கொள்ளவேண்டும். என்பதுதான் ஒரு தாய் தன்மக்கள் எல்லோரையும் ஒரே பாசத்துடன் தான் வளர்ப்பாள் அது போல இயற்கையும் உலகில் பிறந்து வாழும் எல்லா உயிரினங்களையும் சமமாகவே பாவிக்கின்றது. அதற்கு  உயர்ந்தவன் தாழ்ந்தவன் , பணக்காரன் ஏழை , படித்தவன், படிக்காதவன் ,சிவப்பு கறுப்பு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது . தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் எல்லோரும் பகிர்ந்து எடுத்துக்கொள்ளுமாறு திறந்த வெளியிலேயே விட்டு வைத்திருக்கின்றது . சில மனிதர்களே பேராசையின் காரணமாக அவற்றையெல்லாம் தன் உடமைமையாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள் . பேராசைக்கு அளவில்லை . பூமியையே கொடுத்தாலும் ,மனம் திருப்திப்படுவதில்லை.  
எந்த மனிதனும் பூமியை சொந்தம் கொண்டாட முடியாது. அது உண்மையில் மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது..வாழும் போது நிலத்தை ப் பயன்படுத்தலாம் ஆனால் உரிமை கொண்டாட முடியாது. இறுதியில் நிலமே உயிரினங்களை உரிமையாக்கிக் கொள்கின்றது .

“வலிமை திடகாத்திரமான உடலால் வருவதில்லை அது தளர்வுறாத மனதின் துணிவு”

 உடல் வலிமைமிக்க  ஒருவன் வீட்டுக்குள் புகுந்த பாம்பைக் கண்டு பயந்து ஒளிந்து கொண்டான் ஒரு விளையாட்டு  வீரன் .எதிரி தன்னைவிட பலசாலியாக இருப்பானோ என்று எண்ணி விலகிக்  கொண்டான் . ஆனால் மனவுறுதி கொண்ட ஒரு சிறுவன் பாம்பை அடித்துக் கொன்றான். குடிப் பெயரை உயர்த்த வேண்டும் என்ற திட்பத்தில் ஒரு சிறுவன் போட்டியில் கலந்து கொண்டு வென்றான் .  வலிமை யை உடலுறுதியால் மதிப்பிடுகின்றோம். ஆனால் அது மன உறுதியால் அளவிடப்படுகிறது.

“வன்முறையை நான் எதிர்க்கிறேன் ஏனெனில் அது நல்லதற்காகச்  செய்யப்படும்
போது நல்லவை தாற்காலியமானதாக இருக்கின்றது,  கெட்டதற்காகச் செய்யப்படும் போது கெட்டவை நிரந்தரமானதாக இருக்கின்றது”

உலகில் வன்முறை பெருகிக் கொண்டுவருவதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன, சமுதாய மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாக வரும் மன அழுத்தம், தன்னலத்தில் கொண்ட மோகத்தில் மறந்துபோன மனிதநேயம் மற்றும் ஒழுக்க நெறிகள் , போதைப்பொருளுக்கு அடிமையாதல் பெற்றோர்களும் ,பெரியவர்களும் பிள்ளைகளை தீய செயல்களில் ஈடுபடுமாறு செய்வதும் ,அரசாங்கமும் தீயவர்களை ஊக்குவிப்பதும், சமுதாய வீதியில் நிகழும் வன்முறைகளையும், திரைப்படங்களில் கட்டப்படும் வன்முறைக் காட்சிகளையும்  அதைப் பற்றிய மக்களின் கண்ணோட்டத்தையும்  பார்த்து ஏற்படும் மாற்றங்கள்    குற்றவாளிகள் தண்டனை பெறாமல் தப்பித்துக்கொள்வதும் நிரபராதி தண்டிக்கப்படுவதும். உளவியல் ரீதியாக மனதை ப் பெரிதும் பாதித்துவிடுகின்றது . அதன் வெளிப்பாடே வன்முறை. கடுமையாக எதிர்ச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தீவிரவாதிகளாகி விடுகின்றார்கள் .இவர்கள்  அநீதிக்கு அநீதியை மேற்கொள்வதில்லை. ஆனால் பயங்கரவாதிகள் இதில் முற்றும் மாறுபட்டவர்கள் அவர்களுக்கு நிரந்தரமான கொள்கைகள் கிடையாது
வன்முறைக்குத் தீர்வு மக்களிடம்தான் இருக்கிறது என்று அரசாங்கமும் , அரசாங்கத்திடம் இருக்கின்றது என்று மக்களும் சொல்லிக்கொண்டேமெத்தனமாக இருக்கின்றார்கள்உண்மையில் இது சமுதாயத்தின் கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும். .சிறுவயதில் நன்னெறிகளைக்,கற்றுக்கொடுக்க வேண்டும் . சமுதாய நலனைக் கருத்திற் கொண்டு சுயநலத்தின் மீது கொண்டுள்ள மோகத்தை எல்லோரும் விட்டுவிடவேண்டும் .தீய குணங்களால் விளையும் விபரீதங்களையும், நல்ல குணங்களால் வரும் நன்மைகளையும் படிக்கும் போது பள்ளியிலும், பணிபுரியும் போது நிறுவனத்திலும் , பொது விடங்களில் அறிவிப்புக்களினாலும் எல்லோருக்கும் உணர்த்த வேண்டும். இது ஒரு முயற்சி தான். முழு அளவில் வெற்றி கிடைப்பது எளிதில்லை..ஏனெனில் மக்களைக் கட்டுப்படுத்திவிடலாம் ஆனால் மக்களின் மனத்தைக் கட்டுப்படுத்திவிடமுடியாது. ஆன்மிகம் தேயத்தேய மக்கள் மனதில் வன்முறை எண்ணங்கள் குடிபுகுகின்றன. ஆன்மிகம் மட்டுமே இதற்கு நம்பிக்கைதரக்கூடிய ஒரே தீர்வாக இருக்கின்றது


1 comment:

  1. Thanks a lot. Your appreciation will be helpful to me to do still better.

    ReplyDelete