Tuesday, September 1, 2020

God-17

 

கடவுள்-17

மனதின் மாயத் தோற்றத்தையே கடவுளாக வர்ணித்துக் கொண்டார்கள் என்பதற்குப் புராணங்கள் ஆதராமாய் இருக்கின்றன.மனதிற்கும் ,கடவுளுக்கும் உள்ள ஒற்றுமைகள் இதற்கு உறுதியளிக்கின்றன .மனதை - தன் மனத்தைக் கூட ஒருவர் ஓர் உருவமாகக் காணமுடியாது.மனதிற்கு சுயஉருவமில்லை .மனதை ஒரு உருவமாகப் பார்க்க வேண்டுமென்று விரும்பினால்  ஒருவர் அவரையே பார்த்துக் கொள்ளவதைத் தவிர வேறு வழியில்லை. அது   மட்டுமல்ல மனதைச் சரியாகப் புரிந்து கொள்ளவும் முடியாது. புரிந்து கொள்வதற்கான தகுதியை வளர்த்துக் கொண்ட பிறகே  மனதைப்  பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முடிகின்றது.அது போல கடவுளையும் கண்களால் காணவே முடியாது போதிய தகுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே கடவுளை உணரமுடியும். கடவுளை உயிருள்ள ஒரு உருவமாகப் பார்க்க விரும்பினால் ஒருவர் அவரையே கடவுளாக நினைத்துக் கொள்ளவேண்டும். மனம் ஒன்றைப் பலவாகும் பலவற்றை ஒன்றாகும் . கடவுளும் இயற்கை வடிவில் இதைத்தான் செய்கின்றார் . மனதின் படைப்புத் திறன் அளவற்றது. அது அனுபவங்களைப் பதிவுசெய்து வைக்கின்றது,எண்ணுகின்றது , சிந்திக்கின்றது,  உறுப்புக்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகின்றது, செயல்படத்  தூண்டுகின்றது .அது போல கடவுளின் படைப்புத் திறனும் மதிப்பிட முடியாத அளவிற்கு  அளவற்றது .  மனம் ஆற்றலின்றி பொருள் சமைக்கும் ,பொருளின்றி ஆற்றலை விளைவிக்கும் .கடவுளை போல எந்தவொரு வாகனமோ அல்லது ஊர்தியோ இன்றி பல ஒளியாண்டுகள் தொலைவு நினைத்த நொடியில் கடக்கும்.எதை அடைய  விரும்பி முயற்சி செய்து ஈடுபாட்டுடன்  கூடிய உழைப்பைத் தொடர்ந்தால் அதை நிச்சியமாக அடையமுடியும். ஒன்றைப் பெறுவதற்கான வழி காட்டும் மனதைப்  போல  கடவுளும் தகுதியுடைய மனிதர்களுக்கு வழிகாட்டுகிறார். மனம் முயன்று சரியாகச் செயல்பட்டால் அளவற்ற செலவத்தை எவரும் ஈட்டலாம். கடவுளிடம் வேண்டிக் கொண்டால் பொன்னும் பொருளும் அள்ளித் தருவார் என்பதைப்போல , ஒருவர் தன் மனதை வேண்டிக்கொண்டாலும் அது போல நிகழும் .

எல்லையற்ற பிரபஞ்சத்தை உருவாக்கிக் காப்பதையும் ,பேரூழியில் அழிக்கவேண்டியதை அழிப்பதையும் இடைவிடாது செய்யும் முழுமுதற் கடவுள் சிவன் என்பார்கள்.மும்மூர்த்திகளில் முதல்வன் .சைவ சித்தாந்தத்தின் தலைவன் உண்மையில் .எதுவும் அழிப்பதற்காக ஆக்கப்படுவதில்லை . புதிய இயற்கைச் சூழலுக்கு ஏற்ப ஆக்கப்படுவதற்காகவே அழிக்கப்படுகின்றன.பரிணாம வளர்ச்சியின் அடிப்படையே அதுதானே .சிவன் பொருளென்றால் பார்வதி ஆற்றல். சிவன் அறிவு என்றால் பார்வதி சக்தி. எப்படி பொருளும் ஆற்றலுமின்றி எதையும் ஆக்கமுடியதோ அது போல அறிவும் சக்தியுமின்றி  ஆக்கமுடியாது. அறிவும் சக்தியும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதையும், இனப்பெருக்கத்தின் மூல மந்திரத்தைச்   சுயமாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதையும்  மனிதர்களுக்கு அறிவுறுத்தவே அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளித்தார் போலும்.

இந்த அண்டத்தில் உயிர்களை உருவாக்கும் படைத்தல் தொழிலைச் செய்பவர் பிரம்மா ஆவார், ஒருவருடைய மனமே கற்பனை செய்கின்றது ,எண்ணுகின்றது ,சிந்திக்கின்றது, செயல்படுகின்றது. எதையொன்றையாவது படைக்கவேண்டும் என்றால் அதற்கான மூலம் மனமே. மனதின் படைப்புத்  திறனே பிரும்மம் ஆகின்றது. ஒன்றை உருவாக்குவதற்கு  திறமை மட்டும் போதாது அது தொடர்பான அறிவும் தேவை . பிரும்மாவும்  சரஸ்வதியும் இணையும் போது உருவாக்கம் மேம்படும் என்பதை உணர்த்துவது போல இருக்கின்றது  , அவ்வாறு படைக்கப்பட்டவற்றைப் பாதுகாக்கும் காத்தல் தொழிலைச் செய்பவர் விஷ்ணு.,. படைப்பால் பயனீட்டுவது என்பது பொருள் சேர்ப்பதும் .அதைப் பாதுகாப்பாக வைத்துக்  கொள்வதும் , பயனுள்ளவாறு செலவழிப்பதுமாகும். இது மனதின் ஆளுமைத் திறனோடு தொடர்புடையது. ஆளுமைத் திறன் என்பது நேர்மையாகப் பொருளீட்டுவது மட்டுமில்லை அதை  நேர்மையாகச் செலவழிப்பதுமாகும் .இனிய வாழ்க்கைக்கு  உகந்த இரகசியத்தை மனதறியுமாறு எடுத்துரைப்பது விஷ்ணுவும் லட்சுமியுமாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது மக்கள் நம்பிக்கை.. உலகம் தீமை செய்பவர்களால் அழிவதைக்காட்டிலும் .தீமை செய்பவர்களைக் கண்டும் காணாமல் இருப்பவர்களால்தான் விரைவாக அழிகின்றது என்ற உண்மையை உணர்த்துவது ஆளுமைத் திறனே . ஒவ்வொரு மனிதனும் சுமுதாயக் கேடுகளால் பாதிக்கப்படும்போது அதை எதிர்கத்  துணிவு கொள்வான் .அதையே விஷ்ணு அவதாரம் என்று குறிப்பிடுகின்றார்கள்

 மனமென்று  ஒன்று இருந்தால்தான் அங்கு படைப்புத் திறனும், ஆளுமைத் திறனும் இருக்கக் கூடும். தகுதியான  மனம், மனதின் படைப்புத் திறன், மனதின் ஆளுமைத் திறன் ஆகிய மூன்றும் இயல் வாழ்க்கையில் முதன்மைப் பொருளாகின்றன. இவற்றையே சான்றோர்கள் மும்மூர்த்திகளாக  உருவகப்படுத்தியுள்ளார்கள் . மனதின் மூலப்பொருட்கள் எண்ணங்கள் மட்டுமே.அவை நல்ல  எண்ணங்களாகவும்  இருக்கலாம் , தீய எண்ணங்களாகவும் இருக்கலாம் .வளத்தையும் நலத்தையும் கொடுக்கும் நல்ல  எண்ணங்களை தேவர்கள் என்றும் , அதைக் கெடுக்கும் தீய எண்ணங்களை அரக்கர்கள் என்றும் உருவாகப்படுத்தியுள்ளார்கள். .ஒவ்வொருவருடைய மனதிலும் இவ்விரு எண்ணங்களுக்கிடையே முடிவின்றி நடக்கும்  போராட்டத்தையே  தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் நடக்கும் போராட்டமாக சித்தரித்துள்ளார்கள். இந்த அடிப்படைக் கருத்துடன் தான் புராணங்களும் ,இதிகாசங்களும் கதையாக எழுதப்பட்டுள்ளன. அதன் நோக்கமே கருத்து வேறுபாடின்றி எல்லோரும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற உயரிய சிந்தனைதான்..  

No comments:

Post a Comment