Wednesday, September 2, 2020

god-18

 God-18

தேவர்கள் நல்லொழுக்கமும், நல்லெண்ணமும் கொண்டு ,ஆக்கச்  செயல்களைச்  செய்யும் இயல்புடைவார்களாக இருந்ததால்  அவர்களுக்கு   சொர்க்கம் கிடைத்தது அசுரர்கள் தீயவொழுக்கமும் ,தீய எண்ணமும் கொண்டு அழிவுச் செயல்களைச் செய்யும் இயல்புடைவார்களாக இருந்ததால் அவர்களுக்கு நரகமே கிடைத்தது.சொர்க்கமும், நரகமும் கொடுக்கப்படுவவ்தில்லை, அது வாழும் முறைக்கு ஏற்ப இயல்பாக அமைவது என்பதை அறிவுறுத்தவே தேவர்களும் அசுரர்களும் கற்பனைப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டார்கள் .

மனிதர்களின் நல்வாழ்விற்கு தேவ குணங்கள் உறுதியளிக்கின்றன .தனி மனிதனின்   முதன்மை நற்குணங்களான  அறநெறி ,அன்பு ,நேர்மை ,வாய்மை ஈதல்  போன்றவை முழு சமுதாயத்திற்கும் பாதுகாப்பாய்  விளங்கின. இவர்கள் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆண்டார்கள் .அதனால் மனம் எப்போதும் உயர்வான வாழ்க்கைக்கு வழிகாட்டியது    மனிதர்களின் தீய வாழ்க்கைக்கு அசுர குணங்கள் காரணமாயிருக்கின்றன. தனி மனிதனின்   முதன்மைத்  தீய  குணங்களான தீவினை ,வெறுப்பு ,பேராசை .பொய்மை , கயமை போன்றவை சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தன. இவர்கள் மனதால் ஆளப்படுபவர்களாக இருந்தார்கள் .மனம்போன போக்கிலே வாழ்ந்ததால் தானும் வாழாமல் பிறரை வாழவும்  விடாமல்  சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தனர்.

     வேண்டிய பொருளைப் பெறும் வழிமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் வேறுபட்டிருந்தது .விரும்பிய பொருளை உழைத்துப் பெறுவது தேவ குணம் அதை மற்றவரிடமிருந்து அபகரித்துக் கொள்வது அசுர குணம்,செய்யும் முயற்சியில் எவ்வளவு இடைத்தடைகள் வந்தாலும் அறநெறி பிறழாமை தேவகுணம். அறநெறி மீறுதலை இயல்பாகக் கொள்ளுதல் அசுரகுணம் .பொய் கூற அஞ்சுவது தேவ குணம், பொய் கூற அஞ்சாமை அசுரர் குணம் , எதையும் எதிர்பாராது பிறருக்கு உதவி செய்வது தேவ குணம். எதிர்பார்ப்புடன் செய்வது  அசுர குணம்.

ஒவ்வொரு மனிதனும் ஒரே மாதிரியான குணத்துடன் எல்லா  நேரங்களிலும் இருப்பதில்லை ..உணர்வுகளின் தாக்கத்தினால் மாற்றம் பெறுவதுண்டு .அதனால் தேவர்கள் சில சமயங்களில் அசுரர்களாகவும் , அசுரர்கள் சில சமயங்களில் தேவர்களாகவும் தாற்காலியமாக தோற்றம் தருவதுண்டு .சூழ்நிலைகளுக்கு ஏற்ப குணங்கள் மனதளவில் மாறிக்கொண்டே இருப்பதால் ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் தேவனும் ,அசுரனும் இருப்பதுண்டு. முழுமையான தேவனோ ,முழுமையான அசுரனோ மனிதருள்ளும்  இல்லை கடவுளிடமுமில்லை. கடவுளைக்  கடவுளாக மட்டுமே  அதாவது மனிதனுக்கு அப்பாற்பட்டவராக வர்ணிக்கும் போது  முழுமையான தேவனாகவும் , மனிதனாகக் கற்பிக்கும் போது தேவனாகவும் அசுரனாகவும் தெரிவிப்பது இதனால்தான், கடவுள்களும் சில சமயங்களில் கோபப்பட்டு சண்டை போட்டுக் கொள்வது அதைப் புலப்படுத்துவதாக இருக்கின்றது.

ஒரு நேர்மையான மனிதன் வறுமையால் அல்லலுற்றான் .வறுமையின் கொடுமை யைத் தாங்க முடியாமல் ஒரு நாள் ஒரு வருக்குச் சொந்தமான பொருளை எடுத்துக் கொள்ளலாமா என்று யோசித்தான் .அப்போது அவன் மனதிற்குள் ஒரு போராட்டம் நடக்கின்றது .திருடு அது தப்பில்லை  என்று ஒரு மனம் கத்துகின்றது திருடு ,அது தப்பில்லை என்று மற்றொரு மனம் கெஞ்சுகின்றது  ஏன் தயங்குகின்றாய் , வறுமையை விரட்ட  இது நல்ல சந்தர்ப்பம்  என்று ஒரு மனம் நச்சரிக்கும் .திருடாதே , அதனால் தண்டிக்கப்படுவாய் .ஒரு முறை கெட்ட பெயர் சம்பாதித்து விட்டால் அதை மாற்றுவது எளிதல்ல . வாழ்க்கை முழுதும் தொடரும் என மீண்டும் கெஞ்சுதல் தொடரும். போராட்டத்தின் முடிவு  மனிதன் தேவனாகவே இருக்கின்றானா அல்லது அசுரனாக இருக்கின்றானா என்பதைப் பொறுத்து அமைகின்றது .. மகாபாரதப் போர் என்பது 100 தீயவர்களுக்கும் 5 நல்லவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அது  மனதிற்கும்  மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே . சூரசம்காரம் மனதில் குடியிருக்கும் தீய எண்ணங்களை வேரறுக்க வேண்டும் என்பதைக் கூறுவதாக இருக்கின்றது .அசுரன் ஒருவன் தாங்கமுடியாத  கொடுமைகளைச் செய்தால்  அதை எதிர்க்க ஒரு சூரன் வருவான் என்ற உண்மையை சமுதாயத்திற்கு உணர்த்துவது புராணக் கதைகள். 

ஆக்கத்தில் அழிவுமுண்டு அழிவில் ஆக்கமுமுண்டு. மேட்டில் பள்ளமுண்டு ,பள்ளத்தில் மேடுமுண்டு ,இன்பத்தில் துன்பமுண்டு , துன்பத்தில் இன்பமுமுண்டு.பொருளுக்கு எதிர்ப்பொருளுண்டு ,எதிர்பொருளுக்குப் பொருளுமுண்டு . இறுதிச் சமநிலைக்கு இவை இரண்டும் தவிர்த்துக் கொள்ள முடியாதன.  என்பதை உலகிற்கு உணர்த்துவதே கடவுள் குடும்பம் 

No comments:

Post a Comment