Thursday, August 24, 2023

இயற்கை அறிவியல்-1

 

இயற்கை அறிவியல்-1

இயற்கையின் அறிவியல் இற்கையானது .நுண்பொருள் உலகமாகட்டும் அல்லது பேரியல் பொருள் உலகமாகட்டும்  எந்த நிகழ்வுகளையும்  திறமையான விஞ்ஞானி போல வெகு நுட்பமாகச் செயல்படுத்தும் ஆற்றல்மிக்கது. ஒவ்வொரு அணுவும், அடிப்படைத்துகளும் எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்ற நோக்கத்தோடு, வரையறுக்கப்பட்ட  கட்டுப்பாடோடு  செயல்பட அவற்ரின் சில தனித்த  பண்புகளே தீர்மானிக்கின்றன .ஒவ்வொரு உயிரின் இனப்பெருக்கமும் ,வளர்ச்சியும் இந்த பிரபஞ்சவிதியைத் தெரிவிக்கின்றன. புற வெளியிலிருந்து இடையூறுகள் இல்லாதவரை அவை ஒருபோதும தனக்குரிய செயல்பாடுகளை விட்டுவிட்டு பிற செயல்களில் ஈடுபடு வதில்லை. இடைஊறு ஏற்படுத்திவிட்டு இயற்கையை ஆராய் வதின் அதன் இயல்தன்மைகளை  அறிந்துகொள்ள முடிவதில்லை. நுண்பொருள் உலகில் கண்ணுக்குப் புலப்படாத அடிப்படைத்துகள்களின் இயற்பியலையும் , எல்லையற்ற விண்வெளியில் எட்டாத தொலைவு களில் எங்கும் சிதறிக்கிடக்கும் விண்ணுறுப்புக்களின் வளர்சிதை மாற்றங்களின் இயற்பியலையும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத நிலையே தொடர்கின்றது. புதியபுதிய நிகழ்வுகளைப் பதிவு செய்யும் ஒவ்வொரு முறையும்  அறிவியலில் திருத்தங்கள் செய்வது தவிர்க்கயியலாததாக இருக்கின்றது

    பிரபஞ்சவெளி ஒரு வரம்பிற்கு உட்பட்டதா இல்லை எல்லையற்றதா? தொடக்கமும் முடிவும் இல்லாத காலத்திற்கும் வெளிக்கும் உள்ளார்ந்த இயற்பியல் பண்புகள் ஏதேனும் இருக்கின்றதா ?  பிரபஞ்சத்தில் நிகழும் அனைத்திற்கும்  மூலம் அதில் அடங்கி யிருக்கும் ஆற்றலும் பொருளும் தான். ஆற்றலுக்குப் பொருளும் ,பொருளுக்கு ஆற்றலும் மூலம் என்றாலும் அவற்றின் மூலம்பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை .பிரபஞ்சம் தோன்றும் தொடக்கநிலையிலே  அதற்குத் தேவையான ஆற்றலும் பொருளும்  படைக்கப்பட்டன என்று  சொல்கின்றார்கள் . ஆற்றல் அடிப்படைத்துகள்களையும் ,அடைப்படைத்துகள்கள் அணுக்களையும் ,அணுக்கள் மூலக்கூறுகளையும் ,மூலக்கூறுகள் பொருட்களையும் ,விண்ணுறுப்புக்களையும்  உருவாக்குகின்றன

No comments:

Post a Comment