Wednesday, August 3, 2022

உராய்வு

 

 இயற்பியலார் ,வேதியியலார் , உலோகவியலார் ,பொறி ஞர்கள் ,மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் என அனைவரும் உராய்வில் அதிக அக்கறை காட்டுகின்றார்கள். .ஏனெனில் உராய்வு ஒரு இயந்திரத்தின் பயனுறு திறனைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. மேலும் உராய்வினால் தேய்மானம் ஏற்பட்டு பொருள் இழப்பும் ஏற்படுகின்றது. .அதனால் இயந்திர யுகம் தோன்றிய காலத்திலிருந்தே மக்கள் உராய்வைக் குறைக்கும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். 

       உராய்வு  நண்பனா இல்லை பகைவனா என்று கேட்டால்  சில சமயங்களில் நண்பனாகவும்  சில சமயங்களில் பகைவனாகவும் செயல்படுகின்றது என்று தான் கூறவேண்டியிருக்கின்றது .உராய்வின்றி நாம் நடக்கவே முடியாது .ஓட முடியாது. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் , தானியங்கு வண்டிகள் ,வேகத்தைக் குறைக்கவோ அல்லது தடுத்து நிறுத்தவோ இயலாது.நெய்யப்பட்ட துணியில் நூல் இழைகள் நழுவாது ஒன்றுடன் ஒன்று பற்றிக்கொண்டு இருக்கமுடியாது ..மரம் ஏற்கமுடியாது. பரத்தில் அறையப்பட்ட ஆணி உறுதியாக நிலைத்திருக்க முடியாது .எனவே  இயந்திரத்தின் இயக்கங்களினால் ஏற்படும் தேய்மானத்தால் உராய்வு வேண்டாம் என்று நினைத்தாலும் உராய்வு நம்முடைய இயல்பான வாழ்க்கைக்கு அவசியத் தேவையாகின்றது.

            இயந்திரப் பொறிகளில் விரும்பாத உராய்வைக் குறைத்துக் கொள்ள தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்கள் . தாழ்ந்த உராய்வைத் தரும் சிறப்புப் பொருட்களைப் பயன்படுத்தியோ அல்லது இடைப் பரப்புக்களை மசகிட்டோ இதைச் செய்யலாம் .மற்றொரு வழி வடிவமைப்பை தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொள்வதாகும்.எடுத்துக்காட்டாக நழுவுதலை சுழலிய க்கமாக   மாற்றிக் கொண்டால் உராய்வு பெருமளவு குறைகின்றது. 

தானியக்க இயந்திரப் பொறிகளில் ( கார். ஆலை இயந்திரங்கள். சுழலிகள் ) 20 சதவீதமும் .எஞ்சின்களால் இயங்கும் வான வூர்தி களில் 10 சதவீதமும் பீற்று வளி ஊர்திகளில் 1.8 முதல் 2 சதவீதமும் உராய்வினால் ஆற்றல் இழப்பு ஏற்படுகின்றது .ஆற்றல் தட்டுப்பாடு அதிகரித்து வரும் இந்நாளில் ஆற்றல் இழப்பு ஒரு  பிரச்சனையாக இருப்பினும் அது மிகப் பெரிய இடையூறு இல்லை .உராய்வினால் ஏற்படும் தேய்மானம் மற்றும் பழுதுகளே பேரிழப்பைத் தருகின்றன..உராய்வு அதிக வெப்பத்தையும் தருகின்றது. வெப்பத்தை நீக்கிக்கொள்ள முயற்சிகள் தேவை ப்படுகின்றன.

நாம் நம்முடைய இரு உள்ளங் கைகளையும் ஒட்டி  வைத்து உரசித் தேய்க்கும் போது வெப்பம் உண்டாவதை உணர்ந்திருக்கின்றோம் .. உராய்வை எதிர்ப்பதற்காகச் செய்யும் வேளையில்  ஒரு பகுதி வெப்பமாக வெளிப்படுகின்றது . சூட மரக்கட்டையாலான இரு மரத் துண்டுகளை உராய் வுறு மாறு  தொடர்ந்து தேய்த்தால் அவை தீப்பற்றிக் கொள்ளும் .ஆதிமனிதன் தீயைப் பற்றி தெரிந்து கொண்டது சிக்கி முக்கிக் கல்லை உரசித் தேய்க்கும் போது தீப்பொறி ஏற்படுவதைப் பார்த்துத்தான் .தீக்குச்சியை தீப்பெட்டியோடு உரசும் போது ஏற்படும் உராய்வு தரும் வெப்பம் தீக்குச்சியின் தலையில் உள்ள வேதிப்பொருளை எரியச் செய்கின்றது. 

           விமானம் ஓடு தளத்தில் தரையிறங்கும் போது அதன் வேகத்தை மட்டுப்படுத்த தன்னியக்கத் தடையூட்டுவார்கள் .அப்போது தன்னியக் கத் தடையூட்டும் பகுதிகள் சூடாக்கிச் சிவந்து ஜொலிக்கும் . தேய்மானம் சிறியளவாக இருப்பினும் இந்த உயர் வெப்பநிலை தன்னியக்க த் தடையூட்டும் பகுதியிலுள்ள மூலப்பொருட்களை ச் சிதைத்து விடுகின்றன. உலோகம் உருகி விட்டால்  அப்பகுதி உறுதித் தன்மையை இழந்து மென்மையாகிவிடுகின்றது .உயர் வெப்பநிலையால் சில பகுதிகள் தங்களுடைய இயல்புத் தன்மையை நிரந்தரமாக இழந்துவிடுவதும் உண்டு, இதனால் இயந்திர அதிர்வுகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் விபத்துக்களை ஏற்படுத்திவிட வாய்ய்புண்டு. உயர் வெப்பநிலையில் மசகு செயலிழந்து போகலாம் .அப்போது உராயும் பகுதிகள் அதிகமான தேய்மானத்திற்கு உட்படுகின்றது . தேய்மானமும் உராய்வினால் ஏற்படும் வெப்பமும் வானவூர்தி இயந்திரங்களின் செயல்திறனையும் பயன்தரு காலத்தையும் தீர்மானிக்கின்றன

No comments:

Post a Comment