நியூட்டன் விதிகள்- அறிவியலா இல்லை அறிவுரையா ?
- முனைவர் .மெ .மெய்யப்பன்
புறவிசையொன்று புரிதலின்றி எப்பொருளும்
புறவெளியில் நிலைமாற்றம் ஏற்பதில்லை
உரிமையுள்ள கல்வியின்றி எவரும்
ஊனமில்லா மாற்றம் காண்பதில்லை
ஓய்வு நிலையோ ஓடும் நிலையோ
நிலைமாற நிறையே தடையாகும்
வாழ்க்கையின் வளமோ வறமோ
தடம்மாற நின்மனமே காரணமாகும்
நியூட்டனின் முதல்விதி சொல்வது
அறிவியலா இல்லை அறிவுரையா?
விசையின்றி அசையாப் பொருட்களெல்லாம்
வினையின்றி ஓய்ந்திருக்கும் திறன் மறந்து
செயலின்றிச் சிதறிய மனிதர்களெல்லாம்
பயனின்றி வாழ்வாரே சமுதாயநலன் துறந்து
புறவிசையின்றி ஓடும் பொருட்களெல்லாம்
புறத்தடையின்றி புதுமாற்றமின்றி இயங்கும்
ஓய்வின்றி உழைக்கும் மனிதர்களெல்லாம்
இவ்வுலகை இயக்கும் இயந்திரங்களே
இயக்கமாற்றம் செய்கை இருக்குமட்டும்
இதுவே இவ்விதி கூறும் பொருளாகும்.
இடப்பெயர்ச்சி வீதம் விரைவேகமாகும்
வேகப்பெயர்ச்சி வீதம் முடுக்கமாகும்
தன்னார்வத்தின் வளர்ச்சி சுயமுயற்சியாகும்
முயற்சியின் பலன் முன்னேற்றமாகும்
புறவிசைகூட புகுவழி முடுக்கம் கூடும்
புறவிசை குறைய முடுக்கமும் குறையும்
ஊக்கம் மிகுந்தால் ஆக்கம் பிறக்கும்
நோக்கம் மறந்தால் அழிவே நிலைக்கும்
நியூட்டனின் இரண்டாம்விதி சொல்வது
அறிவியலா இல்லை அறிவுரையா?
ஒருநிறைப் பொருட்களில் புறவிசையும்
ஒன்றிய முடுக்கமும் நேர்விகிதத் தொடர்பில்
வேற்றுநிறைப் பொருட்களில் நிறையும்
ஒருவிசைமுடுக்கமும் எதிர்விகிதத் தொடர்பில்
கூடி வாழும் சமுதாயத்தில் மக்கள் நலனும்
மனித நேயமும் நேர்விகிதத் தொடர்பில்
முயற்சியில்லா செயல்கள் முடிக்கப்படுவதில்லை
முடிக்கப்படாத செயல்கள் பயன்தருவதில்லை.
நல்வாய்ப்பு முயற்சிக்கு நேர்விகிதத்தொடர்பில்
இதுவே இவ்விதி கூறும் பொருளாகும்.
விதையொன்று விளைநிலத்தில் விதைத்தால்
சுரையொன்று அங்கே முளைப்பதில்லை
வினையென்று செயலொன்று புரிந்தால்
விளைவின்றி காலம் கடப்பதில்லை
வினையிருந்தால் விளைவிருக்கும்
விளைவிருந்தால் வினையிருக்கும்
எறிந்த பந்து எம்பியே தீரும்
விழுந்ததும் எழுந்ததும் வினை எதிர்வினையாகும்
நியூட்டனின் மூன்றாம் விதி சொல்வது
அறிவியலா இல்லை அறிவுரையா?
செய்க செய்க தன்வினைச் செயல்களை
செய்யாது விடுக எதிர்வினைச் செயல்களை
முன்னதில் இல்லை தடையும் தடுமாற்றமும்
பின்னதில் உண்டு எதிர்ப்பும் ஏமாற்றமும்
வினைக்கும் எதிர்வினைக்கும் இணக்கம் வேண்டும்
மட்டையை நோக்கி பந்தை வீசினால்
அது ஒல்லும் வினையும் எதிர்வினையுமாகும்
மனிதனை நோக்கி பந்தை வீசினால்
அது ஒவ்வா வினையும் எதிர்வினையுமாகும்
இதுவே இவ்விதி கூறும் பொருளாகும்
- முனைவர் .மெ.மெய்யப்பன்
இயற்பியல் பேராசிரியர் (ஓய்வு)
No comments:
Post a Comment