Monday, February 28, 2011

arika iyarpial








வெப்பஞ் சார்ந்த விரிவாக்கம்-உள் ஆரம் குறையுமா
அல்லது கூடுமா ?




ஒரு செமீ நீளமுள்ள உலோகக் கம்பியைச் சூடூட்டி
வெப்பநிலையை உயர்த்தும் போது விரிவடைந்து
அதன் மொத்த நீளம் அதிகரிக்கின்றது ,இந்த வெப்பஞ்
சார்ந்த விரிவால் இரு பக்கமுள்ள முனைகள் சம
அளவில் இடம் பெயர்ந்து விடுகின்றன . ஒரு செமீ
நீளமுள்ள உலோகத்தாலான ஒரு வட்ட வளையத்
தட்டை சூடுபடுத்த அது எங்ஙனம் வெப்பஞ் சார்ந்த
விரிவாக்கத்திற்கு உட்படும் ? உள் ஆரம் குறையுமா
அல்லது கூடுமா ?

                                                      ****************

சமச்சீரான வட்ட வளையத் தட்டின் நிறை மையம்
அதன் உருவத்தின் எல்லைக்குள் இல்லை . இதன் பொது
மையமே அதன் நிறை மையமாக உள்ளது . வெப்பஞ்
சார்ந்த விரிவால் வட்டத் தட்டின் ஆரம் அதிகரிக்கும் .
இது வெப்பநிலை உயர்வு ,பொருளின் தன்மை
மற்றும் தொடக்கநிலை ஆரம் இவற்றிற்கு நேர்
விகிதத்தில் இருக்கிறது . எனவே வட்ட
வளையத் தட்டின் உள்ளாரமும் ,வெளி ஆரமும்
அதிகரிக்கின்றன என்றும் இந்த அதிகரிப்பு
உள்ளாரத்தைவிட வெளி ஆரத்திற்கு அதிகம் என்றும்
கூறலாம் .வண்டிச் சக்கரத்திற்கு வளையம் மாட்டும்
போது வளையத்தைச் சூடு படுத்தி விரிவடையச் செய்து
மாட்டுவார்கள் .குளிர்ந்து இறுகும் போது இது சக்கரத்தை
இறுக்கப் பற்றிக் கொள்கிறது .

,

Friday, February 25, 2011

Arika ariviyal

ஒட்டிய பாத்திரங்களை வெட்டியா பிரிப்பது ?




சில சமயங்களில் சிலர் ஒன்றுக்கொன்று நெருக்கமாக
ஒட்டிக் கொண்டிருக்கும் இரு திண்மப் பொருட்களைப்
பிரித்தெடுக்க போராடிக் கொண்டிருப்பார்கள் . ஒட்டிய
இரு பாத்திரங்கள் ,இறுகிய மூடிகளைப் பாதிப்பின்றி
பிரித்தெடுக்க முடியுமா ?

ஒட்டிய பாத்திரங்களை வெட்டியா பிரிப்பது ?

                                 **************


இரு பொருட்களில் ஒன்றை வெப்பஞ்சார்ந்த பெருக்கம்
அல்லது வெப்பஞ் சார்ந்தசுருக்கம் மூலம் விரிய அல்லது
சுருங்கச் செய்து பிரித்தெடுக்கலாம் .இரு பாத்திரங்கள்
எனில், வெளிப் பாத்திரத்தை சுடுநீர் மூலம் விரிவாக்கத்திற்கு உட்படுத்தல்லாம் .அல்லது உள் பாத்திரத்தை குளிர் நீர்
மூலம் வெப்பச் சுருக்கத்திற்கு உட்படுத்தலாம் .அப்போது
ஒரு சிறிய இடைவெளி ஒட்டிக்கொண்டிருக்கும் இரு
பரப்புகளுக்கிடையே ஏற்படுவதால் எளிதாகப்
பிரித்தெடுக்க முடிகிறது மூலப் பொருள்களுக்கு
அழிவாக்கமற்ற அணுகு முறையாக இது உள்ளது .

Wednesday, February 23, 2011

arika iyarppiyal

ஒத்த ஒலி அலைகள் சந்தித்தால்





ஒலி ஊடகத்தில் அலைகளாகப் பரவுகின்றது .அலை என்பது
கால முறைப்படி வழித்தடத்திலுள்ள ஊடகத் துகள்கள் அலைவுறுவதாகும்.இதனால் அலையில்
அடுத்தடுத்து அகடுகளும் முகடுகளும் மாறி மாறி
அமைந்திருக்கும் எனலாம்
ஒரே அதிர்வெண்ணும் அலைக்கட்டமும் கொண்ட இரு
ஒலி அலைகளை ஒத்த ஒலி அலைகள்(Coherent) என்பர் .
ஒத்த இரு ஒலி அலைகளின் முகடுகள் கூடும் போது
ஒலிச்செறிவு நான்கு மடங்கு அதிகரிக்கின்றது .
ஒன்றின் முகடும் மற்றதின் அகடும் கூடும்போது
ஒலிச் செறிவு சுழியாகி விடுகின்றது .இதை முறையே
ஆக்கக் குறுக்கீடு(Constructive interference) ,அழிவுக் குறுக்கீடு
(destructive interference)என்பர். அழிவுக் குறுகீட்டில்
கூடும் இரு ஒலி அலைகளின் ஆற்றல் என்னவானது ?

                                          ****************

அழிவுக்குறுகீட்டில் இரு அலைகளின் அலைவீச்சும்
இணைந்து சுழியாக்கப்படுகிறது .ஆனால் ஒலி,
அலையால் கடத்தி எடுத்துச் செல்லப்படும் திறன் ,
அதாவது புலச்செறிவு மற்றும் ஒலிஅலைத் தடை
(acoustic wave impedance) இவற்றின் பெருக்கல் பலன் ,
அலை மேற்பொருந்துவதினால் தீர்மானிக்க
முடிவதில்லை .

Z (1 ) என்பது காற்றில் ஒலிஅலைமைத் தடை என்றும்
Z (2 ) என்பது ஒலிவாங்கியின் ஒலிஅலைமைத் தடை
என்றும் கொண்டால் ,இவற்றின் தகவு
Z (1 )/Z (2 ) = 1 என்ற நிலையில் ஆற்றல் முழுதும்
கடத்தி எடுத்துச் செல்லப்படுகிறது. ஏதும்
எதிரொலிக்கப் படுவதில்லை என்று கொள்ளலாம்.
அழிவுக் குறுகீட்டில் Z (1 )/Z (2 ) = ௦ 0ஆகும். அதாவது
ஏதும் கடத்திச் எடுத்துச் செல்லப் படுவதில்லை.,
முழுதும் எதிரொலிக்கப் படுகிறது .





Arika ariviyal-

இசைக் கவைக்கு ஏன் இரு அதிர்வுறும் தண்டுப் புயங்கள் ?




ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுடன் அதிர்வுறுமாறு இசைக்
கவைகளை உற்பத்தி செய்ய முடியும் .இவை ஒலியியல்
தொடர்பான சோதனைகளில் பயன்படுத்தப் படுகின்றன .
இரு அதிர்வுறும் தண்டுகள் இருக்குமாறு இசைக் கவைகள்
உற்பத்தி செய்யப்படுவதேன் ?

                                         *****************

அதிர்வுறும் இசைக்கவையை நாம் தேவையான
இடத்திற்கு எடுத்துச்செல்கிறோம் . இந்த இடப்
பெயர்ச்சியினால் அதன் அதிர்வெண்ணில் மாற்றம்
ஏதும் ஏற்படக்கூடாது . அதாவது ஒரு முறை
கிளர்சியூட்டப்பட்ட இசைக்கவையின்
அதிர்வெண் மாறாதிருக்க வேண்டும் .
இசைக்கவை அதிர்வுறும் போது அதன் கணு 
கைபிடியின் சந்திப்பில் அமைகிறது . இது அதன்
ஈர்ப்பு மையமாகவும் உள்ளது . அதனால்
அந்த அமைப்பு இரு அதிர்வுத் தண்டுகளுடன்
நிலையாகத் தொடர்ந்து அதிர்வுறுகிறது.
ஒரேயொரு அதிர்வுத் தண்டு மட்டும்
இருக்குமெனில் ,ஈர்ப்பு மையம் கைப்பிடியின்
சந்திப்பில் அமைவதில்லை. அதனால் ஈர்ப்பு
மையம் அதிர்வுக்கு ஏற்ப அலைவுறுகிறது .
இது அமைப்பின் நிலைப்புத் தன்மையைக்
குறைத்து விடுகிறது .











Monday, February 21, 2011

eluthaatha kaditham-20

எழுதாத கடிதம்



கடந்த ஒரு வாரத்தில் ,தமிழ் நாட்டில் மட்டும் நடந்தவைகளாகச்
செய்தித் தாள்களில் வெளிவந்த தகவல்கள் .

1 .சென்னையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டை உடைத்து
     150 பவுன் நகை மற்றும் 50000 ருபாய் கொள்ளை .

2 கோயிலுக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் கத்தியைக்
   காட்டி சங்கிலியை சில மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு
   ஓடினர்.

3 . ஓடும் ரயிலில் பெண்கள் பெட்டியில் தனியாகப் பயணம்
    செய்த கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு ,ஓடும்
    வண்டியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு மரணம் .

4 . நகைக் கடையை உடைத்து 20 இலட்ச ருபாய்
     மதிப்புள்ள நகைகள் கொள்ளை .

5 . ATM மெஷினைக் கடத்தி அதிலுள்ள பணத்தை ஒரு
     மர்மக் கும்பல் கொள்ளை அடித்தனர்..

6 அரசு வங்கியின் லாக்கரை உடைத்து கொள்ளையடிக்க
   முயற்சி. அலாரம் அடித்ததால் பல கோடி மதிப்புள்ள
    நகைகள் தப்பித்தன .

7 வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக க் கூறி
   பலரிடமிருது இரண்டு கோடி வசூலித்து ,பணத்தை சுருட்டிக்
   கொண்டு ஒரு கும்பல் மறைந்தது .

8 .விமான நிலையத்தில் 1000 ருபாய் கள்ள நோட்டை
    வைத்திருந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடமிருந்து 60 இலட்ச
    ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

9 .நூதன முறையில் திருட்டு . ஓய்வூதியர் வங்கியிலிருந்து
    எடுத்த தன பணத்தை இழந்தார்.

10 . வட்டி கூடத் தருவதாகக் கூறி பலருடைய வைப்புத்
      தொகையை எடுத்துக்கொண்டு அலுவலகத்தை
      மூடியதால் பலர் ஏமாந்தனர்


செய்தித் தாள்களில் வெளிவந்தவை 10 சதவீதம் தான்.
90 சதவீதம் இழப்புகளை, பழக்கம் ,வழக்கம் காரணமாக்
மக்கள் ஏற்றுக் கொண்டு விடுவதால் வெளிவருவதில்லை .

கண்காணித்தல் ,கட்டுப்படுத்துதல் போன்ற வலிமையான
அமைப்புகள் இல்லாததால் தவறு செய்பவர்கள் இவற்றை
அனுகூலமாக எடுத்துக்கொண்டு விடுகிறார்கள் . இது
இன்றைக்கு நிலைப்பட்டுவிட்டது . ஒன்று நிலைப்பட்டு
விட்டால் அதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது
கூடுதல் சிக்கலானது. ஒவ்வொரு முறையும் கூடுதல்
சிக்கலானபிறகே பிரச்சினையை அலசுவது

என்பது ஒரு நல்ல நிர்வாகத்திற்கு அழகில்லை

நாட்டின் பாதுகாப்பு பற்றி முதல் அமைச்சர்கள்
மகாநாட்டில் பிரதமர் ஆலோசனை .
இதற்காக 1000 கோடியில் ஒரு திட்டம்

நல்ல மக்களும் நல்ல அரசும் !

Friday, February 18, 2011

Vanna vanna ennangal

விழித்தெழு



அப்போது இரவுகூட இல்லை

உலகில் நடப்பதையெல்லாம்

வெளிச்சமிட்டுக் காட்ட

ஆதவன் கூட அங்கிருந்தான் .

தனியே பெண்ணொருத்தி

தன பிள்ளையை இடுப்பிலேந்தி

ஆலயம் நோக்கிச் சென்றாள்



எங்கிருந்தோ ஒரு முரடன்

விரைந்து அருகில் வந்தான்

கழுத்தில் மின்னிய தங்கத் தாலியை

அறுத்துக் கொண்டு ஓடினான்

அலறிச் சத்தமிட்டும்

அவளுக்கு உதவ யாருமில்லை

அபலையானாள் அவள்



காவலனிடம் போய்ச் சொன்னாள்

வழக்குப் பதியக் காசு

திருடனைத் தேடக் காசு

ஆறு மாசம் அலைந்து அலைந்து

அடங்கியதுதான் மிச்சம்

காவலன் நினைத்தால்

கண்டுபிடிக்க முடியும்

கண்டுபிடித்தால் தலைவர்

பிறந்த நாளில் தங்கமில்லா

ஒரு பதக்கத்தை மார்பிலே

குத்தி சாதனை என்பார்கள்

திருடனோடு தொடர்பு கொண்டால்

திருட்டிலே ஒரு பங்கு

முன்னேறுவதற்கு இதைவிட

ஒரு நல்ல வழி எங்கே கிடைக்கப்போகிறது

முரடன் முன்னேறினான்

காவலனும் முன்னேறினான்

ஆனால் சமுதாயம் பின்னேறியதை

அவர்கள் அறியவில்லை

ஒரு முரடன் தான் இருந்தான்

ஒன்று இரண்டாகி ,இரண்டு நான்காகி

நான்கு நாற்பதாகி ,நாற்பது இப்போது

நாலு இலட்சமாகிவிட்டது .

மக்கள் முரடனாய் வாழ்வதுதான்

மக்களுக்குப் பாதுகாப்பு

என்ற எண்ணம் நிலைத்துவிட்டால்

சமுதாயமே முரடாகிவிடாதா

காவல் துறையே

நீதித் துறையே

இந்த இனிய

சமுதாயம் இறந்து வாழ்வதற்கு முன்

விழித்தெழு

நிமிர்ந்து நில்

நிமிர்த்து வை

அது உன் கடமை மட்டுமல்ல

அதுதான் உனக்குப் பெருமை

சாகாத சமுதாயத்திற்கும் பெருமை



Wednesday, February 16, 2011

Arika Iyarpial

மூடு பனிக் கால ஊது கொம்பு


மூடு பனி நிறைந்த கடல் பகுதியில் கப்பல் செல்லும்
போது வருவதை உணர்த்துவதற்கு ஊது கொம்புகளைப்  பயன்படுத்துவார்கள் .இது பெரும்பாலும் தாழ்ந்த சுரத்தில்
ஒலி எழுப்புவதாக அமைக்கப்பட்டிருக்கும் . ஏன் ?
                                           *******************
உயர் சுரத்தைவிட,தாழ்ந்த சுரங்கொண்ட ஒலி நெடுந்
தொலைவு வரை கேட்கிறது .ஒலி அலை ஊடுருவிச்
செல்லும் போது அதன் ஆற்றலில் ஓரளவு வெப்ப
ஆற்றலாக மாற்றம் பெறுகிறது .இது உயர்அதிர்வெண்,
ஒலி அலைகளுக்கு அதிகமாக இருக்கின்றது. கடலில்
கப்பல் நகர்ந்து செல்லும் போது ,விபத்துக்களைக்
தவிர்த்துக் கொள்ள செல்லும் திக்கை வேறு
படுத்துவதற்கு ஏதுவாக பரந்தவெளி தேவைப்படுகிறது .
அதனால் ஓரளவு நெடுந் தொலைவிற்கு அப்பால்
உள்ளவர்களும் கேட்கும்படி ஊது கொம்பு
தாழ்ந்த சுரம் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் .