Friday, July 6, 2012

Social awareness- Mind without fear

மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம் இது தினகரன் ஆகஸ்டு 5,2012 நாளிதழில் வெளிவந்த ஒரு சோகச் செய்தி.ஒரு பெண் 10 வகுப்புத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று விட்டாள். வருடத்தை வீணாகாமல் வென்று விட்டோம் இனி அடுத்த முறை தவறுகளைத் திருத்திக் கொண்டு அதிக மதிப்பெண்கள் வாங்குவோம் என்று எண்ணி அதற்காகச் சந்தோஷப்படாமல் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக தற்கொலை செய்து கொண்டாள். இது யாருடைய தவறு? புதிய உறவுகளுக்காக பிள்ளையைப் பெற்று மகளுக்காக பாசத்தோடு மகளை வளர்த்த பெற்றோர்களா? கல்வியோடு ஒழுக்கத்தையும் சேர்த்து கற்றுக் கொடுத்த ஆசிரியர்களா? கூடவே இருந்து உலகத்தைப் புரிந்து கொள்ள உதவிய தோழிகளா? நல்லவைகளை மறுத்துவிட்டு அல்லவைகளையே நல்லவை என்று மாறிவரும் சமுதாயமா? அல்லது உட்பகையாகிப் போன அவளுடைய மனமா? இதில் உண்மையில் எல்லோருக்கும் ஒரு பங்கிருக்கிறது. பிள்ளையின் பலத்தையும் பலவீனத்தையும் முதலில் தெரிந்து வைத்திருப்பது பெற்றோர்களே ஏனெனில் அவர்களே முதலில் அதிக நேரம் பிள்ளையோடு இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள் பலத்தை உற்சாகப் படுத்தி திறமையை மென்மேலும் வளர்ப்பதும் பிரச்சினைகளை எதிர்கொள்ள மனோதிடத்தை தூண்டுவதும் பலவீனத்தை மனதிலிருந்து அகற்றி அவ்வப்போது ஊக்குவிப்பதும் பெற்றோர்களே.அறிவுப்பூர்வமாக முடியாத பெற்றோர்கள் இதை அன்புப்பூர்வமாகச் செய்ய முடியும்.வாழ்கையில் எதிர்நீச்சல் போடுவதை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க மனதைப் பக்குவப்படுத்தவேண்டும் . பிள்ளைகளும் இப்பாடத்தை பெற்றோர்களைப் பார்த்துப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். உலகில் மனிதனைத் தவிர்த்து எல்லா விலங்கினங்களும் தங்கள் குட்டிகளுக்கு வாழ்க்கைப் போராட்டத்தை இப்படித்தான் கற்றுக் கொடுக்கின்றன. Animal Planet,Discovery Channel,National Geographic போன்ற டிவி சேனல்கள் தினமும் இதைத்தான் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.ஆசிரியர்கள் எப்போதும் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களையே நடத்திக் கொண்டிருக்காமல் வாழ்வியல் பற்றியும் சொல்ல வேண்டும் உலகில் சாதித்துக் காட்டியவர்கள்,தோல்வியை வெற்றியாக மாற்றி அமைத்தவர்கள்,உழைத்து முன்னேறியவர்கள்,விஞ்ஞானிகள் சான்றோர்கள் இவர்களைப் பற்றி இடையிடையே கூறி உற்சாகப் படுத்தினால் சோர்ந்த மனமும் சுறுசுறுப்படையுமே.பலவீனங்கள் மறைந்து பலம் தோன்றுமே. வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பார்க்க வேண்டும் அப்படிச் செய்ய மனப்பக்குவம் உள்ளவர்களால் மட்டுமே இயலும்.ஏனெனில் வெற்றிக்கும் சரி,தோல்விக்கும் சரி இதுதான் எல்கை என்று ஒன்று இல்லவே இல்லை வெற்றிக்குப் பிறகு தோல்வியும் வரலாம் தோல்விக்குப் பிறகு வெற்றியும் வரலாம்.ஒருவருடைய தோல்வியைக் கண்டு எள்ளி நகையாடுவது தவறு.ஏனெனில் இதனால் அவர் மனம் வேதனைப் பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளப்படலாம்.இனி மேல் வெற்றியைப் பாராட்டுங்கள் தோல்வியை கேவலமாகப் பேசி புண்படுத்தாதீர்கள்.தோல்விகளுக்குச் சமாதானம் செய்யவேண்டிய பொறுப்பு தோழிகளுக்கு உண்டு. கேவலமான,முறைகேடான,அநீதியான வெற்றிகளைப் பாராட்டும் சமுதாயம் இயல்பான,நேர்மையான தோல்விகளைப் பாராட்டுவதில்லை என்பது சமுதாயத்தின் பலவீனம் வெற்றியால் கற்றுக் கொள்வது ஏதுமில்லை. ஏனெனில் வெற்றி என்பது பெற்ற அறிவுக்குக் கிடைத்த பரிசு தோல்வி கற்றுக் கொடுப்பது ஏராளம்.ஏனெனில்,கற்ற கல்வியை இது செம்மைப் படுத்துகிறது. ஒவ்வொருவரும் தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் திடத்தைப் பெறவேண்டும். வெற்றிகளைத் தலைக்கும்,தோல்விகளை இதயத்திற்கும் எடுத்துச் செல்லும் பழக்கத்தை விட்டொழியுங்கள்.பழக்கம் வழக்கமானால் தற்கொலை எண்ணம் தலை தூக்குமோ?

No comments:

Post a Comment