Monday, July 2, 2012

Vinveliyil Ulaa

விண்வெளியில் உலா வுல்ப் ராயட் விண்மீன் (Wolf-Rayet star) சிரியசுக்கு கீழே O2(உமிகிரான் 2) என்றதோர் அரிய வகை விண்மீன் உள்ளது.வுல்ப் ராய்ட் என்று இதைக் குறிப்பிடுவர்.இதன் நிறமாலை பிற விண்மீன்களின் நிறமாலைகளிலிருந்து குறிப்பிடும் படியாக வேறுபட்டிருக்கிறது பொதுவாக ஒரு விண்மீனின் நிறமாலை தொடர் நிறமாலையாகவும் அதில் உட்கவர் வரிகளாகச் சில இருள் வரிகளும் பொதிந்திருக்கும் நீண்ட காலத்திற்கு விட்டுவிட்டுப் பிரகாசிக்கும் சில மாறொளிர் விண்மீன் களின் நிறமாலையில் பிரகாசமான உமிழ்வு வரிகளைக் காணமுடிகிறது.இது அந்த விண்மீன் அவ்வப்போது வெப்ப மிக்க வளிமங்களை தன்னைச் சுற்றியுள்ள குளிர்ந்த புற மண்டலங்களில் உமிழ ப்படுவதைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.வெப்ப மிக்க நிறமாலை வகையால் A அல்லது B அல்லது O வகையைச் சேர்ந்த விண்மீன் களின் நிறமாலை குறுகிய பிரகாசமான உமிழ்வு வரிகளைப் பெற்றிருக்கின்றது.பெரும்பாலான வற்றில் சிவப்பு முனையிலிருந்து சில இருள் வரிகள் பிரகாசமான ஒளி வரியால் அடுத்தமைந்து சூழ்ந்துள்ளன.ஒரு விண்மீன் எவ்வளவு வெப்ப மிக்கதாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு இந்த உமிழ்வு வரிகளும் பிரகாசமிக்கனவாக இருக்கின்றன. நிறமாலையால் வேறுபட்டிருக்கின்ற இந்த விண்மீன்கள் விரிந்து வீங்கிய புறமண்டலப் பகுதிகளைப் பெற்றுள்ளன .விரிந்து வீங்கிய புறமண்டலப் பகுதிகள் பிரகாசமான வெப்ப மிக்க விண்மீன்களின் ஒரு பொதுப் பண்பாகும்.பொதுவாக ஒரு விண்மீனின் உள்ளகமான சலன மண்டலத்தைச் சுற்றி ஒளி மண்டலம் (Photosphere) இருக்கும்.விண்மீனிலிருந்து நமக்குக் கிடைக்கும் ஒளியெல்லாம் இப்பகுதியிலிருந்து வருபவையே.இம்மண்டலத்தை அடுத்திருப்பது நிற மண்டலமாகும் (Chromosphere).ஒளி இதைக் கடந்து வெளியேறும் போது ,இதிலுள்ள அணுக்கள், சில அலைநீளமுள்ள ஒளியை உட்கவர்ந்து கொள்வதால் தொடர் நிறமாலையில் இருள் வரிகள் தோன்றுகின்றன.நிற மண்டலத்தை அடுத்து எதிர்ப் போக்கான ஒரு மண்டலப் பகுதி உள்ளது.இது வெப்ப மிக்க உட்புறப் பகுதியிலிருந்தும்,ஒளி மண்டலத்திலிருந்தும் வரும் ஒளியில் ஒரு சில அலைநீளமுள்ளவற்றை உட்கவர்ந்து பின்னர் அதை அப்படியே உமிழ்ந்து விடுகிறது இது எல்லாத் திசைகளிலும் பரவிச் செல்வதால் அந்த ஒளியின் ஒரு பகுதி மட்டுமே நம்மை வந்தடைகிறது . ஆனால் பிற அலைநீளமுள்ள ஒளி எதிர்ப் போக்கான மண்டலத்தை ஊடுருவிச் செல்வதால் ,நிறமாலையில் இருள் வரிகளாகக் காட்சி தருகின்றன. சூரியனின் உருவ அளவை ஒப்பிட அதன் நிற மண்டலமும் எதிர்ப் போக்கான மண்டலமும் மிகவும் சிறியவை .ஏறக்குறைய முட்டைக்கு இருக்கும் ஓட்டைப் போல .இதனால் செறிவற்ற உமிழ் வரிகளுடன் கூடிய நிறமாலை தோன்றுகிறது. இந்த நிறமாலையும் முழுச் சூரிய கிரகணத்தின் போது மட்டுமே எளிதாகக் காண முடியும் ஆனால் நிற மண்டலம் ,விண்மீனின் ஆரத்தோடு ஒப்பிடக் கூடிய வகையில் இருக்கும் நிலையில் எதிர்ப்போக்கான மண்டலத்திலிருந்து வரும் கதிர்வீச்சும் நிற மண்டலக் கதிர்வீச்சுக்கு இணையான செறிவுடன் இருக்கும்.அந் நிலையில் பிரகாசமான உமிழ்வரிகள் பதிவாகின்றன.அதனால் பருத்து வீங்கிய புறமண்டலத்தைக் கொண்ட விண்மீன்களின் நிறமாலையில் பிரகாசமிக்க உமிழ்வு வரிகள் காணப்படுகின்றன . வெப்ப மிக்க விண்மீன்கள் பருத்து வீங்கிய புறமண்டலத்தைப் பெற்றிருக்கின்றன எவ்வளவு வெப்ப மிக்கதாக ஒரு விண்மீன் இருக்கின்றதோ அந்த அளவிற்கு அது புறஊதாக் கதிர்களை அதிகம் உமிழும்.கட்புலனுக்கு உட்படாத ஆற்றல் மிக்க புறஊதாக் கதிர்கள். விண்மீன்களின் வளி மண்டலத்திலுள்ள அணுக்களின் மீது வலிமையாக கதிர்வீச்சு அழுத்தத்தை விளைவித்து ,ஈர்ப்புக்கு எதிராகச் செயல்பட வைக்கிறது அதனால் அவை புறப் பரப்பை விட்டு வெளியேறி வெகு உயரம் பரவிச் செல்கிறது விண்மீனின் இந்த பருத்து வீங்கிய புற மண்டலம் இளம் விண்மீன்களை உருவாக்கும் முயற்ச்சியை மேற்கொள்கிறது சில விஞ்ஞானிகள் விண்மீனின் விரைவான தற்சுழற்சி இந்த பருத்து வீங்கிய புற மண்டலத்தின் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கிறது என்று கூறுவார்கள். உண்மையில் வெப்ப மிக்க விண்மீன்கள் ஒரு அச்சைப் பற்றி விரைவாகச் சுழலும் தன்மை கொண்டுள்ளன. மைய விலகு விசை(centrifugal force) அணுக்களின் எடையைக் கணிசமாகக் குறைப்பதால் அவை விலகிச் செல்கின்றன என்றும் இவர்கள் விளக்கம் கூறுவார்கள்.இது உண்மையானால் பருத்து வீங்கும் புற மண்டலம் விண்மீனின் நடுவரைக் கோட்டுப் பகுதியில் அதிகமாக இருக்கவேண்டும் அதாவது கோள வடிவமான விண்மீனைச் சுற்றி சனி வளையம் போல இப் புறமண்டலம் விரிந்து இருக்கும் என்று கூறலாம்.பருத்து வீங்கிய புற மண்டலத்தின் பரிமாணமும்,நிறமாலை வரிகளின் பிரகாசமும் விண்மீனின் வெப்ப நிலை மற்றும் சுழற்சி வேகம் இவற்றை மட்டுமின்றி விண்மீனின் பிரகாசம் மற்றும் ஈர்ப்பு இவற்றையும் சார்ந்திருக்கிறது. எப்படி பூமி ஒரு வளி மண்டலத்தை நிலை நிறுத்தி வைத்திருக்கிறதோ அதைப் போல ஒரு விண்மீன் பருத்து வீங்கிய புற மண்டலத்தை கட்டுபடுத்தி உள்ளது.ஆனால் இதன் நிறமாலை சற்று வேறுபட்டுள்ளது . மெல்லிய தனித்த வரிகளுடன் ஆன நிறமாலை அகன்ற பிரகாசமான தனித்த பட்டைகளுடன் (bands) ஆனதாக மாற்றம் பெறுகிறது. அதனருகிலேயே சில இருள் வரிகளுடன் சில சமயங்களில் இல்லாமலும் உள்ளன. இருள் வரிகள் இருப்பின் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரகாசமான அகன்ற பட்டைகளுக்கு அடுத்தும் நிறமாலையின் ஊதா முனைப்பக்கம் பெயர்ச்சி பெற்றும் இருக்கும். நிறமாலையின் மையப் பகுதி பொதுவாக ஒரு வேதித் தனிமத்தின் நிறமாலை வரியாக பெயர்ச்சியில்லாமால் இயல்பான அமைவிடத்தில் இருக்கும். டாப்ளர் விளைவு காரணமாக இருள் வரிகள் பெயர்ச்சியுற்று இருப்பின் அது விண்மீன் வளி மண்டலத்தில் இருக்கும் வளிமத்தின் இயக்கத்தைச் சுட்டும். அகன்ற உமிழ் வரிகள் பட்டைகளுக்கு அருகாமையில் இருக்கும் இருள் வரிகள் 2000 கிமீ /வி என்ற வேகத்தில் இயங்கும் வளிமத்தால் ஏற்படுகின்றன.

No comments:

Post a Comment