Wednesday, July 4, 2012

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் அலுமினியம் கண்டுபிடிப்பு : அலுமினியத்தை ஏழைகளின் உலோகம் என்றும் களிமண் தந்த வெள்ளி என்றும் வர்ணிப்பார்கள். களிமண்,செங்கல் போன்றவைகள் எல்லாம் அலுமினியம் சிலிகேட் என்ற சேர்மானப் பொருள்தான்.அலுமினியக் கலவைப் பொருள் என்று தெரியாமலேயே இப் பொருட்களை எல்லாம் மக்கள் நெடுங் காலமாய் பயன்படுத்தி வந்துள்ளனர். அலுமினியத்தின் முக்கியமான கனிமம் பாக்சைட் ஆகும். இதில் இரும்பு ஆக்சைடும்,டைட்டானியமும்,சிலிகானும் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன. பாக்சைட்டைத் தூய்மைப் படுத்தி Al2O3 என்று குறிப்பிடப்படுகின்ற அலுமினாவைப் பெற்று மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பெறலாம். பூமியில் தனிமங்களின் செழிப்பு எனும் வரிசையில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் 8.1 என்ற மதிப்புடன் உள்ளது. அலுமினியத்தின் பிற கனிமங்கள் கிப்சைட், டையாஸ்போர்,பெல்ஸ்பார் (felspar) கிரையோசைட் போன்றவைகளாகும்.நவரத்தினங்களில் மரகதம் (Ruby) செந்நிறக் கல் (Garnet ),நீலக்கல்(Sapphier),பசுமை கலந்த நீலக் கல் (Turquoise) போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாக சேர்ந்திருக்கிறது.தங்கம்,வெள்ளி போல தனித் தனிமமாக இயற்கையில் காணப்படவில்லை. பொட்டாஷ் ஆலம் (Potash alum) என்பது பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டாகும்.இதைப் பழங்காலத்தில் கிரேக்கர்களும்,ரோமானியர்களும் வயிற்றுப் போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும்,சாயப் பட்டறைகளில் அறிகாரமாகவும் பயன்படுத்தி வந்தனர். இதில் உள்ள உப்பு மூலத்தை அலுமினி என அழைத்தனர்.1787 ல் லவாய்சியர் இது அதுநாள் வரை அறியப்படாத ஓர் உலோகத்தின் ஆக்சைடு என்று கூறினார்.1827 ல் ஜெர்மனி நாட்டு வேதியியலாரான பெடரிக் வோலர் (Friedrick Wohler) இதிலிருந்து தூய அலுமினியத்தைப் பிரித்தெடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஆர்ஸ்டடு (Oersted) என்பார் அலுமினியத்தைப் பிரித்தெடுத்திருந்தாலும் அது மிகவும் தூய்மை யற்றதாக இருந்தது.முதலில் டேவி என்பார் இதற்கு அலுமியம் (Alumiyam ) என்றே பெயரிட்டார். இது பின்னர் அலுமினியம் என்று மாற்றம் செய்யப்பட்டது. பிரித்தெடுத்தல்
அலுமினியம் களிமண்ணிலிருந்தாலும் பொருளாதாரச் சிக்கன வலிமுரையினால் அதைப் பிரித்தெடுக்க முடியாது.எனவே அலுமினியம் செறிவுற்றுள்ள அதன் கனிமங்களிலிருந்தே அலுமினியத்தைப் பெற வேண்டியிருக்கிறது. இதற்குப் பேயர் வழிமுறை பரவலாகப் பயன் படுகிறது. பாக்சைட்டிலிருந்து அலுமினியத்தின் மூலமான அலுமினாவைப் பெறலாம். பின்னர் மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பிரித்தெடுக்கலாம்.

No comments:

Post a Comment