விண்வெளியில் உலா
காமா(γ) பிகாசி 333 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.83 தோற்ற அல்லது -2.22 சார்பிலா ஒளிபொலிவெண்ணுடன் உள்ளது. இதை அரேபியர்கள் அல்ஜினிப் என அழைக்கின்றனர். இதையும்,இதனருகில் உள்ள அல்பராட்ஸ் என்ற ஆல்பா(α) ஆன்ட்ரேமெடேயையும் பொதுவாக நம்மவர்கள் உத்திரட்டாதி என
அழைக்கின்றார்கள்.எனிப் எனப் பெயரிடப்பட்ட எப்சிலான்(ε) பிகாசி இவ்வட்டார விண்மீன்களுள் மிக நெடுந்தொலைவில் 673 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. இதன் தோற்ற மற்றும் சார்பிலா ஒளிப் பொலிவெண்கள் முறையே 2.38, -4.19 ஆகும்.இது அகன்ற இடைவெளியுடன் கூடிய ஓர் இரட்டை விண்மீன். இதில் தோற்ற ஒளிப் பொலிவெண் 2.4 உடைய மஞ்சள் நிறங் கொண்ட மாபெரும் விண்மீனும் தோற்ற ஒளிப் பொலிவெண் 8 உடைய தொலை நோக்கியால் மட்டுமே காண முடியக் கூடிய ஒரு சிறிய விண்மீனும் உள்ளது.இது பிகாசி வட்டார விண்மீன் கூட்டத்தின் உருவக வடிவான பறக்கும் குதிரையின் முகப் பகுதியில் அமைந்துள்ளது
அரேபிய மொழியில் மூக்கு என்ற சொல்லிலிருந்து எனிப் என்ற பெயர் வருவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் 215 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஈட்டா (η) பிகாசியை மாடார் என்றும் 209 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள சீட்டா (ζ) பிகாசியை ஹாமெல் என்றும் 117 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள மீயூ (μ) பிகாசியை சாடல்பாரி என்றும் 97 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள தீட்டா (θ) பிகாசியை பிஹாம் என்றும் அழைக்கின்றார்கள் இவற்றின் தோற்ற ஒளிப் பொலிவெண்கள் 3-4 என்ற நெடுக்கையில் உள்ளது.இக் கூட்டத்தில் மிக அருகாமையில் இருக்கும் விண்மீன் அயோட்டாதா பிகாசியாகும். இது 38 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது
பிகாசி வட்டார விண்மீன் கூட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் அதிலுள்ள NGC 7080 அல்லது M.15 என்று குறிப்பிடப்படுகின்ற பிரகாசமான கோளகக் கொத்து விண்மீன் கூட்டமாகும் .சாதாரணத் தொலை நோக்கியால் பார்க்கும் போது M.15 பிரகாசமான,வட்ட வடிவமான நெபுலா போன்று ஒரு மேகம் போலக் காணப்பட்டது. அதன் புறப்பரப்பு பிரகாசம் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறாக இருப்பதையும்,மைய உள்ளகம் மிகவும் பிரகாசமாக இருப்பதையும் விளிம்பு நோக்கிச் செல்லச் செல்ல பிரகாசம் குறைவதையும் கண்டு இது ஒரு நெபுலா இல்லை என்பதை முடிவு செய்தனர்.உணர்வு நுட்பம் மிக்க தொலை நோக்கியால் இதைப் பார்த்த போது இக் கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் பல தனி விண்மீன்களாகப் பிரிந்து தெரிந்தன.விளிம்போர விண்மீன்கள் மட்டுமே இப்படிப் பகுக்கப்பட்டுத் தோன்றின.ஆனால் மையத்திலுள்ள விண்மீன்கள் அடர்த்தியாகச் செறிவுற்றுள்ளதால் அவற்றின் மொத்தப் பிரகாசத்தை மட்டுமே உணர முடிந்தது.
இக் கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் சுமார் 40,௦௦௦ ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. மிக அதிகத் தொலைவுகளில் இனமறியப்பட்ட கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் இதுவும் ஒன்று. விண்வெளியில் இதன் கோண விட்டம் 15 மினிட் ஆகும். இது ஏறக்குறைய பாதியளவே உள்ள முழு நிலவுக்குச் சமம் .இதிலிருந்து அந்த கோளகக் கொத்து விண்மீன் கூட்டத்தின் உண்மையான விட்டத்தை 165 ஒளி ஆண்டுகள் என மதிப்பிட்டுள்ளனர்.இக் கூட்டத்தில் சுமார் ஆறு மில்லியன் விண்மீன்கள் இருக்கலாம் என அறிந்துள்ளனர்.
இக் கூட்டத்திலுள்ள ஒரு விண்மீனின் குடும்பத்திலுள்ள ஒரு கோளில் உயரின உயிரினம் வாழக் கூடிய சூழல் இருக்கலாம் என்றும் அப்படி இருக்குமானால் அங்குள்ள உயிரனங்களுக்கு இந்த வானம் வெகு வித்தியாசமாகத் தோன்றும். என்றும் கூறுகின்றார்கள் அங்கு நம்முடைய வெள்ளியை
விடப் பல ஆயிரம் மடங்கு பிரகாசமான விண்மீன்கள் அங்குமிங்கும் நெருக்கமாக மினுமினுத்துக் கொண்டிருப்பதைக் காணமுடியும்.