Sunday, July 9, 2017

about meteors

எரிக்கல்லால் பூமிக்கு ஆபத்தா ?    
பூமியின் இயற்கைச் சூழலை  மாசுபடுத்தி சாகாத சமுதாயத்தின் உயிர் வாழ்க்கைக்கு மனிதர்களால் ஏற்படும் ஆபத்துகள் பல - தாறுமாறான பருவ மாற்றங்கள்,.தாங்கமுடியாத வெப்பம், கன மழையும் வெள்ளப் பெருக்கும் , நஞ்சாகும் சுவாசக் காற்று போன்ற ஆபத்துகள் ஒட்டு மொத்த உலகையே அச்சப் படுத்தி வருகின்றன. . பூமிக்கு பூமியைப் படைத்த இயற்கையாலும் அவ்வப்போது ஆபத்துகள் வருவதுண்டு.- நில மண்டலத்தில்  நில நடுக்கம்,.நீர் மண்டலத்தில் சுனாமி, வளி மண்டலத்தில்  புயல், சூறாவளி  போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஏவுகணைத் தாக்குதல் போல  விண் வெளியிலிருந்து பூமியைத் தாக்கும் விண்கற்களும் இயற்கை தரும் ஆபத்துகளே. பூமியானது புறவெளியிலிருந்து தொடர்ந்து விண்கற்களால் தாக்கப்பட்டாலும் பெரும்பாலான கற்கள் அதிருஷ்ட வசமாக மிகவும் சிறியனவாக இருப்பதால் அவை பூமியின் பல அடுக்கு வளிமண்டலத்தை கடக்கும் போது உராய்வின் காரணமாகத் தீப்பற்றி எரிந்து காற்றோடு கலந்து விடுகின்றன . இருப்பினும் மிக அரிதாக பெரிய விண்கற்களும் பூமியில் விழுவதுண்டு. இவை பூமியின் ஈர்ப்பினால்  பெறும் வேக முடுக்கத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வெடித்துச் சிதறிப் போவதுமுண்டு . வெகு சிலவே எரிந்தது போக எஞ்சிய பகுதி பூமியில் மோதுவதுண்டு. அப்போது அவை மிகப் பெரிய  பள்ளத்தை பூமியின் மேற்பரப்பில் ஏற்படுத்துகின்றன.. அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் காணப்படும் மிகப் பெரிய பள்ளம் அங்கு விண்கல் விழுந்ததின் சான்றாக இருக்கின்றது. இப்  பள்ளத்தின் விட்டம் 12 கிமீ ஆழம் 170 மீ ஆக உள்ளது. இது 20000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டிருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர்.
விண்வெளியிலிருந்து எரிகற்கள் பூமியின் வளிமண்டலத்தை ஊடுருவும் போது உராய்வின் காரணமாகப் பெருமளவு வெப்பத்தைப் பெறுகின்றன . இதனால் அவை வளி மண்டலத்தைக் கடக்கும் பொழுதே எரிந்து சாம்பலாகி விடுகின்றது. வளி மண்டலம் மட்டும் இல்லாது போனால் இந்த விண்கற்கள் அங்குமிங்குமாய் பூமியில் விழும். நிலவில் அப்படி விழுந்ததனால்தான் அதன் முகப்பு பரப்பு மேடு பள்ளமாக ஆகி நமக்கு களங்கமாகத் தோன்றுகின்றது. அவற்றின் இயக்க வேகம் மிக அதிகமாக இருப்பதால் சிறிய கல் கூட பெரும் சேதத்தை உண்டாக்கி விடுகின்றது. விண்வெளியில் இயங்கும் விண்கலங்கள் இதன் பாதையில் குறுக்கிடும் போது  சத்தமில்லாமல் துளை போட்டு விடுகின்றன இதனால்  விண்கற்கள் பாதுகாப்பான விண்வழிப் பயணத்திற்குத் ஒரு தடையாக இருக்கின்றது.
போராட்டக்காரர்கள் போல பூமியை நோக்கி எரிகல்லை வீசுபவர்கள் யார்? இந்தக் கற்கள் எங்கிருந்து வருகின்றன? விண்வெளியில் கல் குவாரி எங்காவது இருக்கின்றதா என்ன?
சூரிய மண்டலத்தில் மிகப் பிரும்மாண்டமான ஒரு கல் குவாரி இருக்கின்றது. அது செவ்வாய்க்கும் வியாழனுக்கு இடையில் சூரியனைச் சுற்றி அமைந்திருக்கின்றது .இதை விண்கல் மண்டலம் (asteroid belt ) என்று குறிப்பிடுகின்றார்கள்.
உண்மையில் சூரிய மண்டலம் உருவான போது இந்த விண்கல் மண்டலம் உருவானதில்லை .அந்த இடத்தில் ஒரு கோள் இருந்திருக்க வேண்டும் என்றும் அது ஏதோ ஒரு சில காரணங்களால் வெடித்துச் சிதறி விண்கல்மண்டலமாக மாறியிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
இதில் 1  முதல் 1000  கி.மீ தடிப்புள்ள பல கோடிக்கணக்கான கற்கள் பல வேகங்களில் அகலமான சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன. இவை   பாறை, உறைந்த பனி, வளிமம் இவற்றால் ஆனது. பொதுவாக ஒரு விண்கல் பூமியை நோக்கி விரையும் போது அதன் வேகம் 12  கி மீ / வினாடி என்ற அளவில் இருக்கும். இது பூமியின் ஈர்ப்பிலிருந்து ஒரு பொருள் விடுபட்டு வெளியேறிச் செல்லத் தேவையான குறைந்த பட்ச வேகமாகும்.. ஈர்ப்பினால்  பெறும் வேக முடுக்கத்தினால்  இதன் வேகம் பூமியை எட்டும் போது 32 முதல் 95  கிமீ வரை அதிகரிக்கின்றது. . .

இவை பூமியில் மோதும் போது திடீரென விளையும் வெடிச் சத்தம் அதிர்ச்சி அலைகைளை ஏற்படுத்துகின்றன.. ஒலியின் வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்லும் சூப்பர் சானிக் விமானங்கள் சிறிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகின்றன . அந்த விமானம் மேலே பறக்கும் போது கீழேயுள்ள வீடுகளின் சுவர்களில் வெடிப்புகளை ஏற்படுத்தலாம், கண்ணாடி ஜன்னல்கள் நொருங்கிப் போய்விடலாம் பெரிய அளவிலான அதிர்ச்சி அலைகள் பல அடுக்கு மாடிக்கு கட்டடங்களைக் கூட தரை மட்டமாக்கிவிடும் வலிமையானவை.
ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 டன் அளவிற்கு பூமியில் எரிகற்கள் விழுகின்றன  என்று மதிப்பிட்டிருக்கின்றார்கள் இவை சிறிய துகளிலிருந்து பெரிய பாறை வரை இருக்கின்றன . சிறியவை  சில மீட்டர் தடிப்புள்ளன பெரியவை சில கிலோமீட்டர் தடிப்புள்ளன.. பூமியின் வளிமண்டலத்தை ஊடுவிச் செல்லும் போது உராய்வினால்   எரிந்துகொண்டே கீழே விழுகின்றன. இதை இரவு நேரத்தில் வானத்தில் பார்க்கலாம் பகலில் சூரிய வெளிச்சத்தில் இதை பார்க்கமுடிவதில்லை.
. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது  500  எரிகற்கள் சற்று பெரியனவாக இருக்கும் என்றும் இப்படி விழும் பெரிய விண்கற்கள் பூமியில் புதைந்து விடுகின்றன என்றும். 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை அளவில் பெரிய விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு இருக்கின்றது என்றும் கணக்கிட்டிருக்கின்றார்கள். ஏனெனில் விண்கல் மண்டலத்தில் சிறியதும் பெரியதுமாக பல கோடிக்கணக்கான கற்கள் இன்னும் இருக்கின்றன. இவை தடம் மாறிச் செல்லும் போது சுற்றுப் பாதையிலிருந்து விலகி சூரியனை நோக்கிச் செல்கின்றன. வழியில் பூமி குறுக்கிடும் போது திசை மாறி பூமியில் விழுகின்றன.
ஏறக்குறைய 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் டைனோசர் போன்ற ராட்சச விலங்கினங்கள் இருந்தன. .இவை இன்றும் பரிணாம வளர்ச்சி பெற்று நம்மோடு உயிர் வாழ்ந்திருந்தால் நம்முடைய  வாழ்க்கைக்கு பெரும் இடையூறாக இருக்கும்.
 இப்போது மெக்சிகோ நாடாக இருக்கும் பகுதியில்  நிலத்தை யொட்டியுள்ள கடல் பகுதியில் அப்போது 10 கி மீ தடிப்புள்ள ஒரு பெரிய விண்கல் ஒன்று விழுந்து பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றும் அது சுனாமியாக உருவெடுத்து எங்கும் பரவி நிலத்தில் வாழ்ந்து வந்த டைனோசர் போன்ற ராட்சச விலங்கினங்களை முழுதுமாக அழித்து விட்டன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். அதற்கு இப்போது ஆதாரமாக இருப்பது அவ்விடத்தில் உள்ள விண்கல் தாக்கிய வடு மட்டுமே. 100 கிமீ அகலமும் 12 கிமீ ஆழமும் உள்ள இந்தப் பள்ளம் மிகப் பெரிய விண்கல்லைத் தவிர வேறொன்றினால் ஏற்படுத்த முடியாது..கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலை 1 கிமீ உயரத்திற்கு அதிகமாக  இருந்திருக்க வேண்டும் என்றும் இது எங்கும் பரவி நிலத்திலுள்ள டைனோசர்களை முழுவதுமாக அழித்து விட்டன என்றும்  காணாமல் போன ராட்சச விலங்கினங்களுக்கு விளக்கம்  கொடுத்திருக்கின்றார்கள்.
அரிசோனாவில் விழுந்ததைப்போல  இந்தியாவில் பெரிய விண்கல் விழுந்திருக்கின்றதா என்று கேட்டால் அதற்கு விண்கல்  ஆராய்ச்சியாளர்கள்  அப்படி விழுந்ததற்கான வடுக்களை சுட்டிக்காட்டு கின்றார்கள்
Lonar Crater Lake.jpg
 .இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில் லோனார் என்ற இடத்தில் வட்ட வடிவில் மிகப் பெரிய ஏரி யும்அதற்கு மிக அருகில் அதைப்போல ஆனால் சிறிய எரியும் உள்ளது. பெரிய ஏரியின் விட்டம் சராசரியாக 1 . 5 கி மீ ஆழம் ஏறக்குறைய 140  மீ.50 ௦௦௦ - 60000 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய ஏரிகள் ஒன்று விழுந்ததினால் எது உண்டாகியிருக்கலாமாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றர்மல் .இது விழும் போது தெறித்து 700 மற்ற தள்ளி விழுந்த சிறு துண்டு சிறிய பாலத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள். இதை இன்றைக்கு அம்பர் ஏரி (Ambar lake) என்றும் சோட்டா லோனார் என்றும் அப்பகுதி மக்கள் அழைக்கின்றார்கள்.
   

No comments:

Post a Comment