Tuesday, July 11, 2017

migration

உயிரினங்களின் குழுப்பெயர்ச்சிப் பயணம்
ஒரு நாட்டில் உள்நாட்டுக் கிளர்ச்சி ஏற்படும் போது பலர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறுவார்கள். பொதுவாக அவர்கள் அண்டை நாடுகளுக்கு கூட்டம் கூட்டமாக நடந்து சென்று தஞ்சமடைவார்கள். .இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பல லட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்தார்கள். இது தான் வரலாற்றில் அதிக மக்கள் புலம் பெயர்ந்த நிகழ்வாகும்.
பொதுவாக மனிதர்கள் குழுவாக  நெடுந்தூரம் புலம் பெயர்வதை பழக்கமாகக் கொண்டிருக்கவில்லை.. ஆனால் பல விலங்கினங்களும், பறவைகளும்,கடல் வாழ் உயிரினங்களும் புலம் பெயர்ந்து வாழ்வதையே வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ளன. பருவ கால மாற்றம் போல ஒவ்வோர் ஆண்டும் இது திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்படுகின்றது   . 
உயிரினங்களின் நெடுந்தூரப் பயணத்திற்கு பொதுவாக மூன்று  காரணங்கள் இருக்கின்றன. முக்கியமானது உணவு மற்றும் நீர் கிடைக்குமிடங்களை  நோக்கிச் செல்லுதல், மற்றொன்று இனச்சேர்க்கை மற்றும் இனப்பெருக்கம் செய்ய தகுந்த இடம் தேடுதல், இளம் குட்டிகளையும் குஞ்சுகளையும் பாதுகாப்பாக வளர்த்தல், இயல்பான  வசிப்பிடத்தில் உள்ள மிகையான குளிர் அல்லது வெப்பத்தை தவிர்த்துக் கொள்ளுதல் போன்ற காரணங்களுக்காக இவை குழுப்பெயர்வை  மேற்கொள்கின்றன  .
ஆப்ரிக்காவில் காட்டெருமைகள்,மாடுகள் மற்றும் வரிக்குதிரைகள் உணவு குடிநீர் தேடி ஒவ்வோர் ஆண்டும் பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு பல நாடுகளைக் கடந்து செல்கின்றன. இவைகள் எப்போதும் குழுவாகப் பயணிப்பதால் வேட்டை விலங்குகளிடமிருந்து ஒரு பாதுகாப்பு கிடைக்கின்றது.. எனினும் புலம் பெயர்ப்பின் கூட்டத்தை விட்டு விலகி தனித்து மேயும் விலங்குகளும்,காயம்பட்டு  விரைந்து செல்ல முடியாத விலங்குகளும், அனுபவமில்லாத இளம்  குட்டிகளும் வேட்டை விலங்குகளுக்கு எளிதாக இரையாகி விடுகின்றன. புதிய சுற்றுச்சூழலுக்கு போதிய அனுபவம் இல்லாமையால் அவைகள் எளிதில் அப்பகுதி வேட்டை விலங்குகளுக்கு இரையாகிப் போகின்றன . கடுமையான குளிர் மற்றும் வெப்ப நிலை மாற்றங்கள்,உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற காரணங்களும் வழியில் ஏற்படும் உயிர் இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. கடந்து செல்லும் பாதையில் இவைகள் முதலைகள் நிறைந்த ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டி இருக்கும்..அப்போது இந்த நாடோடி விலங்குகள் ஆற்றைக் கடந்து செல்வதற்கு  சில உயிர் தியாகம் செய்யும். தான்  மடிந்தாலும் தன் இனம் மடிந்து போய் விடக்கூடாது என்ற உள்ளுணர்வு மனிதர்களை விட பிற உயிரினங்களிடையே தான் அதிகமாக இருக்கின்றது. என்பதை இவற்றின் உயிர் தியாகம் எடுத்துக் காட்டுகின்றது
காட்டு விலங்கினங்களைப் போல பெங்குவின், கடல் ஆமை, திமிங்கிலம்,  டூனா மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களும் பிளமிங்கோ, செர்பியன் நாரை, ரூப், கருப்பு வால் கடல் பறவை போன்ற பறவைகளும் குழுப் பெயர்வை ஆண்டுதோறும் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன
பறவைகள் புலம் பெயர்ந்து செல்லும் போது வழக்கத்தை விட அதிக உயரத்தில் பறந்து செல்கின்றன. இதனால் அவைகளுக்கு தொலைவிடங்களைத்  தெளிவாகப் பார்த்து பயணத்தை இடைவிடாது தொடர முடிகின்றது  குழுவாகச் செல்லும் போது ‘V’  வடிவில் பறந்து செல்வதால் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்வது எளிதாகிறது  . இதில்  மூத்த அனுபவம் மிக்க பறவை தலைமை ஏற்று அழைத்துச் செல்கின்றது  புலப்பெயர்வின் போது கடக்க வேண்டிய தொலைவு, உடல் கட்டமைப்பு, ஆற்றல் சேமிப்பு இவற்றைப் பொறுத்து ஒவ்வொரு பறவையினமும் நாள் ஒன்றுக்கு 80 - 1000 கிமீ தொலைவு கடக்கின்றது. உணவும் நீரும் அதிகமாகக் கிடைக்கும் இடை வழியில் இவை அதிக நேரம் ஓய்வெடுத்துக் கொள்வதுமுண்டு  பொதுவாகப் பறவைகள் 25 80 கிமீ/மணி என்ற வேகத்தில் ஒரு கிலோ மீட்டர்  உயரத்தில் பறக்கின்றன. சில இன்னும் கூடுதலாக 10 - 12 கிமீ உயரத்தில் கூடப் பறக்கின்றன. உலகில் உள்ள 10000 பறவை இனங்களில் சுமார் 4000 பறவையினங்கள் புலப்பெயர்வை வழக்கமாகக் கொண்டுள்ளன
3000 ஆண்டுகளுக்கு முன்னால் முதன் முதலாக கிரேக்கர்கள் பறவைகளின் புலப்பெயர்வு பற்றி குறிப்பெழுதி வைத்துள்ளனர்.. இப் பறவைகள் புலம் பெயர்ந்து செல்லும் போது பெருங் கடல் மற்றும் கண்டங்களைத் தாண்டி பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் எப்படி சாமர்த்தியமாக பயணிக்கின்றது என்பது நீண்ட காலம் புரியாத புதிராகவே இருந்தது. பறவைகள் கடற்கரை ஆற்றின் வழித்தடம் .மலை முகடு போன்றவற்றை வழிகாட்டிகளாகக் கொண்டுள்ளன. சூரியன் சந்திரன் விண்மீன் போன்றவற்றை காந்தமுள் கருவியைப் போல பயன் படுத்திக் கொள்கின்றன. செல்லும் திக்கை புவி காந்தப் புலத்தைக் கொண்டும் துல்லியமாக அறிந்து கொள்கின்றன. காந்தப் புலத்தை உணரும் திறமை மனிதர்களிடம் இல்லை. பறவைகள் தங்கள் உடலில் உள்ள ஒரு வகை காந்த செல்களில் செல்லும் வழித்தடத்தை  பதிய வைத்துக் கொள்கின்றன என்றும் அதை புவி கந்தப்புலத்தின் உதவியோடு மீட்டுப் பெற்று வழி தவறாமல் செல்லுமிடத்தை சரியாகச்   சென்றடைகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றார்கள் எந்த அளவிற்கு நினைவில் பதிய வைத்துக் கொண்டு  தான் சென்றையும் இடத்தை மிகச் சரியாக  அடைகின்றன என்பதை நிரூபிக்க ஐரோப்பாவை வசிப்பிடமாகக் கொண்டுள்ள ஒரு புலம்பெயரும்   பறவையைப் பிடித்து அதை விமானம் மூலம் கொண்டு சென்று அமெரிக்காவில் விடுவித்தனர். .அதன் இருப்பிடத்தை அறியும் கருவி மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப் பறவை அட்லாண்டிக் பெருங் கடலை 12 - 15 நாட்களில் கடந்து தன் தாய் நாடு வந்தடைந்து
இந்தியாவில் பலவிடங்களில் பறவைகள் சரணாலயம் இருக்கின்றது. இங்கு செபியன் நாரை பிளமிங்கோ, ரூப், கருப்பு வால் கடல் பறவை  போன்ற பல  வெளி நாட்டுப் பறவைகள் கோடை மற்றும் குளிர் காலங்களில் வந்து குடியேறி   இனப்பெருக்கம் செய்து தங்கள் குஞ்சுகளுடன் மீண்டும் பறந்து செல்கின்றன.
பறவைகளே அதிக தூரம் இடம்பெயர்ந்து செல்கின்றன.புலப் பெயர்வின் போது Arctic terns  என்ற வட துருவப் பறவை 45000 கிமீ தொலைவு கடக்கின்றது. வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை  மீண்டும் திரும்ப தன் இயல்பு இருப்பிடமான வட துருவம் வரை 6  மாதம் தொடர் பயணத்தை  செய்கின்றது. குறுகிய வால் உடைய ஒரு வகையான கடல் பறவை பசுபிக் கடலை 8 வடிவில் 33000 கிமீ தொலைவை  ஏறக்குறைய 3 மாதத்தில் கடக்கின்றது. வெகு தொலைவு தள்ளியுள்ள நிலப்பகுதியை அடைய இது போல வேறு எந்த விலங்கினமும் செய்வதில்லை.
கடலில் வாழும் சாலமன் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதை நன்னீரில் செய்வதால் அதற்கு புலம் பெயர்வு அவசியமாக இருக்கின்றது.கடலுக்குள் மீண்டும் செல்வதற்கு முன்னர் குறைந்தது 3 மாதங்களாவது இளம் குஞ்சுகளுடன் இந்த நன்னீரில் வாழ்கின்றன. 
ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பயணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடங்குகின்றது .இளவேனிற் காலத்தில் லட்சகணக்கான சாலமன் மீன்கள் கடலிருந்து தன் பயணத்தை தொடங்குகின்றன .ஆற்றை எதிர்த்து நெடுந்தூரம் நீந்தி வழக்கமாக இனப்பெருக்கம் செய்யும் ஆற்றின் தோற்று வாய் பகுதியை அடைகின்றன. வழியில் பல வேட்டை ஆடப்படுகின்றன . கரடிகள் இவற்றை மிக லாவகமாகப் பிடித்து உண்ணுகின்றன. மீனுண்ணும் பறவைகளும் இம்மீன்களை உணவாக்கிக் கொள்கின்றன.

திமிங்கிலங்கள் பெரும்பாலும் கடற்கரையோரமாகச் செல்லும். பழுப்பு நிறத் திமிங்கிலம் மெக்ஸிகோ கடற் பகுதியிலிருந்து ஆர்டிக் கடல் வரை ஒவ்வோர் ஆண்டும் புலம் பெயர்ந்து செல்கின்றது அவை தன் வாழ்நாளில் ஏறக்குறைய 800000 கிமீ தொலைவு நீந்திச் செல்கின்றது இது உலகை 16 முறை வலம் வருவதற்கும் ஒரு முறை நிலவிற்குப் போய் வருவதற்கும் ஒப்பானதாகும். டூனா மீன்கள் , கடல் ஆமை போன்றவை புலம் பெயரும் போது 20000 கிமீ  தொலைவு கடந்து செல்கின்றன.
மனிதர்களை போல புலப்பெயர்ச்சி செய்யும் விலங்கினங்களுக்கு வரைபட வழிகாட்டி இல்லை. அவை தான்  செல்லும் வழித் தடத்தில் பயணிக்க வெவ்வேறு வழிமுறைகளிக் கடைப்பிடிக்கின்றன.
திமிங்கிலங்கள்  கடற்கரையை உணர்ந்து பயணத்தை தொடர்கின்றது சாலமன் மீன்கள் ஆற்றின் முகத்துவாரத்தில் நீரைச்  சுவைத்து எந்த ஆற்றோட்டத்தை எதிர்த்து நீந்த வேண்டும் என்பதை முடிவு செய்கின்றன. காட்டெருமைகள், வரிக்குதிரைகள்  போன்றவை பருவநிலை மாற்றங்களை உணர்ந்து இடப்பெயர்வு பயணத்தை மேற்கொள்கின்றன  

உயிரினங்களின் புலப் பெயர்வு ஒரு குறிப்பிட்ட கால வரையறையுடன் ஒவ்வோர் ஆண்டும் நிகழ்வதும்,வழித்தடம் பிசகாமல் பயணத்தை தொடர்வதும் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த வியப்பூட்டுவதாக இருக்கின்றது

No comments:

Post a Comment