Monday, July 26, 2010

Eluthatha kaditham-2

எழுதாத கடிதம்-2


அன்பார்ந்த தமிழ் மக்களே


தமிழ் வாழ்க,தமிழினம் வாழ்க,தமிழர் நாகரிகம் வாழ்க
என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்து வாழ்ந்துவரும்
நம் மக்களின் மேன்மையான எண்ணங்களை என்னவென்று
சொல்வேன்,எப்படி எடுத்துரைப்பேன். அந்தக் காலத்தில்
ஒரிஜினல் தமிழ் மக்கள் இறைவனின் நாமத்தையே தங்கள்
பெயராகச் சூட்டிக்கொண்டார்கள். ஆண்கள் அப்பன், நாதன்,
லிங்கம் போன்ற பின்னடைவுகளையும்,பெண்கள் அம்மை,
ஆத்தாள், லட்சுமி போன்ற பின்னடைவுகளையும் வழக்கமாகக்
கொண்டிருந்தார்கள். தங்களுடைய குழந்தைகளுக்கு
முன்னோர்களின் பெயரையே இட்டதால்,இப் பழக்கம் தவறாமல்
பின்பற்றப்பட்டு வந்தது.ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு
வந்த இந்தப் பழக்கம் இன்றைய நாகரிக மோகத்தில் மெல்ல
மெல்லச் சீரழிந்து வருகின்றது . இனி நாம் நம்முடைய பழம்பெரும்
நாகரிகத்தின் பெருமையைப் பீற்றிக் கொள்வதில் அர்த்தமில்லை.
சாத்தப்பன், ஜான்டிகுமார் ஆகியிருக்கின்றான்;சுந்தர மூர்த்தி சுந்து
ஆகியிருக்கின்றான்; பொன்னாத்தாள், பொன்ஸ் ஆகியிருக்கின்றாள்;
சீதாலட்சுமி, சீமி ஆகி இருக்கின்றாள். எதிலும் எல்லாவற்றிலும்
மாற்றம்தான் மாற்றமின்றி நடந்து கொண்டே இருக்கின்றது. அது
பெயர் சூட்டும் முறையிலும் தொற்றியிருக்கின்றது.இதற்கு
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லுகின்றார்கள்.
நியூமராலஜி மட்டுமின்றி,அடுத்தவரைப் பார்த்து அதை அப்படியே
பின்பற்றும் பழக்கத்தினாலும் இந்த வழக்கம் கண்மூடித்தனமாக
வளர்ந்து வருகின்றது.இது தவறில்லை என ஏற்றுக்கொண்டாலும்,
இந்தப் பழக்கத்தின் பரிணாம வளர்ச்சி ஏற்படுத்தும் தாக்கத்தை
நினைக்கும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது.பழக்க
வழக்கத்தில் தொடங்கும் இந்தப் பழக்க வழக்கம் படிப்படியாக
நம்முடைய வாழ்க்கை முறையின் ஒவ்வொரு பகுதியிலும் உட்புகுந்து
கொள்கின்றது. தேவையான மாற்றங்களுடன் பல தேவை
இல்லாத மாற்றங்களையும் தயக்கமின்றி ஏற்றுக் கொள்வதால்
வாழ்க்கை முறையின் சீரான வழித் தடங்கள் திசை மாறிக்
கொண்டிருக்கின்றன .ஒன்றோடு ஒன்றைக் கலக்கலாம் அது
உயர்வைத் தருமானால்.இது நம்முடைய நாகரிகத்திற்கும்
பொருந்தும்.   தேவை இல்லாமல் ஏன் நாகரிகத்தை சீரழிக்க
வேண்டும்? கொஞ்சம் சிந்தியுங்க.


அன்புடன்


காவேரி

No comments:

Post a Comment