5. மனிதா உனக்குத் தெரியுமா?
"காவேரி"
சிறிய விதைக்குத் தெரியும்
அதற்குள்ளே
ஒரு பெரிய மரமொன்று
மறைந்து கொண்டிருக்கின்றது என்று
பூ மொட்டுக்குத் தெரியும்
அதற்குள்ளே
ஒரு சுவைமிகு அமுதமொன்று
சுரந்து கொண்டிருக்கின்றது என்று
புல்லாங் குழலுக்குத் தெரியும்
அதற்குள்ளே
ஓர் இனிய இசையொன்று
ஒளிந்து கொண்டிருக்கின்றது என்று
கருங்கல் பாறைக்குத் தெரியும்
அதற்குள்ளே
ஓர் அழகிய சிலை யொன்று
தூங்கிக் கொண்டிருக்கின்றது என்று
சிக்கிமுக்கிக் கல்லுக்குத் தெரியும்
அதற்குள்ளே
ஒரு சுடும் நெருப்பொன்று
அணையாமல் இருக்கின்றது என்று
வெறும் வெண்மைக்குத் தெரியும்
அதற்குள்ளே
ஒரு நிறமலையொன்று
குவிந்து இருக்கின்றது என்று
அழகுப் பெண்மைக்குத் தெரியும்
அதற்குள்ளே
ஒரு தாய்மை ஒன்று
கூடி இருக்கின்றது என்று
ஆனால்..............
மனிதா உனக்குத் தெரியுமா?
உனக்குள்ளே
ஓர் அளவில்லா ஆற்றல்
உறங்கிக் கொண்டிருக்கின்றது என்று
இயற்கையில் எல்லாம் அறியும்
தமக்குள்ளே
இருக்கும் தனி ஆற்றலை
ஆறறிவு மனிதனைத் தவிர.
No comments:
Post a Comment