எழுதாத கடிதம்
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நம்மையெல்லாம் காணச் சொல்லி கண்ட கனவை மெய்ப்பிக்கும் விதமாக இந்தியா உண்மையிலேயே ஒரு வல்லரசாக மாறுமா? முதலில் அவர் அப்படிச் சொன்ன போது மக்களிடையே ஒரு விழிப் புணர்ச்சி தூண்டப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.ஒளி மயமான எதிர்காலம் மனக் கண்ணில் திரைப்படம் போல ஓடியது போட்டியான உலகில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னேறி விடும் என்ற நம்பிக்கை எல்லோர் மனதிலும் இருந்தது.ஆனால் இன்றைக்கு ஊட்டச்சத்து இல்லாமல் அந்த விழிப்புணர்ச்சி உறங்கத் தொடங்கி விட்டது.
இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? நடுவு நிலைச் சிந்தனையாளர்களால் மட்டுமே இது பற்றி ஓரளவு சரியாக முன்னுரைக்க முடியும்.கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளிடம் போய் தங்களுக்காகவும்,தங்கள் உறவினர்களுக்காகவும் வேண்டிக் கொள்வார்களே ஒழிய தாய் நாட்டிற்காக வேண்டிக் கொள்ள மாட்டார்கள்.தனி மனிதர்களின் நலம் நாட்டின் வளம் என்பதால் இது தவறில்லை.அரசியல் வாதிகள் எப்போதும் நாடு தங்களால் அபார வளர்ச்சி பெற்றுவிட்டதாகவும்,கனவு நனவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று சொல்வார்கள் உருவாக்கப்பட்ட புள்ளி விவரங்களின் பொய்மைத் தன்மை முன்பெல்லாம் ஆட்சி மாற்றத்தின் போது வெளிச்சத்திற்கு வரும்.உட்பூசலால் இப்பொழுதெல்லாம் உடனுக் குடன் தெரிய வருகின்றன.
இந்தியாவின் முன்னேற்றம் தனி மனிதர்களால் திட்டமிடப்படலாம் ஆனால் அது தனி மனிதர்களால் மட்டுமே நிறைவேறி விடுவதில்லை ஒட்டு மொத்த சமுதாயமும் இணைந்து செயல்பட்டாலே அது இயல்பாக,எளிதாக,எவ்விதச் சிக்கலும் இடையூறுமின்றி நடைபெற முடியும்.எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற நிலையில் தனி மனிதர்களின் ஆதிக்கம்,வெளிப்படைத் தன்மை இல்லாமை,ஆதாயம் தேடிக்கொள்ளுதல் போன்றவை எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.அகத்தே வளர்ந்து வரும் இப்போக்கின் பரிணாம வளர்ச்சி நமெக்கெல்லாம் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களை இயன்ற வழிகளில் ஏமாற்ற நினைக்கின்றான்.சுய லாபம் கருதி கண்காணிப்பை வற்புறுத்தாத ஆட்சியாளர்களின் போக்கினால் மக்கள் சுய கட்டுப்பாட்டையும் மறந்து வரம்பு மீறிச் செயல்படத் துணிந்து வருகின்றார்கள் இதன் வளர்ச்சி கட்டுக்கடங்காதவாறு பெருகி வருகிறது ஒரு மனிதன் தான் ஏமாற்றப்படுகிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமலே ஏமாற்றும் வித்தைகளில் இன்றைய சமுதாயத்தினர் கற்றுத் தேர்ந்து வருகின்றனர். அரசியவாதி மக்களை ஏமாற்றுகின்றான் மேலும் மேலும் ஏமாற்றுகின்றான்.திருந்தாத இவர்கள்,செய்த தவறுகளுக்கு வருந்தாத இவர்கள் இருந்தென்ன பயன்?அதிகாரிகளோ செய்யவேண்டிய தத்தம் பணிகளைச் செய்யாமலும் செய்யக்கூடாத செயல்களில் அதிக அக்கறை காட்டியும் வருகின்றனர்.இதற்கு வரும் மெலிதான எதிர்ப்புகள் கூட மக்களிடமிருந்துதான் வருகின்றதே ஒழிய ஆட்சியாளர்களிடமிருந்து வருவதே இல்லை. படித்தவர்கள்,திறமையானவர்களுக்கு சரியான வேலை இல்லாவிட்டாலும் கூட எதாவதொரு வேலை இல்லை.சுய தொழில் என்றாலும் மலை போன்ற முட்டுக் கட்டைகளுக்கு முன்னால் அவர்கள் விரைவிலேயே மாய்ந்து போகின்றார்கள் இதனால் மாணவர்கள் சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமாகி பெரும்பாலும் தவறான பாதைகளில் தடம் மாறிச் சென்றுவிடுகிறார்கள்.இந்த நிலை ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உகந்ததில்லை. இந்தியாவின் முன்னேற்றம் முன்னுக்குப் பின் முரணான தோற்றம் கொண்டிருப்பது இதனால்தான். மக்களின் பொது ஒழுக்கத்தின் தர நிலையில் மாற்றமின்றி உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியமில்லை.ஒழுக்கமில்லாத கல்வி ,நேர்மை இல்லாத பணி, தூமையில்லாத எண்ணம் போன்ற களைகள் அகற்றப்படாத வரை நாடு என்னும் வயலில் நல்ல விளைச்சலை யாரும் எதிர்பார்க்க முடியாது
No comments:
Post a Comment