Saturday, July 20, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 53

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
எதிர்காலத் தேவைகள் எதுவானாலும்  அவற்றைப் பிறருடைய உதவியின்றி  கல்வியால் மட்டுமே நிறைவேற்றிக் கொள்ள முடியும் .நமக்குப் பிறகு நம்முடைய உதவிகளின்றி தனித்து வாழ குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களுக்கு இயற்கை கொடுத்த கடமையாகும். இந்த நீண்டகாலப் பொறுப்பை ஒரு சில பெற்றோர்கள் மட்டுமே நன்கு உணர்ந்துகொண்டு செயல்படுகிறார்கள் 
கற்றலின்றி கற்பித்தல் இல்லை. எனவே குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் அவர்களுக்காக தொடர்ந்து கற்றுக்கொள்ளவேண்டும். கற்றுக்கொள்ளாமல் கற்பிக்க முடியாமல் போவதாலும் அல்லது அரைகுறையாக கற்பிக்க  முயலுவதாலும் ஒருகுறுகிய கால எல்லைக்குள்ளேயே பலனற்றுப் போய்விடுகின்றது கல்வி கற்காமல் இருக்கும் வழிகளில் ஈடுபடுவதற்கு முன்பாகவே கல்வியைக்  கற்றுக்கொள்ளும் சுய ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள தூண்டிவிட்டால்  குழந்தைகளின் கல்வியில்   பெற்றோர்களின் முயற்சி  பாதி குறைந்த மாதிரித்தான் . பெரும்பாலானோர் கட்டாயப்படுத்தி குழந்தைகளிடம் தாங்கள் விரும்பிய கல்வியை வளர்க்கிறார்கள். இது ஒரு கால கட்டத்திற்குப் பிறகு எதிரிடையாகத் திரும்பிவிடுகின்றது 
 மொழி அடிப்படை , சமுதாய ஒழுக்கம்  இவற்றை அறிந்து கொள்வதோடு தொடங்கும் ஆரம்பக் கல்வியை ஒரு பெற்றோர் கூடுதல் முயற்சி எடுத்துக் கொள்ளாமலேயே கற்றுக்கொடுக்க முடியும். இது குழந்தையின் ஐந்து வயதுக்குள் ஓரளவு முடிந்து விடுகின்றது .அதன் பிறகு தங்கள் பிள்ளை எதிர்காலத்தில் எப்படி வரவேண்டும் என்று நாம் விரும்புகின்றோமோ அல்லது அவன் விரும்புகிறானோ அதற்கு ஏற்ப  ஊக்கப்படுத்த வேண்டும் . இது அவனாக சுய  ஈடுபாடு  மேற்கொள்ளும்வரை தொடரவேண்டும்.  
மருத்துவரின் பிள்ளை மருத்துவராவதும், திரைப்பட நடிகரின் குழந்தை நடிகராவதும்  இயல்பாக இருப்பதற்குக் காரணம் வளரும் குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்களே பாடப் புத்தகமாகி விடுகின்றார்கள் . மாற்றுத் துறையில்  குழந்தையை ஈடுபடுத்த பெற்றோர்கள் தனித்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.படித்து அறிவை வளர்த்துக் கொள்ளும் குழந்தைகளுக்கு அது தொடர்பான புத்தகங்களை வாங்கி கொடுக்கலாம் . கண்காட்சி , பொருட்காட்சி களுக்கு அழைத்துச் சென்று ஆர்வமூட்டலாம் . துறை வல்லுனர்களின் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம் . அக் குறிப்பிட்ட துறையில் ஆர்வம் கொள்ளுமாறு ஒவ்வொருநாளும்  ஓய்வு நேரத்தில் குழந்தைகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளலாம். இதற்குத் தேவையான செய்திகளை ஒரு பெற்றோர் முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கோலா வேண்டும். . 
பொதுவாக எல்லாப் பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளைப் பற்றி ஒரு குறிப்பிட்ட எதிர்காலத் திட்டம் இருப்பதில்லை . மாறிக் கொண்டே வரும் மாறுபட்ட முன்னேற்றத் திட்டங்களினால்  ஒரு குறிப்பிட்ட துறையில் பெறவேண்டிய வளர்ச்சியை இழந்துவிடுகின்றார்கள் . இப்படிப் பட்ட பெற்றோர்கள் எல்லாச் சூழல்களுக்கு இணக்கமான ஒரு பொதுவான கல்வியை  ஊக்கப்படுத்துவது நல்லது .  

No comments:

Post a Comment