Tuesday, July 30, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 56

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
ஒவ்வொருவரும் அவர்களுடைய பலத்தையும் , பலவீனத்தையும்  ஒருசேர புரிந்து வைத்திருக்க வேண்டும் . ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றை மட்டும் நம்பிக்கொண்டு வாழ்வது முன்னேற்றத்தைப் பெரிதும் மட்டுப்படுத்தி விடும் . முதலாவது முன்னேற்றத்தை முன்திட்டமிட்டு வரையறுத்துக் கொள்ள முடியாது, நினைத்தை நினைத்தது போல நிறைவேற்றிக் கொள்ள முடிவதில்லை. நினைப்பது ஒன்று கிடைப்பது வேற்றொன்றாக இருக்கும்.  இடைத்தடைகளை எதிர்கொள்ள முடியாமல் எதிர்பாராத இன்னல்களையும் சந்திக்க நேரிடுவதுடன் முயற்சியை இடையிலேயே கைவிட்டுவிடவும் நேரிடும்.  
பலத்தை மட்டுமே நம்பியவர்கள் மிகை மதிப்பீட்டினால்  பிரச்சனையின் முழுப் பரிமானத்தையும் அறிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள் . எதிர்ப்புக்களை சமாளிக்கும் வழிமுறையை முன்கூட்டியே அறியாததால் தடையில்லாத முன்னேற்றத்தை தவற விட்டுவிடுகிறார்கள் . தோல்விக்கான காரணத்தை பிறர் மீது சுமத்தி விடுவார்கள் . பலவீனத்தை மட்டும் கருத்திற் கொண்டு பயத்தோடு ஈடுபடுபவர்கள் குறை மதிப்பீட்டினால் முயற்சிகளை முடக்கி வைத்துவிடுகிறார்கள் 
ஆக்கப் பூர்வமான திறமைகள் ஒருவருக்கு பலமாகவும் , அழிவுப் பூர்வமான திறமைகள் பலவீனமாகவும் அமைகின்றன .இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு சம்பாத்தியத்தைக் கொடுக்கலாம். ஆனால் ஆக்கப் பூர்வமான திறமைகள் மட்டுமே தனிமனிதனின் முன்னேற்றத்தை முடுக்கி விட்டு  தனி மனித நலத்தையும்  சமுதாய  நலத்தையும்  காக்கும் . சமுதாயத்திற்கு உதவிகள் செய்து சமுதாய நலம் காக்கலாம் . இதற்கு ஒருவர் அதிகமான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமுதாயத்திற்கு கெடுதல் செய்யாமலும் சமுதாய நலம் காக்கலாம். இதற்கு  நல்லொழுக்கங்களை வளர்த்துக் கொண்டாலே போதுமானது. அழிவுப் பூர்வமான திறமைகள் மனிதர்களைச் சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தி விடுகின்றது . இவர்கள்  அகத்திலும் , புறத்திலும் மாறுபட்ட பண்புடையவராக இருப்பார்கள்  
மாணவர்கள் பலத்தையும் பலவீனத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பலத்தை தொடர்ந்து அதிகரிக்கவும், பலவீனத்தை முழுமையாகப் புரிந்திருக்கவும் வேண்டும்.அப்பொழுதுதான் பலத்தால் விளையும் பயனை நுகரவும் , பலவீனத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்க்கவும் முடியும் 

No comments:

Post a Comment