Thursday, August 8, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 58

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
முயற்சி திருவினையாக்கும்,முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் ,முடிவிலா முயற்சி மட்டிலா மகிழ்ச்சி ,முயற்சி முன்னேற்றத்தின் மூலதனம் , பயிற்சியும் ,முயற்சியும் முன்னேற்றத்தின் இரு கண்கள்   என்று தமிழ் உலகச் சான்றோர்கள் கூறுவார்கள், செய்யும் எந்தச் செயலையும் செய்து முடிக்க முயற்சி தேவை. செயலைச் செய்து முடிக்கும் வரை எடுத்துக் கொள்ளும் ஈடுபாடே முயற்சி . முயற்சி இடைநிலைத் தோல்விகளால் முடங்கிப் போகாமல் புதிய புதிய வழிகளை ஆராய்ந்து  தொடர்ந்து செயலில் ஈடுபடுவதாகும். தொடர்ந்து செயலில் ஈடுபடுவதற்கு வழி தெரியாதவர்களே முயற்சி செய்யத் தவறுகிறார்கள் 
முயற்சியை கடின உழைப்பு என்றும் கூறலாம். முயற்சிப்பருக்கு  அனுபவமும்  அறிவும் துணை நிற்கின்றன . முன்னோர்கள் செய்த முயற்சிகளை அறிந்து கொண்ட அனுபவத்தின் வாயிலாக  செயலை த் தொடர்வது எளிது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதில் மாற்றங்களை ஏற்படுத்த அறிவு தேவை . அவை தெரியாத நிலையில் முயற்சி ஒரு நிலையில் தடைப்பட்டுப் போகின்றது .முயற்சியில்  ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கு உடலில் இருக்கும் உறுப்புக்கள் எல்லாம் முழுமையான நலத்துடன் செயல்படக்கூடியனவாக இருக்க வேண்டும்.   இந்த உறுப்புக்களின் ஒருங்கிணைந்த செயல்பாடே ஒரு மனிதனின் செயல் திறனைத் தீர்மானிக்கின்றது .புறத் தூண்டுதலின்றி வெகு இயல்பாக முயற்சியில் ஒரு மாணவன் ஈடுபடுவதற்கு உடல் உறுப்புக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டைத் தூண்டக்கூடிய வலிமை யைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு  யோகா முழுமையான பயன் தருகின்றது . பகவத் கீதை கடின உழைப்பையே யோகம் என்றும் யோகத்தால் கடின உழைப்பைச் செய்யும் ஆற்றலைப் பெறமுடியும் என்றும்  குறிப்பிடுகின்றது. சுய முயற்சி என்பது கண்ணை மூடிக்கொண்டு காரியத்தில் ஈடுபடுவதில்லை. அதற்கு முன் அது தொடர்பான சிந்தனைகள்  மூலம் சரியாகத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் . செயல் , வழி முறை , காலம் , பயன்பாடு , இடைத்தடைகள் , மற்றும் அவற்றை நீக்கிக் கொள்ள இருக்கும் வாய்ப்புக்கள் , செய்து முடிக்க மேற்கொள்ள வேண்டிய துணைச் செயல்கள்  போன்ற வற்றை ஆராய்ந்து செய்ய அறிவு வேண்டும் .  

No comments:

Post a Comment