Monday, August 26, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 64

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 

(கல்வி பற்றி ...  திருக்குறள்)

கல்விக்காக தனி அதிகாரத்தைப் படைத்திருந்தாலும் கல்வியின் சிறப்பு பற்றி வள்ளுவர் தம் நூலில் பல அதிகாரங்களில் தெரிவித்துள்ளார் . அதற்கு காரணம் கல்வி வாழ்க்கையோடு  தொடர்புடைய அனைத்து ஒழுக்கங்களோடும் சம்பந்தப்பட்டிருக்கின்றது .ஒழுக்கமுடைமை ,பயனில சொல்லாமை ,ஒப்புரவு அறிதல் ,புகழ் ,வாய்மை ,அறிவுடைமை,மெய்யுணர்தல் ,கேள்வி ,தெரிந்து செயல் வகை ,வலி அறிதல் ,காலம் அறிதல் ,இடன் அறிதல் ,தெரிந்து தெளிதல் , மடியின்மை ,ஆள்வினையுடைமை ,இடுக்கண் அழியாமை அமைச்சு ,சொல்வன்மை ,வினைத்தூய்மை ,வினைத் திட்பம், குடிமை போன்ற பல அதிகாரங்களில் கல்வியின் பெருமையை  ஆங்காங்கே சுட்டிக்காட்டியுள்ளார்   கல்வியின் மேன்மை பற்றி கல்வி என்ற அதிகாரத்திலும் , கல்லாமையால் ஏற்படும் இழிவு பற்றி கல்லாமை என்ற அதிகாரத்திலும் விவரித்துக் கூறியுள்ளார்  
உலகப்பொதுமறை என உலகோர் யாவராலும் போற்றி வழங்கப்படுகின்ற திருக்குறளில் வள்ளுவப் பெருந்தகை யாவற்றையும் விட கல்வியைத்தான் செல்வம் என்று குறிப்பிடுகிறார்
“கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவற்கு                                                                                    மாடல்ல மற்றை யவை”
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் பெறவேண்டிய செல்வங்களில் முதன்மையானது கல்வியே .அக்கல்வியே பிற செல்வங்களைப் பெற ஒருவனைத் தகுதியுடையவனாக்கி விடுகின்றது. அதனால் குழந்தைகளுக்குத் தேவையான கல்வியைக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோருடைய கடமை என்றும்,  மக்களுக்குத் தேவையான கல்வியைக் கொடுப்பது நாட்டை  ஆள்பவர்களுடைய கடமை என்றும்  வள்ளுவர்   குறிப்பிடுகிறார். கல்வியைக் கொடுத்து விட்டால் ,அக்கல்வியால் தங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவர்களே முயன்று பெற்றுக்கொண்டு விடுவார்கள் என்பதால்   எல்லாத்  தேவைகளையும்  குழந்தைகளுக்குப் பெற்றோரும் , மக்களுக்கு அரசாங்கமும் செய்து கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எளிமையாகிவிடுகின்றது .
“தந்தை மகற்காற்று நன்றி அவையத்து                                                                                        முந்தி யிருப்பச் செயல்”, 
“தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை” 
போன்ற குறள் வரிகள் மூலம் இதை உணர்த்துகின்றார்.  பெற்றோரின்  முதற் கடமை தான் பெற்ற மக்களை ஆண், பெண் பேதமின்றி அறிவுடையவர்களாகவும் அவையிலே நல்ல அறிஞர்களாக விளங்குதற்கு தேவையான கல்வியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். 
திருக்குறளில் பொருட்பாலில் கல்வி பற்றிய செய்திகள் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டுள்ளன .கல்வி வெறும் பட்டங்களைப் பெறுவதற்காக மட்டுமில்லை ,பயன்படுத்திக் கொள்ளாமல் மறந்து போவதுமில்லை .  பயனீட்டிப் பயனைப் பலருக்கும் பகிர்ந்து கொடுப்பதற்கு கற்றுக்கொண்ட கல்வி நெறிப்படி   நடக்க வேண்டும். அப்படி நடந்து கொள்ளாவிட்டால் அக்கல்வியை  கற்றுக்கொண்டதாலும் கற்றுக்கொள்ளாமலிருப்பதாலும் வேறுபாடு ஏதும் இருப்பதில்லை .   
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்                                                                                                                                                                                          நிற்க அதற்குத்தக"
எண்ணும், எழுத்தும் மக்களுக்கு இரு கண்கள் போன்றது என்று இயம்பும் குறள் 
" எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்                                                      கண்ணென்ப வாழும் உயிர்க்கு"
எண் என்பது கணக்கு , எழுத்து என்பது மொழி .இயல் வாழ்க்கைக்கு இரண்டுமே முக்கியம் . ஒன்றில் மட்டும் தேர்ச்சி உடையவர் ஒரு கண் பார்வையை இழந்தவராவார்.
கண்ணுடையவர் என்பவர்கள் கற்றவர்கள் கல்லாதவர்கள் புண்ணுடையவர்கள் என்ற கருத்தைக் கூறுவது 
 “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு                                                   புண்ணுடையர் கல்லாதவர்"
கண் ,காது. மூக்கு , வாய் , மெய் போன்ற ஐம்பொறிகள் பார்த்தும் ,கேட்டும், நுகர்ந்தும் ,சுவைத்தும் , உணர்ந்தும்  மெய்ப்பொருளை அறிந்து கொள்ள உதவுகின்றன . கண்ணால் இயற்கையைக் கண்டு இயல் வாழ்க்கையைப் பின்பற்ற முடிகின்றது. நூல்களைத் தேடிப் படித்து தேவையான விவரங்களைப் பெறமுடிகிறது.பிறர் உதவியின்றி சுயமாகக் கல்வி தேடுவதில் முக்கிய ப் பங்காற்றுவது கண்களே .கல்விக்காகக் கண்களை ப்  பயன்படுத்தாவிட்டால் அந்தக் கண்களால் பயனில்லை . அது முகத்திலிருக்கும் புண்ணே என்று பயன்படுத்தாத கண்ணை இழிவுபடுத்துகின்றார். 
எக்குடிப் பிறந்தவராயினும் கல்வி கற்றவர்கள் உயர்ந்தோர், கல்லாதவர்கள் தாழ்ந்தோராவர் எனக் கூறுவது 
 “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்                                                                  கடையரே கல்லாதவர்" 
என்ற குறள் .தானும் உயர்ந்து தன் சமுதாயத்தையும் உயர்த்தும் சாமர்த்தியம் கற்றவர்களுக்கு மட்டும் உரியது . எவர் சாகாத சமுதாயத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முயல்கின்றார்களோ அவர்களே முதற்குடிமக்களாவர் .அவர்களையே சமுதாயம் போற்றும் என்று கற்றோரைச் சிறப்பிக்கின்றார். 
கற்ற கல்விக்கு ஏற்றவாறு அறிவு விரிவடையும் என்பது  
 “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு                                                           கற்றனைத் தூறும் அறிவு"
என்ற குறள்.இட்ட கருவானது ஒரு குழந்தையாக வளர்ந்து வெளிப்படுவதைப் போல . கற்ற கல்விப் பொருளானது அறிவாக விரிவடைந்து புதுப் பொருளாகும்  வாய்ப்பைப் பெறுகின்றது. கல்வியின்றி அறிவு கிடைக்காது என்பதை மிகத் தெளிவாக முன்னுரைக்கின்றார் 
ஒரு பிறப்பில் தான் கற்ற கல்லி ஒருவற்கு ஏழு பிறப்பிற்கும் தொடரும் என்ற கருத்தைச் சொல்வது 
 “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு                                                                               எழுமையும் ஏமாப்புடைத்து’
ஒருவர் தான் கற்ற கல்வியின் பயனைச் சமுதாயத்திற்குக் கொடுக்க , அப் பயனை அச் சமுதாயம் அவருடைய மறுபிறப்பில் திருப்பிக் கொடுக்கிகின்றது . கற்றோரால் வழி காட்டப் படாத சமுதாயம் நலமிழந்து  ஒவ்வொருவருடைய மறுபிறப்பிலும் பெருந்துன்பத்தையே  தரும் என்ற உட்பொருள் மூலம் சாகாத சமுதாயத்தின் உட்கூறுகளை அறிந்துரைக்கின்றார்
 தான் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெற்று மகிழவேண்டும் என்பதற்காக கற்றோர் மேலும் தொடர்ந்து கற்பார்கள் என்று கற்றோரின் இயல்பினைக் கூறும் குறள் 
 “தாமின்புறுவது உலகின் புறம் கண்டு                                                                        காமுறுவர் கற்றறிந் தார்"
ஆசிரியர்கள் ,படைப்பாளிகள் , விஞ்ஞானிகள் எல்லோரும் தான் வாழும் சமுதாயம் இன்புற்றிருக்க இடைவிடாது  முனைப்புடன் செயல்படுவது இதற்குச் சான்று கூறும்  

3 comments:

  1. சிறந்த மாணவர்களை உருவாக்குவோம் என்ற நூல் ,அமேசான் மூலம் e-book ஆக வெளியிடப்பட்டுள்ளது.

    ReplyDelete