Friday, August 23, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 61

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
ஒரு குழந்தை வீட்டில் சிறந்த மாணவனாக வளர்வதற்கும் , நாட்டில் சிறந்த குடிமகனாக ஆவதற்கும் கல்வியே முழுமுதல் காரணமாக இருக்கின்றது.  வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிப்பதில் கல்வியே  முக்கியப் பங்கு   வகிப்பதால் எல்லோருடைய வாழ்க்கையிலும் கல்வி ஒரு பகுதியாக இருக்கின்றது .இளம் வயதில் பெறும் கல்வி எதிர்காலத்தை தீர்மானிப்பதிலும் அதைத் தொடர்ந்து பெறும் உயர் கல்வி சுய திறமையை வளர்த்துக் கொண்டு பயனீட்டுவதிலும் முக்கியத்துவம் கொண்டுள்ளன .வாழும் போது விருப்பமான  மகிழ்ச்சிக்கும் வளத்திற்கும்  உறுதியளிப்பது கல்வியே .பிறர் உதவியின்றித் தன் கையை நம்பித் தானே வாழ்வதற்கான நம்பிக்கையை ஊட்டுவதும் கல்வியே.ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய வாழ்வாதாரத்தைத் தேர்வு செய்ய கல்வியே வழிகாட்டுகின்றது.  
உண்மையான கல்வியே எண்ணங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல சிந்தனைகளை மேற்கொள்ளத் தூண்டுகின்றது. கலப்படமற்ற தூய எண்ணங்கள் சமுதாயத்திற்கு நல்ல செயல்களை மட்டுமே செய்ய  வழிப்படுத்துகின்றன. தோல்வியையும் ,தொடரும் துன்பங்களையும் நீக்கி வெற்றிகளையும் , நிறைவான இன்பங்களையும் துய்க்க இந்தக் கல்வியே உறுதுணையாக இருக்கின்றது .. சுய தொழிலில் ஈடுபட கல்வியே நம்பிக்கையூட்டுவதால் , வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க பங்களிப்பு செய்ய முடிகின்றது .ஊழல் , ஏமாற்றுதல் ,கையாடல் ,களவு , போன்ற  குற்றங்களை  சமுதாயக் கேடுகளாக  மனதளவில் ஒப்புக் கொள்வதால் அப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபட கல்வி அனுமதிப்பதில்லை . அதாவது கல்வி ஒரு சமுதாயத்தில் நல்ல குடிமக்கள் பெருகி வருவதை பாதுகாக்கின்றது. 
தனிமனிதனின் வாழ்க்கையும் பொருளாதார நிலையும் பெருமளவு அவனுடைய கல்வியைச் சார்ந்திருக்கிறது . அதனால் கல்வி என்பது ஒருவர் தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்காகச் செய்யும் மூலதனம் என்று கூறுவார்கள் . கல்வியின் வளர்ச்சி சமுதாயத்தில் ஆசிரியர்கள், தொழில் முனைவோர்கள், ,மருத்துவர்கள் , பொறியாளர்கள் , கலைஞர்கள் , ஆராச்சியாளர்கள், ,நிர்வாகிகள்  போன்ற பல்துறை வல்லுநர்கள்  உருவாகக்  காரணமாக இருக்கின்றது . இவர்களின் பெருக்கம் காலப் போக்கில் வளமான நாட்டை உருவாக்கிவிடுகிறது .
  கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள்  மட்டுமின்றி பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , ஆட்சியாளர்கள் .குடிமக்கள் என எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும். அப்பொழுது தான் கல்வியால் சமுதாயம் மற்றும் நாட்டின் வளத்தையும் ,நலத்தையும் மேம்படுத்துவத்தில் ஒவ்வொருவரும்  தங்கள் பங்களிப்பைச் செய்யமுடியும் 

1 comment:

  1. சிறந்த மாணவர்களை உருவாக்குவோம் என்ற நூல் ,அமேசான் மூலம் e-book ஆக வெளியிடப்பட்டுள்ளது.சொல்வதெல்லாம் உண்மை -சொன்னதும் சொல்லாததும் என்ற தலைப்பில் மூன்று நூல்கள் அமேசான் மூலம் வெளியிடப்பட்டுள்ளது

    ReplyDelete