Monday, December 4, 2023

கூடியாக்கி உண்ணுதல் /படைப்பு

 கூடியாக்கி உண்ணுதல் /படைப்பு

 திருமண  வீட்டார் திருமண வேலைகளை ச்  செய்வதற்கு யோசனைகளையும் உதவிகளையும் பெறுவதற்கு எதுவாக சில நெருங்கிய உறவினர்களை திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக வருமாறு  விருந்துண்ண சிறப்பு அழைப்பு விடுப்பார்கள்.இதையே கூடியாக்கி உண்ணுதல் என்று கூறுவார்கள்.இன்றைக்கு இதைச்  சில வீடுகளில்  அவர்களுடைய முன்னோர்கள் அல்லது சாமிகளுக்குப் படைக்கிறார்கள் . படைப்பை எல்லாக் கிழமை களிலும் செய்வதில்லை. பொதுவாகப் புதன் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில்தான் வீட்டுப் படைப்பைச் செய்வார்கள் .படைப்பன்று காலை குல தெய்வத் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டுத்  தீர்த்தம் மற்றும் திருநீறு பெற்றுக்கொண்டு வருவது மரபு படைப்பிற்குரியவருக்கு கோடி வேட்டி துண்டு ,சேலை ஆகியவற்றை வாங்கி ஒரு புதிய வாளியில் வீட்டுக் கிணற்று நீரை எடுத்துக்கொண்டு நீரில் அலசி  நனைத்துக் காயவைத்து மடித்து பூமாலை சாத்திய படைப்பிற்குரியவர்களின் உருவப்படத்திற்கு முன்னால்  ஜெபமாலையுடன் பரப்பி அவைகளுக்குச் சந்தானம் குங்குமம் வைத்து, வழிபடவேண்டும் . துணிகளைக் காய வைக்கும் பொழுது அவை கீழே விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .அப்படி விழுந்துவிட்டால் மீண்டும் அலசிக் காயப்போட வேண்டும் .காயப் போட்டப்படும் துணிகளின் குறுக்கே செல்லக்கூடாது என்பது மரபு வழிப் பழக்கம் . பொதுவாகப் படைப்பிற்குரிய உணவுகளை வீட்டுப் பெண்களே சுவைத்துப் பார்க்காமல் பயபக்தியுடன் சமைப்பார்கள். படைப்பிற்கு என்று ஒரு குறிப்பிட்ட உணவுத் திட்டம் உள்ளது .வாழைக்காய் கருவாட்டுப் பொரியல், பிலாக்காய் பொரியல் ,அவரைக்காய் பொரியல் ,புடலங்காய் கூட்டு வெண்டிக்காய் பச்சடி கத்திரிக்காய்  புளிக் குழம்பு ,கருணைக்கிழங்கு புளிக் குழம்பு ,பரங்கிக்காய் புளிக் குழம்பு ,மாங்காய்ப் பச்சடி ஆகியவற்றோடு கற்கண்டு வடை ,பாற்சோறு பாயாசம் அப்பளம் வைப்பது பொது வழக்கு.படைப்பில் இந்த பாற்சோறே  பிரசாதமாகும். யாருக்குப் படைக்கின்றோமோ அவர்கள் மிகவும் விரும்பும் பண்டங்களையும் வைத்துப் படைப்பார்கள். படத்திற்கு முன்னால் இலைகள் போட்டு உணவுப் பாண்டங்களை பரிமாறி சோறுபோட்டு பருப்பு நெய் ஊற்றி தீர்த்தத்தால் நீர் விளாவி நைவேத்தியம் செய்து கற்பூரம் காட்டி வழிபடுவார்கள் ஊதுபத்தி ஏற்றி கும்பிடும் போது சாம்பிராணி போடவேண்டும். படைப்பின் போது உணவு சாப்பிட்ட எச்சி இலையை தெருவில் போடாமல் .ஒரு பையில் போட்டுக் கட்டி மறுநாள் வெளியில் போடுகின்றார்கள்

 

 படைப்பு  செய்பவர்கள் அன்று காலை விதைப்பு நெல் கொடுப்பார்கள். ஒரு மரக்கால் விதைப்பு நெல்லை பையில் வைத்துக் கட்டி ஊர்க் கோயில்களில் அல்லது வேளாளர்களிடம் கொடுப்பார்கள். அதைப் பெற்றுக்கொண்டவர்கள் திருநீறு கொடுப்பார்கள் .அதைப் படைப்பு வீட்டில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

 

No comments:

Post a Comment