Sunday, December 3, 2023

பெண்/மாப்பிள்ளை பார்த்தால்

 பெண்/மாப்பிள்ளை பார்த்தால் , திருமணத்தை உறுதி செய்தல்

 ஒருவாறு வரனை முடிவுசெய்த பின்பு முதலில் செய்வேண்டியது பெண்/மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து  சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளும் விருப்பத்தை  இருவீட்டார் முன்னிலையில் ஒருவருக்கொருவர் தெரிவித்துக்கொள்ளுவதாகும்  இருவீட்டார்க்கும் பொதுவான இந்நிகழ்ச்சியை இருவீட்டார்க்கும் பொதுவான நபரின் வீட்டிலோ அல்லது கோயில் ,மடம் போன்ற பொதுவிடங்களிலோ நடத்தலாம். பெண்/ மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சிக்கான சந்திப்பிற்காக பொது நபர் மூலம் இருவீட்டாரும் கலந்து பேசி  ஒரு நல்ல நாளைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பொதுவாக ஞாயிறு ,திங்கள்  ,புதன், வியாழன் வெள்ளி ஆகிய கிழமைகளில் அஷ்டமி,நவமி தவிர்த்த மற்ற திதிகளில் கரிநாள் நீங்கலான நாட்களில் ராகு காலம் மற்றும் எமகண்டம் நீங்கலான நேரத்தில் இந்த முதல் சந்திப்பை ஏற்படுத்திக்கொள்வது நல்ல தொடக்கம் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள் . இச்சந்திப்பின் போது இருவீட்டாரும் அவர்களுடைய  குடும்பத்தாருடனும் முக்கியமான உறவினர்களுடனும் சந்தித்து சுமூகமாகப் பேசிக்கொள்ளவேண்டும்.மணமகனும்  மணமகளும் தனித்துப் பேச வாய்ப்பளித்து பின்னர் அவர்கள் வாயாலேயே அவர்களுடைய விருப்பத்தை முன்னறிந்து கொள்ள வேண்டும் .பெண் வீட்டாருக்கும் பெண்ணுக்கும், மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டாரையும் பிடித்து இருந்துமாப்பிள்ளை வீட்டாருக்கும் மாப்பிள்ளைக்கும் பெண்ணையும் பெண் வீட்டாரையும் பிடித்து இருந்தால் திருமண விருப்பத்தைப்  பெண் வீட்டார் அங்கு கூடியிருக்கும் அனைவர்க்கும்  இனிப்பு மற்றும் சுவைநீர் வழங்கித் தெரிவிக்கவேண்டும் இருவீட்டாரும் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை  அப்பொழுதே கெட்டி செய்து கொள்ளலாம்.  திருமணத்திற்காக முன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சிதான் நிச்சயம் செய்தல்  என்றும்  பரிசம் போடுதல் என்றும் கூறுவார்கள்

 

  ,அதன் பிறகு ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய சீதனம் மற்றும் முக்கியமான முறைகளை பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும். முடிந்தால் உறவினர்களின் முன்னிலையில் திருமணம் பேசிக் கொள்ளுதல், மற்றும் திருமணத்திற்கான நாள் மற்றும் தேதியை தாற்காலியமாக முடிவுசெய்யலாம்  முடியா விட்டால் உரியவர்களோடு கலந்து பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் .  பெண்/ மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியில் திருமணம் இருவீட்டாராலும் ஒப்புக்கொள்ளப்பட்டால் , பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு எவ்வளவு பேர் வந்திருக்கின்றார்களோ அத்துணை பேருக்கும்  (சம்பந்தியான், சம்பந்தியாள் ,மாப்பிள்ளை, நாத்தனார்கள் .பெரியவர்கள்  என அனைவருக்கும்) ஒரேமாதிரியாக  10 " எவர் சில்வர் வாளியில் வெற்றிலை பாக்கு வைத்து, ஒரு வாளியில்  ரஸ்தாளி வாழைப்பழம் சீப்பாக வைத்து, பெண் பார்த்ததற்காக மாப்பிள்ளைக்கு ஒரு குறிப்பிட்ட ரூபாயும் ,பெரிய இடமாக இருந்தால் வெள்ளியில் ஒரு பொருளும் வழங்குவார்கள். திருமணம் பெண்/மாப்பிள்ளை பார்த்தால் நிகழ்ச்சியின் போது முடிவு செய்யப்படாவிட்டால் வாளி வழங்குதலோ அல்லது இனிப்பு மற்றும் சுவைநீர் வழங்குதலோ இல்லை பெண்/மாப்பிள்ளை பார்த்து திருமணம் ஒப்புக்கொள்ளப்பட்ட பின்பு மணமகளுக்கும் மணமகனுக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்காவிட்டால் ,அல்லது கொடுக்கல் வாங்கலில் மன நிறைவு பெறாவிட்டால் திருமணம் தடைப்பட்டுப் போகலாம் . எதாவது காரணத்தால் முடிவு செய்யப்பட்ட திருமண ஒப்பந்தம் திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக முறிந்து போனால் , அந்த வாளியையும் அதன் அடக்கத்தையும் திருப்பி அனுப்பிவிடவேண்டும். கருத்து வேறுபாடுகளை முதல் சந்திப்பிற்கு முன்பாகவே தவிர்த்துக் கொண்டு  இது போன்ற நிகழ்வுகளைத் தடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே நகரத்தார் பண்பாட்டிற்கு அழகு

No comments:

Post a Comment