Thursday, December 7, 2023

 கழுத்தூரு வாங்கப் போதல்

மாப்பிள்ளை வீட்டாருடன்  பங்காளிகளில் ஒருவரும் சேர்ந்து  திருமணத்திற்கு முன்பு ஒரு நன்னாளில் உப்புக்கடகம்,ஏட்டோலை மற்றும் முளைப்பாரி முதலியவற்றை எடுத்துக் கொண்டு பெண் வீட்டிற்குச் செல்வார்கள் .இன்றைக்கு தேங்காய் சட்டி கொண்டு செல்கின்றார்கள். .இவர்கள் பொதுவாக வட்டுவப் பை என்ற ஒரு சிறப்புப் பையையும் கொண்டு செல்வார்கள். இதை வள்ளுவப் பை என்றும் அழைக்கின்றார்கள் இன்றைக்கு வட்டுவப் பை  காணமால் போய் வருகின்றது

பெண் வீட்டார் திருமணம் நிகழும் வளவு வீட்டிற்குள் தடுக்கில் உட்காரவைத்து வந்திருப்பவர்களிடம் கழுத்தூரு உருப்படிகளையும் தாலிச் சங்கிலிகளையும் கொடுப்பார்கள் .எல்லாவற்றையும் சிவப்புத்  துண்டில் வைத்து அதனுடன் விரலி மஞ்சள் வெற்றிலை பாக்கு மற்றும் மல்லிகைப்பூ ஆகியனவற்றையும் சேர்த்துக் கொடுப்பார்கள். உருப்படிகளை எண்ணிச் சரிபார்த்து அவற்றை வட்டுவப்பையில் வைத்து மாப்பிள்ளை வீட்டுக்கு கொண்டு வரவேண்டும் .இதை திருமணத்திற்கு முதல்நாள் மாலைப் பொழுதில் பங்காளி வீட்டு ஆண்கள் ஒன்றிணைந்து நூல் திரித்து மஞ்சள் பூசி    கழுத்தூராகக் கோர்ப்பார்கள்.

 பெண்வீட்டில் அரசாணைக் கால்  கட்டும் நிகழ்வு நடைபெறும்போது மாப்பிள்ளை வீட்டில் கழுத்தூரு கோர்க்கும் நிகழ்வு நடைபெறும்  பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் நிகழும் திருமணங்களானால்  சனிக்கிழமைகளில்   கழுத்தூரு கோர்ப்பதில்லை. எனவே ஓரிரு நாட்களுக்கு முன்பாக ஒரு நன்னாளில்  கழுத்தூரு வாங்கப்போவதையும் ,கழுத்தூரு கோர்ப்பதையும்  செய்துகொள்வார்கள்.

   கழுத்தூரு வாங்கும் போது பெண்வீட்டார் தரும் உருப்படிகள்

 திருமாங்கல்யம்-1

இலக்குமி ஏத்தனம்-1

ஏத்தனம்  -4

உரு -19

சரிமணி -2

கடைமணி -4 ஆக மொத்தம் 31 உருப்படிகள்

இவை மட்டுமே கழுத்தூராகக் கோர்க்கப்டும். இதனுடன் பின்னர் பயன்படுத்திக் கொள்ளும் குச்சி, தும்பு தூவாளை  ஒற்றைத் தும்பு ஆகிய நான்கு உருப்படிகளை.யும்  தருவார்கள் . ஆக மொத்தம் 35 உருப்படிகள் இருக்கும் என அறிக. திருமணத்தின் போது மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு திருமாங்கல்யம் பூட்டிவிட்டு தாலி அணிவிக்க தாலியும் தருவார்கள் ..இதை மாப்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளை அழைத்துச் செல்லும் போது மாப்பிள்ளையின் தாயார் அல்லது மாப்பிளை வீட்டில் ஒரு குடும்பப் பெண் தட்டில் வைத்து கோர்க்கப்பட்ட கழுத்தூருடன் கொண்டு செல்லவேண்டும்

 

No comments:

Post a Comment