Tuesday, December 26, 2023

பிள்ளையார் நோன்பு

 பிள்ளையார் நோன்பு

திருக்கார்த்திகை முடிந்து 21 நாள் கழித்து மார்கழி மாதத்தில் சஷ்டியும் சதயமும் கூடிய நாளில் பிள்ளையார் நோன்பு வரும். பிள்ளையார் நோன்பு என்பது நகரத்தார்களுக்கு மட்டுமே உரிய ஒரு பண்டிகை

பிள்ளையார் நோன்பு அன்று  காலையில் சாமி வீட்டில் கோலம்போட்டு பிள்ளையார் படம் அல்லது சிலை யொன்றை வைக்க வேண்டும் . நெல்லுப் பொரி , எள்ளுப்பொரி  சோளப்பொரி கம்புப்பொரி , அவல் பொரி ஆகிய 5 பொரிகளையும் தனித் தனியாக கிண்ணங்களில்  வைத்து   பிள்ளையாருக்கு முன்பு வைக்க வேண்டும். கருப்பட்டி பணியாரம் பிள்ளையார் நோன்பிற்காகச் செய்யப்படும் ஒரு பலகாரம் . பச்சரிசி மாவில் கருப்பட்டிப் பாகினை ஊற்றிப் பிசைந்து முதல் நாளே தயார் செய்யவேண்டும்  . பிள்ளையார் நோன்பன்று கருப்பட்டி மாவில் கொஞ்சம் நீரூற்றி கரைத்து பணியாரம் சுட்டு பிள்ளையாருக்குப் படைத்தது  இழை எடுத்துக்கொண்ட பின் சாப்பிடவேண்டும். இத்துடன் வடையையும் சேர்த்துக்கொள்ளலாம்   

இழை எடுத்துக்கொள்வதற்காக கருப்பட்டி மாவில் கொஞ்சம் தனியாக எடுத்து    வைத்துக் கொள்ளவேண்டும். பிள்ளையாரை வணங்குவதற்கு முன் தனியாக எடுத்துவைத்திருக்கும் கருப்பட்டி மாவைக் கிள்ளி சிறு சிறு வடிவங்களாகப் [பிள்ளையார் வடிவில் (கூம்பு வடிவில்)] பிடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.21 மெல்லிய நூல் இழைகள் கொண்ட திரியை அந்த இழையில் வைக்க வேண்டும் . வீட்டில் உள்ள பெரியவர் அந்த இழை கொண்ட பிள்ளையாரை எடுத்து இழையை நெய்யில் தோய்ந்துக் கொடுக்கவேண்டும் .சிலர் அந்தத் திரியை விளக்கில் காட்டி ஏற்றிவிட்டுக் கொடுப்பார்கள் .முதல் இழை பிள்ளையார் இழை எனப்படும்.இதை எல்லோருக்கும் இழை எடுத்துக்கொடுக்கும் பெரியவரே பிள்ளையாரை வணங்கி விட்டு எடுத்துக்கொள்வார்.அதன் பிறகு மற்றவர்களுக்கு இழை எடுத்துக் கொடுப்பார் .வயதின் வரிசைப்படி  மூத்தவர்கள் முன்னாலும் இளையவர்கள் பின்னாலும் இழை எடுத்துக்கொள்வார்கள்.. சிலர் வெள்ளைப்பணியாரம் , திரட்டுப்பால் போன்றவைகளையும் செய்து பிள்ளையாருக்குப் படைத்துவிட்டு சாப்பிடுவார்கள் . வீடுகளில் பிள்ளையார் நோன்பு கொண்டாட முடியாதவர்கள் நகரத்தார் கோயில்களில் இழை எடுத்துக்கொள்வார்கள்.இதற்காக ஒரு நபருக்கு இவ்வளவு என்று குறிப்பிட்ட தொகையை வசூலித்து பிள்ளையார் இழை எல்லோரும் எடுத்துக்கொள்ளும்படி செய்கின்றார்கள்.கடைசியாக அந்தப்பெரியவர் தமக்குரிய இழையை எடுத்துக்கொள்ளவேண்டும் . கருவுற்ற பெண் கருவிலுள்ள பிள்ளைக்காக வும்  தாய் இழை எடுத்துக் கொள்ள வேண்டும்

பிள்ளையார் நோன்பு கொண்டாடுவதற்கு வலிமையான ஒரு காரணம் இருக்க வேண்டும். நம் மூதாதையர் பிள்ளையாரையே முழுமுதற் கடவுளாகத் தொழுதனர். அரசியல் காரணமாக இடம்பெயர்ந்தபோதும் ஆழிப்பேரலை காரணமாக இடம் பெயர்ந்தபோதும்  பொருள் இழப்போடு உயிர் இழப்பையும் சந்தித்தார்கள் .தங்கள் இனமே அழிந்துபோய்விடுமோ என்று அஞ்சினார்கள். தங்கள் இனம் விருத்தி யடையவேண்டும் என்று அனைவரும் முழுமுதற் கடவுளை வேண்டிக்கொள்ளும் நிகழ்ச்சியே பிள்ளையார் நோன்பு. அதனால்தான் கருவிலுள்ள சிசுவிற்கும் இழை எடுத்துக்கொடுக்கின்றார்கள்

.21 நூல் இழைகள் கொண்ட திரி என்பதற்கும் ஒரு நோக்கம் அடிப்படையாக இருக்கவேண்டும் . தொடக்கத்தில் வைசியர்களாக வாழ்ந்த நகரத்தார்கள் எல்லோரும் ஒரு வகையினராக இருந்து மரகத விநாயகரை வழிபட்டனர் .அரசியல் காரணமாகவும் ஆழிப்பேரலை காரணமாகவும் அவர்கள் இருமுறை புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.சோழ நாட்டில் காவிரிப்பூம் பட்டினத்தில் வாழும் போது மூன்று வீதிகளில் வாழ்ந்து வந்தனர் .அரசியல் காரணமாகப் பலர் உயிரிழந்தனர் .பலருக்கும் திருமணம் செய்துகொள்ள அவர்கள் இனத்திலேயே பெண் இல்லாமல் இருந்தது   அரசனின் அனுமதி பெற்று வெள்ளாள இனப் பெண்களை மணந்து கொண்டனர் . சோழிய வெள்ளாளர் இனப் பெண்களை மணந்து கொண்டவர்கள் இன்றைக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் என்று அழைக்கப்படுகின்றார்கள். திருமண உறவுகள் காரணமாக இவர்கள் 9 கோயில் பிரிவினராகப் பிரிந்து வாழ்ந்தனர் .அவை இளையாற்றங்குடி ,மாத்தூர், வைரவன் கோயில் ,நேமங்கோயில் , சூரைக்குடி ,இலுப்பைக்குடி ,வேலங்குடி பிள்ளையார் பட்டி, இரணியூர். இக்கோயில்களுள் இளையாற்றங்குடியார் 7 உட்பிரிவுகளோடும் , மாத்தூரார் 7 உட்பிரிவுகளோடும். திருமண உறவுகள் மேற்கொள்ளும் அடிப்படை யில் நகரத்தார்களிடையே மொத்தம் 21 பிரிவுகள் உள்ளன . இந்த 21 பிரிவினரும் ஒற்றுமையாகவும் சீரும் சிறப்போடும் உடல் நலத்தோடும் வாழ வேண்டும் என்று பிள்ளையார் ஆசிர்வதித்து இழை கொடுக்கவேண்டும் என்று 21 நூல் இழைகளை இணைத்து வைத்திருக்கின்றார்கள்

No comments:

Post a Comment