அறிக அறிவியல்
அதிக உயரங்களில் வெப்ப நிலையும் செயற்கைக் கோளும்
பூமியிலிருந்து15-16 கிமீ உயரம் வரை பூமியின் நடுவரைப்
பகுதியிலும் 8-9 கிமீ உயரம் வரை துருவப் பகுதியிலும்
வளி மண்டலத்தின் முதல் அடுக்கான
அடிநிலை அடுக்கு விரிந்துள்ளது. வளி மண்டலத்தின்
மொத்தப் பரிமாணத்தில் இது மிகச் சிறியது என்றாலும் ,
மொத்தக் காற்றில் 75 சதவீதத்தை இவ்வடுக்கு
மட்டுமே கொண்டுள்ளது. நிலப்பரப்பின் சராசரி வெப்பநிலை
அருகிலுள்ள அடிநிலை அடுக்கின் வெப்பநிலையை விடக்
கூடுதலாக இருக்கிறது.இதற்குக் காரணம் அடிநிலை
அடுக்கு சூரிய ஒளியைச் சிதறலடிக்குமேயன்றி உறிஞ்சாது.
பூமியின் சராசரி வெப்ப் நிலை 300 K .அடிநிலை அடுக்கின்
உயரம் செல்லச் செல்ல ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு 6.5 K
வீதம் வெப்ப நிலை குறைகிறது. இவ்வடுக்கின்
உயர் எல்லையில் வெப்பநிலை 210 K.இவ்வுயரங்களில் பறக்கும்
விமானங்களில் தக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்யாவிட்டால்
குளிரால் உறைந்து போக நேரிடும் .
ஆனால் இரண்டாம் நிலை அடுக்கில் உயரத்திற்கு ஏற்ப
ஏற்படும் வெப்பநிலைச் சரிவு வெப்ப ஏற்றமாக மாறுகிறது.
நூறு கிலோமீட்டருக்கு அப்பால் அயன மண்டலம்
தொடங்குகிறது. இதில் அணுக்கள் அயனிகளாகப்
பகுக்கப்பட்டு இயங்குகின்றன .
இவற்றின் இயக்க வேகம் பல ஆயிரம் செண்டிகிரேடு
வெப்ப நிலைக்குச் சமமானது .எனினும் இவ்வுயரங்களில்
பூமியைச் சுற்றிவரும் செயற்கைக் கோள்கள்
உருகுவதில்லையே ஏன் ?
இயக்கத்தின் அடிப்படையில் வெப்பநிலையை மதிப்பிடுவது
வழக்கம் என்றாலும் அதிக உயரங்களில் காற்றின் அடர்த்தி
மிகவும் குறைவு. அதனால் ஓரலகு பருமனில் உள்ள
மூலக்கூறுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் .
இவற்றின் இயக்க வேகம் அதிகமாக இருந்தாலும் குறைந்த
அளவு மூலக்கூறுகளே செயற்கைக் கோளை மோதி
ஆற்றலைப் பரிமாற்றம் செய்யும்.இது அதன் வெப்பநிலையை
உயர்த்தி உருகச் செய்வதற்குப் போதுமானதாக இல்லை.
மாறாக செயற்கைக் கோள் மோதும் மூலக்கூறுகளிலிருந்து பெரும் ஆற்றலைவிடக் கூடுதலான ஆற்றலை வெப்பக் கதிர் வீச்சு
மூலம் இழக்கிறது .
(சூரிய ஒளியால் தாக்கப்படாத நிலையில் )
No comments:
Post a Comment