Tuesday, January 24, 2012

vinveliyil ulaa

ஹயாடெஸ்




ஹயாடெஸ்,80000 ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய
சூரியனுக்கு இன்னும் அருகாமையில் இருந்தது என்றும்
அப்போது அவை இரண்டிற்கும் இடைப்பட்ட தொலைவு
சுமார் 67 ஒளி ஆண்டுகள் என்றும் 65 மில்லியன் ஆண்டுகளாக
ஹயாடெஸ் நம்மிடமிருந்து விலகிச் சென்றதால்,விண்ணில்
அதன் தோற்றப் பரப்பு முழு நிலவின் தோற்றப் பரப்பைவிடக்
குறைவாக உள்ளது.இதிலுள்ள பிரகாசமான விண்மீன் வெறும்
கண்களுக்குத் தெரியும். அதன் தோற்ற ஒளிப்பொலிவெண்
12 ஐக் கொண்ட மங்கலான வின்மீனாகும்.

ஹயாடெஸ் ஏறக்குறைய ஒரேமாதிரியான விண்மீன்களாலான
ஒரு தொகுப்பு .இதிலுள்ள விண்மீன்கள் யாவும்,குளிர்ச்சியானதாகவும்
சிறிய அளவினதாகவும் ,இளமையானதாகவும் உள்ளன. இதில்
சூரியன் போல பல விண்மீன்களும் ,ஒரு சில பெருஞ் சிவப்பு
விண்மீன்களும் இருக்கின்றன. இதன் வயது ஏறக்குறைய
ஓராயிரம் மில்லியன் ஆண்டுகள் என மதிப்பிட்டுள்ளனர் .
பொதுவாகத் தனிக் கொத்து அல்லது அக அண்டக் கொத்து
விண்மீன் கூட்டம் ஓரண்டத்தின் தட்டுப் பகுதியில் அமைந்திருக்கும்.
இதில் பத்து முதல் சில நூறு விண்மீன்கள் தளர்ச்சியாகக் கட்டுண்டு
பெரும்பாலும் சீர்மையற்ற முறையில்,50 ஒளி ஆண்டுகள்
குறுக்காக உள்ள விண்வெளியில் மேகக் கூட்டம் போல சிதறிக்
கிடக்கும் வளிமங்கள் மற்றும் தூசிகளிலிருந்து இவையாவும் ஏறக்குறைய
ஒரேசமயத்தில் உருவாகின்றன .இப்படி உருவாவதற்கு அவை பல
நூறு மில்லியன் ஆண்டு காலத்தை எடுத்துக் கொண்டுள்ளன.
உண்மையில் பல நெபுலாக்களுக்கு மத்தியில் இது போன்று தனிக்
கொத்து விண்மீன் கூட்டங்கள் உருவாவதை ஆராய்ச்சி யாளர்கள்
கண்டறிந்துள்ளனர். தனிக் கொத்து விண்மீன்கள் கூட்டம் மெதுவான
இடப்பெயர்வுக்கு உள்ளாகின்றன. அருகருகே இருப்பதால் ஏற்படும்
குறுக்கீடுகள் ,நெபுலாவிலுள்ள ஊடகப் பொருளால் ஏற்படும்
இடையீட்டுச் செயல்களால் இக் கூட்டத்திலுள்ள சில உறுப்புகள்
புற வெளிக்குத் தப்பிச் செல்வதுண்டு

இதற்கு மிகச் சரியான எடுத்துக் காட்டாய் விளங்குவது ஹயாடெஸ்
மற்றும் பிளியாடெஸ் கொத்து விண்மீன் கூட்டங்களாகும்.
முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து
முட்டை வந்ததா ? முதலில் இருந்தது மரமா அல்லது விதையா? என்று
வேடிக்கையாகச் சிலர் வினவுவார்கள் .இதற்கு ஒப்புக் கொள்ளுமாறு
மிகச் சரியான விடையை எளிதாகக் கூறமுடியாது .அது போல
விண்மீன்கள் அழிந்து நெபுலா வந்ததா அல்லது நெபுலா திரண்டு
விண்மீன்களாக மாறியதா என்று கேட்பதும் இது போன்றதே .விண்மீன்
வெடித்துச் சிதறி நெபுலாவாக மாறுவதும் ,நெபுலா குளிர்ந்து சுருங்கி
விண்மீனாக உருமாறுவதும் இப்பிரபஞ்சத்தில் தொடர்ந்து
நிகழும் ஒரு நடைமுறைதான் .இந்த வகையில் ஹயாடெஸ் ,இப் பேரண்டம்
ஆதி காலத்தில் எப்படித் தோன்றியிருக்கும் என்பதைத் தெரிவிக்கும்
ஒரு காட்சியாக உள்ளது. பேரண்டத்தின் எல்லையை வரையறுப்பதில்
இது முக்கியப் பங்கேற்றுள்ளது

No comments:

Post a Comment