Monday, January 30, 2012

vinveliyil ulaa

பிளியாடெஸ்


பிளியாடெசின் முக்கிய விண்மீன்களுக்கு கிரேக்க புராணத்தில்
வரும் கதாபாத்திரங்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளன .அட்லஸ்
மன்னனுக்கும் பிளியோன் என்ற ராணிக்கும் பிறந்த
7 மகள்கள் இதில் வைரமாலையில் உள்ள வைரங்கள் போல
வரிசையாக உள்ள 7 விண்மீன்களைக் குறிப்பிடுவதாகக் கற்பிக்கப் பட்டுள்ளது .இளவரசிகளின் பெயர்களே

- அல்சியோன் ,டைகெட்டா ,மெரோப்,சிலானோ ,எலெக்ட்ரா ,
அஸ்ட்ரோப்,மற்றும் மாயா -

அந்த விண்மீன்களின் பெயர்களாயின.டாரஸ் வட்டார விண்மீன்
கூட்டத்தில் மங்கலாக ஒளிரும் ஏழு அழகான விண்மீன்களாக இவை அமைந்துள்ளன .இது பற்றி பைபிளில் ஓரிடத்தில் கூறப்பட்டுள்ளது.பிளியாடெஸ் என்றால் கிரேக்க மொழியில் கூட்டு
என்று பொருள் தமிழர்கள் இதை கிருத்திகா என்றும் சப்த கன்னிகள்
என்றும் கூறுவார்கள்.ஒரு காலத்தில் பிளியாடெசில்
உள்ள ஏழு விண்மீன்களும் சமமான பிரகாசத்துடன்
ஒளிர்ந்தன என்றும் ,பின்னர் மெரோப்,நோயாளியாக இறந்து
போகக் கூடிய நிலையில் இருந்த ஒரு மனிதனை மணந்து
கொண்டதால்,இந்த விண்மீன் மட்டும் மங்கியது
என்றும் காரணக் கதை கூறுவார்கள் .
ஒருவரின் கண்பார்வையின் கூர்மையை பரிசோதித்துப் பார்பதற்கு
பிளியாடெஸ் ஓர் இயற்கை சாதனமாக உள்ளது. பார்வைக் கூர்மையை அறிய ,பிளியாடெசில் எவ்வளவு விண்மீன்கள் இருக்கின்றன என்று
கணக்கிடச் சொல்வார்கள் .6 அல்லது 7 என்று எண்ண முடிந்தால்
அவருக்கு இயல்பான கண்பார்வை உள்ளது என்று
கூறலாம். இதை விடக் கூடுதலாக எண்ணிச் சொன்னால் அவருக்கு கூர்மையான பார்வை உள்ளது என்று கூறலாம்.அபரிதமான கண்பார்வை உடைய சிலர் இதில்10 விண்மீன்கள் வரை எண்ண முடியும். கலிலியோ தன்னுடைய கண்டுபிடிப்பான தொலைநோக்கி மூலம் இதில் மொத்தம் 36 விண்மீன்கள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளார் .

M .45 என்று பதிவு செய்யப்பட்டுள்ள பிளியாடெசில் பிரகாசமான
விண்மீன்கள் மெல்லிய நீல நிறத்துடன் ஈட்டா டாரி எனப்படும்
அல்சியோன் என்ற விண்மீன்தான். இது சற்றேறக் குறைய 368
ஒளி ஆண்டுகள் தொலைவில் தோற்ற ஒளிப்பொலிவெண் 2.85
உடன் காணப்படுகிறது. எலெக்ட்ரா ,371 ஒளி ஆண்டுகள்
தொலைவில் 3 .72 என்ற தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடனும்,
மாயா 360 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 87 என்ற தோற்ற
ஒளிபொலிவெண்ணுடனும் காணப்படுகின்றன.
பிளியாடெஸ் கொத்து விண்மீன் கூட்டத்தில் 7 வது பிரகாசமான
விண்மீன் பிளியோன் ஆகும். இதை 28 டாரி என்று குறிப்பிட்டுள்ளனர்.
387 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதன்தோற்ற
ஒளிப்பொலிவெண் 5.05 ஆகும். இது இன்னும்
முதன்மைத் தொடர் (Main sequence) விண்மீனாக உள்ளது.
காமா கசியோப்பியா போல இதுவும் Be வகை விண்மீனாக உள்ளது
இந்த விண்மீன் விண்ணியார்பியலாரையும்,வானவியலாரையும்
வெகுவாகக் கவர்ந்துள்ளது. இது மிக விரைவாகத் தற்சுழலும் ஒரு
விண்மீனாக விளங்குகிறது .நடுவரைக் கோட்டுப் பகுதியில் இதன் சுழற்சி வேகம் 330 கிமீ/வி என்ற அளவில் உள்ளது.
வெப்ப மிக்க வளிமத்தால் வளையத்தை உருவாக்கி .ஒரு புறக்
கூடுடைய விண்மீனாகத் தோற்றம் தருவதால் ,இது மிக அரியதொரு விண்மீனாகக் கருதப்படுகிறது.1888 முதல் பிளியோன் மூன்று வளிமக் கூடுகளாலான வளையங்களை இது போல உருவாக்கியுள்ளது. வளிமத்தை உமிழ்ந்து புறக் கூட்டை உருவாக்கும் ஒவ்வொரு முறையிலும் முதலில் பிரகாசமாக ஒளிர்ந்து பின்னர் பல மடங்கு பிரகாசம் மங்கிப் போனது .
அப்போது அதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 5.5 ஆக ,
இயல்புத் தோற்ற ஒளிப்பொலிவெண்ணைவிடத்
தாழ்ந்திருந்தது. இதற்குக் காரணம் விண்மீனால் உமிழப்படும் ஒளி புறக் கூடுகளினால் உட்கவரப்படுவதேயாகும் .பிரகாசத்தில் ஏற்படும் ஏற்றத்
தாழ்வு பிளியோனை ஒரு மாறோளிர் விண்மீனாக்கியுள்ளது

No comments:

Post a Comment