Thursday, April 3, 2014

Kavithai

எடுப்பதும் கொடுப்பதும்  


எள்ளளவும் படைப்பில் வேற்றுமையில்லை
எதிர்வரும் முடிவிலும் வேற்றுமையில்லை
எல்லோரும் ஓரிடத்திலிருந்தே பிரிந்தோம்
எப்படி வாழ்ந்தாலும் அவ்விடமே கூடினோம்

ஓரிடத்தை உலகம் என்பர் பலர்
ஒளியர் அதைக் கருவறை என்பர்
சுயம்வரம் முடிந்து விந்தும் முட்டையும் 
சுகங் கண்ட இருண்ட மண்டபம் 

ஒத்துக் கழித்து உடலுக்குள் குடியேறி  
ஒண்டியாய்ச் சில காலம் வாழ்ந்தோம்
தன்னுரிமை கொள்ள யாருமில்லையென
தன்னுடைமையால் அப்படிச் சொன்னோம் 

எதற்கும் ஒரு மூலம் இருக்குமென்றால்
அதற்கும் இயற்கையில் மூலம் இருக்குமே 
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் மட்டுமின்றி 
பிறவா உயிரில்லாப் பொருள் யாவுக்கும்

எல்லையிலா இந்தப் பிரபஞ்சவெளியே 
எல்லையில்லா திறந்தவெளிக் கருவறை.
தாயின் கருவறையில் ஒரு குழந்தை மட்டுமே 
பிரபஞ்சத்தின் கருவறையில் எல்லோரும் எல்லாமும் 

இறப்பிற்குப் பின்பும் பிறப்பிற்கு முன்பும்
இல்லாத வேற்றுமை எப்படி வந்தது
வாழும் போது எப்படி வளர்ந்தது
சாகும் போது என்னசொல்லிச் சென்றது

இருப்பும் உறுப்பும் வேறுபாடில்லை 
இன வேறுபாடுகள் இயற்கை கொடுத்தது 
வாழும் போது வாழ்க்கைக்கு பாதுகாப்பென
வரும் போது  சீதனமாய்த் தந்தது

வேறுபட்ட மனிதன் வேற்றுமைக்கு
வேறு விதமாய் விளக்கம் கொடுத்தான் 
மென்மேலும் வளர்த்துக் கொண்டான்
வன்மையால் தன்மையை இழந்தான்

வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள 
வழக்கமில்லா வழிமுறை பிடித்துப் போயிற்று 
வேற்றுமைக்கு அதுவே மூலமானது
ற்றுமைக்கு அதுவே பகையானது

அதிகம் சேர்த்தவன் அதிகம் கெடுப்பான் 
குறையச் சேர்த்தவன் குறையக் கொடுப்பான்
இதையே கீதை மொழியில் சொன்னால் 
எடுப்பது எவ்வளவோ கொடுப்பதும் அவ்வளவே 


No comments:

Post a Comment