Wednesday, August 26, 2020

God-14

 

கடவுள் -14

கடவுள் நம்பிக்கையும், கடவுள் அவநம்பிக்கையும் இன்றைக்கு மிகவும் போலித்தனமாகி வருகின்றது.  இந்த விஷயத்தில் ஏறக்குறைய எல்லோருமே வேஷமிட்டு  நடிக்கிறார்கள் என்று தான்  சொல்லவேண்டும். கடவுள் நம்பிக்கை பெரும்பாலும் மரபு வழியாகவே பின்பற்றப்படுகின்றது. அதனால் கடவுள் கொள்கையை உணர்த்தும் மெய்ப்பொருள் மெல்ல மெல்ல மனதை விட்டு அகன்று இன்றைக்கு அது மொத்தமாகக் காணாமற் போய்விட்டது. கடவுளை மறுப்பவர்களை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் கடவுள் நமபிக்கையை வளர்த்துக் கொள்வது  கடவுள் நம்பிக்கையாகாது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை வெல்வதை மட்டுமே வாழ்க்கைக் குறிக்கோளாக கொண்டு கடவுளை மறுப்பது கடவுள் அவநம்பிக்கையாகாது .இரு வகையினருமே ஒருவர் மற்றவரை வெல்வதற்காகவே கடவுளை ஒரு கருப்பொருளாக்கிக் கொண்டார்களே ஒழிய நம்பிக்கைக்காகவோ அல்லது அவநம்பிக்கைக்காகவோ இல்லை.

கடவுள் நம்பிக்கை என்பது கடவுளைத் தெரிந்து கொள்வதை விட , அறிந்து கொள்வதை விடப்  புரிந்து கொள்வதாகும் . கடவுள் கொள்கையின் மெய்ப்பொருள் கடுமையானதுமில்லை, விரிவானதுமில்லை .எல்லோராலும் புரிந்து கொண்டு வாழ்க்கையில் பின்பற்றத்தக்கவாறு மிகவும் எளிமையானது . ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய வேலைகளை அவரவர்களே செய்துகொள்ள வேண்டும் என்று கடவுள் மனிதனையும் பிற உயிரினங்களையும் படைத்தான். மனிதனைத் தவிரப் பிற உயிரினங்களெல்லாம் இதை நன்கு புரிந்து கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் இன்னும் புரிந்து கொள்ளாததுபோல் நடிக்கிறான் .தான் விரும்பும் எதையும் தன்னால் பெறமுடியும் என்ற நம்பிக்கையைத் தரக்கூடிய தகுதியை வளர்த்துக் கொண்டு தன்னோடு தான் வாழும் சமுதாயத்தையும் வளப்படுத்தி அதன் மூலம் தன எதிர்காலச் சந்ததியினரும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துபவனே உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவன் .இந்த மனப்பான்மை ஆன்மிக நூல்களைக் கற்பதால் மட்டுமே வருவதில்லை.இயற்கையைப் புரிந்து கொண்டு எண்ணங்களை வளப்படுத்திக் கொள்வதால் ஓரளவு தெரிந்து கொள்ள முடிகின்றது .

கடவுள் நம்பிக்கை எவ்வளவு போலியானது என்பதை பெரும்பாலான மனிதர்கள் பின்பற்றும் ஒரு இயல்பான செயல்முறையைக் கொண்டே விளக்கமுடியும்

ஒருவர் இனம்புரியாத ஒரு வகை நோயால் அவதிப்பட்டார் .கைவைத்தியம், மந்திரித்தல். நேர்த்திக் கடன் முடித்தல் ,பூஜை செய்தல் போன்றவற்றோடு மருத்துவர்களையும் பார்த்தார் .குணமாவதில் முன்னேற்றம் இல்லாததால் அடுத்தடுத்து வெவ்வேறு மருத்துவர்களைப் பார்த்து அவர்கள் தந்த பல்வேறு மருந்துகளையும் எடுத்துக்கொண்டார் . சில நாட்களில் அவர் கொஞ்சம் குணமானார். அடுத்தநாள் அவருடைய மனைவிக்கு அதே நோய் தொற்றிக் கொண்டது . ஆனால் அவரால் அந்த நோய் குணமாவதற்கான சரியான வழியைக் கூறமுடியவில்லை. எதிலாவது ஒன்றில் குணமாகும் என்ற நம்பிக்கையில்  ஒன்றில் கூட நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளாததின் பின்விளைவே இது.  பொதுவாகப்  புரிதலின்மை பெரிய அளவில் இருக்கும் போது அவநம்பிக்கையும் அப்படியே இருக்கும் .

கடவுளே எனக்கு லாட்டரியில் முதல் பரிசு கிடைக்கவேண்டும் .கடவுளே எனக்குத் தங்கச் சுரங்கம் போல புதையல் கிடைக்க வேண்டும் . கடவுளே எனக்கு ஒரு தேவதை வந்து பொன்னும் பொருளும் அள்ளித்  தரவேண்டும்.கடவுளே எனக்கு எது கேட்டாலும் அதைத் தரக்கூடிய அட்சய பாத்திரம் வேண்டும் . இப்படி கடவுளிடம் போய் கேட்பவர்கள் நிறையப் பேர். உழைப்பின் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாதவர்களே தகுதியை வளர்த்தும் பயன்படுத்தாமல் வீணடிக்கின்றார்கள்.

No comments:

Post a Comment