Wednesday, August 26, 2020

God-15

 ஆண்டுதோறும் கோயில் திருவிழாக்களில் கூட்டம் அலைமோதுகிறது.பணம் வசூலித்து கும்பாபிஷேகம் செய்கின்றார்கள். கடவுளுக்கு  நேர்த்திக்கடன் என்று கோயில் கோயிலாகச் செல்கின்றார்கள்.ஆன்மிகச் சுற்றுலா இன்றைக்கு அதிகரித்திருக்கிறது. கடிய நெடும் பயணத்தை மேற்கொள்ளக் கூடத்  தயங்குவதில்லை.நடைப் பயணமாக ஆன்மிகத் தளங்களுக்குச் செல்வது ,காவடி, பால்குடம் எடுப்பது தீ மிதிப்பது ,விரதம் இருப்பது ,எனக்  கடவுளை நண்பனாகிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். மெய்ப்பொருளை அறியாமல் கடவுளை நாடுபவர்கள் இரண்டு விதம். ஒரு வகையினர்  செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் என்று கடவுளுக்கு பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுக்கின்றார்கள் மற்றொரு வகையினர் உழைப்பைத் துறந்து விட்டு தன்னுடைய பிரச்சனைகளை எல்லாம் தீர்ந்து வைப்பார், கேட்பதையெல்லாம் இலவசமாகத் தருவார் என்று ஒவ்வொரு  கடவுளாக வணங்கி கொண்டே இருக்கின்றார்கள்    இதனால் மக்களுக்கு ஆன்மிக உணர்வும் , உண்மையான கடவுள் நம்பிக்கையும் மேலோங்கி வருகின்றனவா என்று கேட்டால் அதற்கு இல்லை என்ற பதில் வார்த்தையாக வெளிப்படாவிட்டாலும் ஒவ்வொருவருடைய மனதிலும் ஓங்கி ஒலிக்கவே  செய்கின்றது.

கடவுளை நம் முன்னோர்களுக்கு முன்னோர்கள் கடவுளை உண்டாக்கிச்  சமுதாய நலனுக்காக அறிமுகப்படுத்தினார்கள் .சிலர் மெய்ப்பொருளைத் தெரிந்து கொண்டு கடவுளை ஒப்புக்கொண்டார்கள்  பலர் சான்றோர் சொல் தவறக்கூடாது என்று   கடவுளை ஏற்றுக்கொண்டார்கள் .கடவுளால் தனிமனிதனுக்கு நேரடியாகப் பயன் கிடைக்குமோ இல்லையோ ஆனால் சாகாத சமுதாயத்திற்கு பாதுகாப்பு என்று எல்லோரும் நம்பியதால் காலங்காலமாய் கடவுள் மக்களால் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடவுள் வெறும் கடவுளாக மட்டும் இருந்த போது  எல்லோருக்கும் பொதுவானவர் என்ற நிலை இருந்தது. அவர் செல்வந்தராக நிலை மாறியபோது சுயநலவாதிகள் கடவுளைச்  சொந்தம் கொண்டாட முயற்சித்தனர். அச் செல்வத்தை அபகரிக்கவே இப்படி இவர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று பகைமை ஏற்பட ஆரம்பித்தது . அப்பொழுது தொடங்கி ,கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ,கடவுளை நம்பிக்கையற்றவர்கள் என்ற பிரிவினை தலையெடுத்தது. சிலர் பிரிந்து சென்று தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஒரு புதிய கடவுளை ஏற்படுத்திக் கொண்டார்கள் . உலகில் உள்ள எல்லோருக்கும் கடவுள் பொதுவானர் என்றால் பிரிவினைவாதிகள்  தங்களைக் கடவுளால்  முதன்மைப்படுத்திக் கொள்ள முடியாது போனது. அதனால் தனி மனிதர்களையே கடவுளாக்கிக் கொண்டு தனி மதத்தை தோற்றுவித்துக் கொடார்கள் . பிரிவினை அதிகரிக்க அதிகரிக்க கருத்து வேறுபாடு காரணமாக மக்களிடையே குழப்பம் மேலிட சண்டையும் சச்சரவும் இயல்பாகின. இரு வகையினருமே கடவுளின் மெய்ப்பொருளை அறியாமல் தொடர்ந்து கடுஞ் சொற்களால் சண்டைபோட்டுக் கொண்டு வருகின்றார்கள் .காலங்காலமாய்ப்  பின்பற்றி ஒழுகப்பட்ட ஒரு பழக்கம் திடிரென்று ஒருநாள் முட்டாள்தனமான பழக்கமாகிவிடாது. கடவுளின் மெய்ப்பொருளை அறியாமலேயே நீண்ட காலமாய் கடவுளை என்றுக்கொண்டதின் விளைவே இந்நிலை.

கடவுள் எப்பொழுது யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது ? ஏன் அறிமுகப்படுத்தினார்கள் ?இதன் பின்னணியை நுட்பமாய் ஆராய்ந்தால் நாம் கடவுள் பெயரால் சண்டையிட்டுக் கொள்வது எவ்வளவு தவறானது என்பதைப்  புரிந்து கொள்ள முடிகின்றது .கடவுள் நிச்சியமாக மனிதனின் படைப்பே,சமுதாயத்திற்கு நலம்பயக்கும் என்று உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையின் தோற்றமே கடவுளானது .கடவுள்  கொள்கையை ஒருவர் பின்பற்றும்போது  அவர் தனக்குத் தானே கடவுளாகிவிடுகின்றார். வேற்று மதத்தினர் இப்படிப்பட்ட மனிதர்களையே கடவுளாக்கி வணங்குகின்றனர்.

கடவுள் பலவாக இருந்தாலும், சிலையாக இருந்தாலும் , மதம் சார்ந்து மதத் தலைவர்களாக இருந்தாலும் அடிப்படையான கடவுள் கொள்கையில்  மாற்றமில்லை . ஒவ்வொரு மனிதனும் தீய செயல்களைச் செய்யாமல். நல்வழியில் வாழ்ந்து, பிறருக்கு முடிந்த உதவிகளை செய்து  தானும் தான் வாழும் சமுதாயமும் வளமோடு நிலைத்திருக்க கடவுள் கொள்கை துணைபுரிகின்றது இது  உண்மையில் ஒவ்வொரு மனிதனும் தங்கள் தரத்தை, தகுதிப்பாட்டை உயர்த்திக் கொள்ளும் வழிமுறையாகும். இயற்கையோடு ஒன்றிணைந்து ஒத்ததிரத் தூண்டும் மனப்போக்கு.இயல்பாக வாழும் கலையை தன்வசப்படுத்திக் கொள்ள தனக்குத் தானே வழிகாட்டிக்கொள்ளும் எளிய அணுகுமுறை. ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணங்களைத் தாங்களே தூய்மைப்படுத்திக்கொள்ள உதவும் உன்னதமான வழிமுறை .சாகாத சமுதாயத்தின் மூல மந்திரம் . 

புரிதலின்மையால் கடவுளை ஏற்றுக்கொண்டவர்களும் , கடவுளை மறுப்பவர்களை சண்டைபோட்டுக்கொள்கின்றார்கள் .இவர்கள்   கடவுள் கொள்கையின் மறைபொருளை தாங்களும் அறிந்துகொள்ளாமல் மற்றவர்களும் அறியமுடியாமற்  செய்துவிடுகிறார்கள்.

No comments:

Post a Comment