Saturday, August 22, 2020

god-9

கடவுள் -9

கடவுளை நாம் நிரூபிக்க வேண்டியதில்லை . ஏனென்றால் நிரூபித்தாலும், நிரூபிக்க முடியாவிட்டாலும் சமுதாய வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களுக்கு காரணங்களாக இருப்பதில்லை .ஆனால் அதை  விட  முக்கியமானதை நாம் பெரிதும் புறக்கணித்து விட்டோம். நாம் மனிதர்கள் என்பதை நம்மைப்  படைத்த கடவுளுக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது நிரூபிக்க வேண்டும். கடவுளின் வேலை நாம் வேண்டியதை நாம்வேண்டிய போதெல்லாம் தருவதில்i  இல்லை .மனிதனாகப் படைக்கப்பட்டவன் மனிதனாகவே  வாழவேண்டும்.  பேராசையாலும், பொறாமையாலும், கோபத்தாலும்,ஆணவத்தாலும்,சுய நலத்தாலும்  தடுமாறி இயற்கை தந்த தன் பிறப்பின் அடையாளத்தை இழந்துவிடக்கூடாது. அன்பு ,கருணை , மனித நேயம் ,பொது நலம் போன்றவற்றால் மெருகூட்டிக் கொள்ளவேண்டும் . கௌதம புத்தர் இதைத்தான்  அன்பே கடவுள் , அன்புதான் உலக மகா சக்தி  என்று சாதாரணம் மக்களும் புரிந்து கொள்ளுமாறு கடவுளை வருணிப்பார். உண்மையில் கடவுளுக்கு  கடுமையான விளக்கவுரை ஏதும் தேவையில்லை. அவை புரிதலை மட்டுப்படுத்தி கடவுள் ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தக்காரன் என்பதைப்போல அறிவிக்கக்கூடியதாக இருக்கின்றது. இயற்கையின் பாகுபாடற்ற தன்மையை புரிந்துகொள்ள முடியாமற் செய்து விடுகின்றது.

உடல் உழைப்பைவிட அறிவுக்கு ஆற்றல் அதிகம் . அறிவை விட உழைப்புக்கு விளை பயன் அதிகம் .அறிவை விட அன்பிற்கு ஆற்றல் அதிகம் . அன்பை விட அறிவிற்கு  விலை அதிகம் . அன்பைவிட ஆற்றலுள்ள ஒன்றை இன்னும் யாரும் இனமறியவில்லை .அன்பிற்கு  நிகர் அன்பு மட்டுமே. அப்படிப்பட்ட அன்பை இயல்பாகப் பெறுவதற்கு துணைபுரிவதே கடவுளின் வேலை.  புத்தர் போன்ற மா மனிதர்கள் அறிவியல் கற்ற அறிஞர்களில்லை. ஆனால் இயற்கையைப் பார்த்து  இயற்கையைப் படித்து , இயற்கையைப் புரிந்து கொண்டு ,இயற்கையாய் வாழ்ந்த போது  இயற்கையின் பேராற்றலைப் பெற்றவராகத் திகழ்ந்தார் .இயற்கையை ஆராய்ந்த அறிவியல் அறிஞர்கள் இயற்கையின் செயல் முறைகளை அறிந்து அறிவிப்பார்கள். அது தனிமனித முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் .ஆனால் சமுதாய முன்னேற்றத்தின்  பாதுகாப்பிற்குக்  காரணமாக இருக்கும் அடிப்படைகளை அவை தெரிவிப்பதில்லை .   அந்த வெற்றிடத்தை புத்தர் போன்ற இயற்கையைப் புரிந்துகொண்ட பேரறிஞர்களால் மட்டுமே ஈடுசெய்யமுடிந்தது.

பேரண்டத்தில் எங்கும் நிறைந்திருக்கும் அன்பு எப்படி வாழ்வியல் உண்மையை விளக்கிக்  கூறுகின்றது என்பதை  அறிந்துகொள்வோம் . மின்னூட்டங்களில் நேர், எதிர் என இரு வகையுண்டு . இவற்றுள் ஒத்த மின்னூட்டங்கள் எதிரிகளை ப்  போல விலகிச் செல்கின்றன .அப்படி விலகிச் செல்வதால் ஆக்கப்பூர்வமான செயல்கள் ஏதும் விளைவதில்லை.அவை மேலும் மேலும் விலகிச் செல்வதைத்தவிர வேற்றொன்றும் செய்வகில்லை.. ஆனால் நேர் மற்றும் எதிர் வகை மின்னூட்டங்கள் ஒன்றையொன்று நேசிப்பதால் , நெருங்கி வருகின்றன. அவை ஒன்றிணைந்து ஓர் அணுவை உருவாக்கும் போது வேற்றுமைக்குக்  காரணமான மின்னூட்டம் நடுநிலையாகி விடுகின்றது .இந்த நுண்ணிய அணுக்களே கட்டுமானம்  எதுவானாலும் அதற்குரிய அடிப்படை மூலப்  பொருளாகி விடுகின்றது . பகை அன்பாக மாறும் போது கூடவே ஆக்கமும் இணைந்துவிடுவதை இயற்கை படம்பிடித்துக் காட்டும் முறையே வித்தியாசமானதுதான்

நடு நிலையிலிருக்கும் அணுக்களின் ஆக்கத்திறன் மிகவும் அதிகம்  அணுக்கள் ஒன்றையொன்று நேசிப்பதால் விதவிதமான மூலக் கூறுகளாகி விடுகின்றன. ஒவ்வொரு மூலக் கூறுவிற்கும் ஒவ்வொரு பயன் .மூலக் கூறுகள் ஒன்றையொன்று நேசிப்பதால் விண்மீன்கள்  அண்டங்கள் தோன்றி. உயிரியல் மூலக்கூறுகளால் பல்லுயிரிகளின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் தொடங்கின .அண்டங்கள் ஒன்றையொன்று நேசிப்பதால் பேரண்டம்  தோன்றியது. அந்த நேசிப்பு மட்டும் இல்லாதிருந்தால் இந்த அண்டங்கள் எல்லாம் தாறுமாறாக இயங்கி ,ஒன்றோடொன்று முட்டி மோதி எப்போதோ அழிந்து போயிருக்கும். உயிரினங்கள் மடிவதுண்டு , விண்மீன்கள் வெடித்துச் சிதறுவதுண்டு . அவை அழிவென்றாலும் ஆக்கத்திற்கான அழிவு அழிவில் ஆக்கமும், ஆக்கத்தில் அழிவும் இருப்பதால்தான் ஒன்றின்  வளர்ச்சி தடையின்றி ஒரு தொடர்கதையாக இருக்கின்றது..

அன்பின் ஆற்றல் மகத்தானது  நம் கற்பனைக்கும் எட்டாதது  என்று சொல்லும் ஆன்மிகவாதிகளின் வாக்கை மெய்ப்பிப்பது போல  இன்றைக்கு சில விண்ணியற்பியலார் தங்கள் ஆய்வுரைகளை எடுத்துரைக்கின்றார்கள். பேரண்டங்களின் நேசிப்பால் இணைப்பேரண்டங்கள் இருக்கலாம் என்றும் இவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர் , வெளிக்கும் ஆற்றலுக்கும் உச்ச வரம்புண்டு என்று சொல்வோர் இதை நம்புவதில்லை ஆனால் பேரண்டங்களின் நேசிப்பு  வெளிக்கு எல்லையில்லை என்பதை  இயல்பாகவே தெரிவிக்கின்றது. கற்பனைக்கும் எட்டாத வெளியையும் , அங்கே கற்பனைக்கும் எட்டாத எண்ணிக்கையில் விண்மீன்களையும் (ஆற்றலையும்) ஒரு மூலமின்றி படைக்க இயற்கையால் முடியுமானால் அதனால் எல்லையற்ற வெளியையும், ஆற்றலையும் உருவாக்கமுடியும் என்பதும் சாத்தியமே.. இத்தகைய செயல்திறன் இயற்கைக்கு மட்டுமே உண்டு. ஒரு செயலைச் செய்ய யாரவது ஒருவர் காரணமாக இருக்க வேண்டும் . அது போல இப்பரந்த பிரபஞ்சமெங்கும் நிகழும் செயல்கள்  யாவும் சிறிதும் பிழையின்றி திருத்தமாக முழுமையாகச் செய்ய அளவற்ற ஆற்றல் கொண்ட யாரோ ஒருவரின் பின்னணி இருக்க   வேண்டும்  என்றும்  மாயத் தோற்றங் கொண்ட  அவரையே கடவுள் என்று கற்பித்துக் கொண்டார்கள். இயற்கையே கடவுளானது என்பது நடுநிலையாளர் களின்  சித்தாந்தம்          

No comments:

Post a Comment