Sunday, August 16, 2020

GOD-1

God-1

  ஆன்மிகத்தோடு   வளர்ந்து ,அறிவியலையும் முறையாகப்  பயின்றதால் கடவுளின் உட்பொருளை முழுமையாகப்  புரிந்துகொள்ள முடிந்தது. அதை இந்தத் தொடர் பதிவுகளில் பதிவு செய்ய விரும்புகின்றேன். முரண்பாடான  எண்ணங்களை வளர்த்துக் கொண்டு ஒருவரை ஒருவர் எதிரியாக நினைக்கும் இந்தச் சமுதாயத்தின் நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற என்னுடைய உள்ளார்ந்த விருப்பத்தின் வெளிப்பாடே இது.

“கடவுள் இருக்கின்றாரா ?”

 இருக்கின்றார் ,நிச்சியமாக. இருக்கின்றார்”

“அப்படியா ,எங்கே இருக்கின்றார் . உங்களால் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்க முடியாவிட்டாலும் காட்ட  முடியுமா ? “

“இருக்கின்றார் , எங்கும் இருக்கின்றார் . அதைத்தான் நம் முன்னோர்கள் தூணிலும் இருக்கின்றர் என்றும் துரும்பிலும் இருக்கின்றார் என்றும் கூறுவார்கள்

கண்ணால் காண்பது கூட பொய் என்று சொல்லும் இந்தக் காலத்தில்,மீண்டும் பக்த பிரகலாதன் போலவே பேசுகின்றீர்கள்.இது கடவுள்  இருக்கின்றார் என்பதற்கு எப்படி ஒரு சான்றாகும். நம்பிக்கையில்லை  என்ற நிலையில் வெறும் வார்த்தைகள் மட்டுமே நம்பிக்கையூட்டுவதற்குப் போதுமானதில்லை. கோடிக்கணக்கான ஆண்டுகளில் கடவுளை ஒரு வினாடி கூடக்  காட்ட முடியாவிட்டால் . நீங்கள் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ளா விட்டாலும்  அது கடவுள் இல்லை , இல்லவே  இல்லை என்பதற்குச் சமமானதுதான். ”   

 

நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சரி. கடவுள் இல்லை என்று சொல்வதும் தப்பில்லைதான்”. முடிவு எடுக்கத் தெரியாதவர்களும், சரியான பதில் அறியாதவர்களும் மக்களை இப்படித்தான் குழப்புவார்கள் .ஒன்று   கடவுள் இருக்க வேண்டும்  அல்லது இல்லாமலிருக்க வேண்டும் .முரண்பாடான  இந்த பதில்கள்  மக்களை ஏமாற்றி ஏமாளியாகவே வைத்திருக்கச் செய்யும் முயற்சியாகிவிடும். புரிந்து கொள்ள முடியாத முரண்பட்ட கருத்துக்களினால் மேலும் குழப்பமே ஏற்படும்    குழப்பி விடுவதுடன்  கடவுளைப் பற்றிய  உண்மைகளை அறிந்துகொள்ள முடியாமல் தடுத்தும் விடுகின்றது.

கடவுள் இருக்கின்றார் , கடவுள் இல்லை என்ற பதில்கள் ஒருவரிடமிருந்தே வருவதில்லை. இதற்குக்  காரணம் ஒவ்வொருவரும்  ஒரு நம்பிக்கையில் ஒரு கருத்தை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் அறிவை மட்டுமே பெற்றிருக்கின்றார்கள் . எதையும் தெரிந்து கொள்வதை விட , அறிந்து கொள்வதை விட புரிந்து கொள்ள வேண்டும் . வெறும் நம்பிக்கை புரிதலைத்  .தருவதில்லை . புரிதலின்றி ஒன்றின் பயனை அடைவதும் முடிவதில்லை அறிவு ஒரு கருத்தை மட்டுமே ஒப்புக் கொள்ளும். ஆனால் புரிதல் இருவேறு கருத்துக்களையும் சமப்படுத்தி விடும். அறிவியலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆற்றலும் பொருளும் ஒன்றே என்றார். ஆற்றல் திரண்டால் பொருள் ,பொருள் சிதைந்தால் ஆற்றல்.ஒரே மூலத்தின் இருவேறு நிலைகளே ஆற்றலும் பொருளும். அவற்றை ஒருவர் தனித்தனியாகவும் பார்க்கலாம்,ஒன்றாகவும் பார்க்கலாம்.

ஐசக் நியூட்டன் ஒளி அலையில்லை அது  துகளாக இருக்கின்றது என்றார் குவாண்டம் இயக்கவியலில் அலையும்  துகளும் ஒன்றே என்றார்கள்.மூலத்தை மறந்துவிட்டால் பலவற்றில் ஒன்றிருப்பதும் ,ஒன்றில் பல இருப்பதும் கண்ணுக்குக்குப் புலப்பட்டுத் தெரிவதில்லை என்று அறிவியல் அறிஞர்கள் கூறுவார்கள் அந்த அறிவியல் உண்மை கடவுளின் கண்ணாமூச்சி விளையாட்டிலும் நிஜமாகிறது. நுணுகி ஆராய்ந்தால் அறிவியல் கூட ஆன்மிகத்திற்குள்  உள்ளடங்கிவிடுகின்றது.

கடவுளைப்   புரிந்து   கொள்வதால் தனி மனிதனுக்கு அல்லது சமுதாயத்திற்கு என்ன பயன் ? புரிந்து கொள்ளா   விட்டால் என்ன  இழப்பு வந்து விடப் போகின்றது ? பொருளற்ற பயனால் பெரிதாக பயன் விளைவதில்லை  அதுபோல பொருளற்ற இழப்பால் பாதிக்கப்படுவதும் இல்லை என்று நினைத்து சமாதானப்படுத்திக் கொள்வதால் , அதன் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் உணரத் தவறிவிட்டார்கள்.

கடவுள் இருக்கின்றார் என்றால் அது புறவெளியிலில்லை , அகவெளியில் என்பதை  நாம்  புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் வெளிக்கு புற வெளி , அகவெளி என்ற வேறுபாடு கிடையாது . ஒவ்வொரு மனிதனும் தன்னால் ஆக்கிரமிக்கப்பட்டு  காணமுடியதா   வெளியை அகவெளி என்றும், அவனால் அடைபட்ட வெளி நீங்கலாக உள்ள பிரபஞ்ச வெளியை புற வெளி என்றும் கூறலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் அகவெளி  என்பது அவனுடைய மனமே .கடவுளைப்  புற  வெளியில் தேடித் தேடி ஏமாந்து போவது இதை புரிந்து கொள்ளாததினால் ஏற்படும்  விளைவே

 .இறைவனை உணர்ந்து இயற்கையை அறிந்து தானும் இயற்கையாகவே மாறும் போது கிடைக்கின்ற பேரின்பம்  ஒன்று மட்டுமே இல்லற சுகத்தைக் காட்டிலும் உயர்வானது  என்பதை அறியத் தவறிவிடுகிறார்கள். பேரின்பத்தை  உணர உணர சமுதாயத்தின் வளர்ச்சி கூட இயற்கையோடு ஒன்றிப்போகின்றது .சாகாத சமுதாயத்திற்கு இது ஒன்றுமட்டுமே உறுதியளிக்கக் கூடியதாக இருக்கின்றது அதைப்  பற்றி இனி விரிவாகக்  காண்போம் ..       

                                                                           கடவுளைப்  புரிந்து கொள்வோம் ........

No comments:

Post a Comment