Friday, October 28, 2011

vinveliyil ulaa

1953-ல் டச்சு நாட்டு வானவியலாரான பிளாவ்(Blauw) பெர்சியஸ்-II
(Perseus-II)தொகுப்பில் உள்ள விண்மீன்கள் ஒவ்வொன்றும்
மையத்தை விட்டு வெவ்வேறு திசைகளில் விலகிச் செல்கின்றன
எனக் கண்டறிந்துள்ளார்.

படத்தில் காட்டப்பட்டுள்ள புள்ளிகள் விண்மீன்களையும் ,அம்புக்குறி
விலகிச் செல்லும் திசையையும்
அதன் நீளம் 500 ,000 ஆண்டுகளுக்குப் பிறகு அவை நிலை
கொள்ளுமிடத்தையும் குறிப்பிடுகின்றன. .பிளாவ்
இந்த இணைத் தொகுப்பிலுள்ள விண்மீன்கள் யாவும் 12 கிமீ/வி
என்ற சராசரி வீதத்தில் விரிவடைந்து கொண்டிருக்கின்றன
என மதிப்பிட்டுள்ளார்.இக் கணக்கீடு சுமார்
1,300,000 ஆண்டுகளுக்கு முன்னர்,இத் தொகுப்பிலுள்ள
விண்மீன்கள் யாவும் அதன் மையத்தில் ஒருங்கிணைந்து
செறிவான ஒரு சிறிய ஒளிப் புள்ளியாக தோன்றி இருந்திருக்கும்
எனத் தெரிவிந்த்துள்ளது .அதாவது இத் தொகுப்பு சுமார் 1,300,000
ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி பரிணாம
வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சாதாரணமாக ஒரு
விண்மீனைப் பொறுத்த வரையில் இது மிகவும் குறுகிய
காலமே .பொதுவாக ஒரு விண்மீனின் சராசரி வாழ்வுக்
காலம் சில பத்தாயிரம் மில்லியன் ஆண்டுகள் என்பதால் ,
பெர்சியஸ் - II ல் உள்ள விண்மீன்கள் யாவும் புதிதாய்
பிறந்தவை என்றே கருத வேண்டியுள்ளது .

பெர்சியசின் வாள்நுனியை பை (φ) பெர்சி என்ற விண்மீன் அலங்கரிக்கிறது.
இதன் தோற்ற ஒளிப்பொலிவெண்
(magnitude)4 ஆகும். இதற்கு வெகு அருகாமையில் M 76 என்று
குறிப்பிடப்படுகின்ற கோள் வடிவ நெபுலா ஒன்றுள்ளது .
இதில் மையமாக ஒரு துடிப்பு விண்மீனும் (Pulsar) அதைச்
சுற்றி ஒரு வட்ட வளையக்கூடு வடிவில் வளிமத்தாலான
நெபுலாவும் இருக்கும்.இந்த நெபுலா ,மைய விண்மீன் உமிழும்
ஒளியால் பிரகாசிக்கின்றது .வாளை அலங்கரிக்கும்
மற்றொரு விண்மீன் மிராம்(Miram) என அழைக்கப்படும் ஈட்டா( η )
பெர்சியாகும்.இது 3.77 என்ற தோற்ற
ஒளிப்பொலிவெண்ணுடன் 1330 ஒளி ஆண்டுகள் தொலைவில்
உள்ளது .

மதுசாவின் தலைப் பகுதியில் ரோ( ρ ) பெர்சி என்றொரு
விண்மீன் உள்ளது .இது பிரகாசம் மாறிமாறி ஒளிரும்
பெருஞ் சிவப்பு விண்மீனாகும்.இதன் உருவ அளவு வட்டச்
சுற்று முறையில் தொடர்ந்து மாறிக்கொண்டே
இருப்பதால் இதன் தொடர ஒளிப் பொலி வெண் 3.3லிருந்து
4 வரை ஏழு வாரங்களுக்கு ஒரு முறை ஏற்றத்
தாழ்வுடன் மாறுகிறது.கோர்கொனியா டெர்டி(Gorgonea Terti)
எனப் பெயரிடப் பட்ட இந்த விண்மீன் 325 ஒளி ஆண்டுகள்
தொலைவில் உள்ளது .

இவ் வட்டாரத்திலுள்ள மிசாம் என்ற கெப்பா (κ) பெர்சி 112
ஒளி ஆண்டுகள் தொலைவிலும் அட்டிக் என்ற உமிகிறான்( ο )
பெர்சி 1480 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் மென்கிப் என்ற
இக்ஸி (ξ) பெர்சி 1770 ஒளி ஆண்டுகள் தொலைவிலும்
டெல்டா (δ) பெர்சி 528 ஒளி ஆண்டுகள் தொலைவிலும்
எப்சிலான் (ε) பெர்சி 538 ஒளி ஆண்டுகள் தொலைவிலும்
உள்ளன .

M 34 என்று பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு தனிக் கொத்து
விண்மீன் கூட்டம் 1400 ஒளி ஆண்டுகள் தொலைவில்
விண்வெளியில் ஒரு முழு நிலவின் பரப்பில் அல்கோலுக்கும்,
காமா ஆண்ட்ரோமெடே விண்மீனுக்கும் இடையில் உள்ளது .
இதிலுள்ள பிரகாசமான விண்மீன்களின் தோற்ற
ஒளிபொலிவெண் 7 ஆக உள்ளது. இதில் பல இரட்டை
விண்மீன்களாக உள்ளன.

Monday, October 24, 2011

arika ariviyal

ஓடும் வண்டியில் ஏற்றப்பட்ட சிலிண்டர்

வெப்ப நிலை என்பது ஒரு வளிமத்திலுள்ள துகள்களின் சராசரி இயக்கத்தோடு
தொடர்புடையது.வெப்ப நிலை அதிகரிக்க இந்தச் சராசரி இயக்கமும் அதிகரிக்கிறது.
ஒரு கலனில் அடைக்கப்பட்ட வளிமத்தை ஓடும் வண்டியில் ஏற்றினால் அது
வண்டியின் இயக்கத் திசையில் இயக்கத்தைப் பெறுகிறது. இதனால் அதன்
வெப்பநிலை உயருமா ?

அதன் வெப்பநிலை உயராது. ஏனெனில் வளிமத்தின் இயக்கவாற்றல்
கொள்கைப்படி,வளிமத்தின் வெப்பநிலை என்பது நிறைமையத்தைப் பொறுத்து
அதன் இடப்பெயர்வு இயக்க ஆற்றலால் தீர்மானிக்கப் படுகிறது.நிறை மையத்தின்
இயக்கத்தால் ,வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுவதில்லை.இதனால் வளிமத்தின்
வெப்பநிலையில் ஏற்றமோ அல்லது இறக்கமோ காணப்படுவதில்லை .

ஒரு லிட்டர் பெட்ரோலும் கடக்கும் தொலைவும்

முதலில் ஒரு லிட்டர் குளிர்ந்த பெட்ரோலில் ஒரு கார் ஓடுகிறது.எரிபொருள்
தீர்ந்தவுடன் ஒரு லிட்டர் சூடான பெட்ரோல் போடப்படுகிறது. எந்த
எரிபொருளுக்கு காரின் ஓட்டத் தொலைவு அதிகமாக இருக்கும் ?அல்லது
அப்போதும் சம ஓட்டத் தொலைவைத் தருமா ?

குளிர்ந்த பெட்ரோல் அதிக அளவு ஓட்டத் தொலைவைத் தரும். ஏனெனில்
ஒரு லிட்டரில் அதிக அளவு பெட்ரோல் மூலக் கூறுகள் அடங்கி இருக்கின்றன.
பெரும்பாலான பொருட்களைப் போல பெட்ரோல் வெப்ப நிலை அதிகரிப்பிற்கு
விரிவடைகிறது. பரும அளவியும் இதை ஈடுகட்டும் விதமாக விரிவடைவதில்லை.
எனவே சூடான பெட்ரோலுக்கு கார் கடக்கும் தொலைவு சற்று
குறைவாக இருக்கும் எனலாம் .

Saturday, October 22, 2011

eluthatha kaditham

எழுதாத கடிதம்

குறை கூறுவதைத் தவிர்த்து விட்டு நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடுங்கள் என்று
இந்தியப் பிரதமர் அவர்கள் கூறியுள்ளார்கள்.அவரைப்பற்றி பல அரசியல்
தலைவர்களும் குறை கூறும் கால கட்டத்தின் உச்சக்கட்டத்தில் அவருடைய
இக் கருத்து வெளிப்பட்டிருக்கிறது. இக் கூற்றில் மறைந்திருக்கும் இரண்டு
செய்திகள் என்னை இதை எழுதத் தூண்டியிருக்கிறது .

அரசியல் தலைவர்கள் தங்கள் சொல்வதையெல்லாம் நாட்டின் வளர்ச்சிக்காக
என்றே கூறுவார்கள்.வெறும் சொற்கள் மட்டுமே நாட்டை வளர்ச்சிப் பாதையில்
எடுத்துச் செல்லாது. அதில் அவர்களுக்கே உண்மையான நம்பிக்கை
இருக்கவேண்டும். தன்னுடைய கருத்தைச் சொல்லிவிட்ட பிறகு அது
செயல்முறைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறதா என்பதையும்
முறையாகக் கண்காணிக்க வேண்டும்.நான் சொல்லிவிட்டேன் அதைச் செயல்
படுத்துவது மற்றவர் கடமை என்று தன்னை ஒதுக்கிக் கொண்டுவிடக்கூடாது .

முதலாவது குறை குறை கூறுவதை விட்டு விடுங்கள் என்பதாகும்.
இல்லாத குறைகளைச் சொல்வதை வேண்டுமானால் விட்டுவிடலாம்.
உண்மையில் இருக்கும் குறைகளை கூறாது விட்டுவிட்டால் அக்குறை
மென்மேலும் தன்னூக்கப்பட்டு வளர்ச்சி பெறாதா. அப்படித்தான் இன்றைக்கு
நாட்டில் ஊழலும் தனி மனிதன் தாங்க முடியாத சுமுதாயக் குற்றங்களும்
பெருகியுள்ளன.சிறிய அளவிலான ஊழலை இப்படி யாரும்
கண்டுகொள்ளாததால் அது பெரிய அளவில் வளர்ந்து போனது. பெரிய
அளவில் நடைபெற்ற எந்த ஊழலையும் அரசே கண்டு வெளிப்படுத்தியதாக
சான்றே இல்லை. அதையெல்லாம் மக்களே கண்டு வெளிப்படுத்தி
இருக்கிறார்கள் .மக்களால் இன்னும் கண்டு கொள்ளப்படாத ஊழல்கள் எல்லாம்
இன்னும் இலை மறைவாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இவை எல்லாம் என்றைக்கு நாட்டையே விழுங்கப்போகிறதோ .

அங்குமிங்குமாக நடைபெற்ற ஊழல்களும்,குற்றங்களும் இன்றைக்கு அன்றாடம்
எங்கும் நிகழ்வது வாடிக்கையாகி விட்டது.இல்லாத குறைகளை கூறாது விட்டு
விடலாம். ஆனால் உண்மையிலேயே இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டது
விட்டு விட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் அக்கறை காட்டாமல்
இருப்பதற்கு இவை தனி மனிதரின் விஷயங்கள் இல்லை.

மற்றொன்று நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுங்கள் என்று முதல்வர்களுக்கு
அழைப்பு விடுத்திருப்பது .இது நாடு உண்மையிலேயே வளர்ச்சியடையவில்லை
என்றெண்ணும் மனதி வெளிப்பாடாகும் .வளர்ச்சியை வரையறை
செய்யாமல் விவரிக்கும் போது அதன் உண்மைநிலை படித்தவர்களுக்குக்
கூடப் புரிவதில்லை .

நம்மை விட மக்கட்தொகை மிக்க சீனாவின் வளர்ச்சியை ஒப்பிட,
இந்தியாவின் வளர்ச்சி ஒன்றும் பெரியதாக இல்லை.எத் துறையை எடுத்துக்
கொண்டாலும் அதில் சீனா மேலோங்கியே இருக்கிறது. மக்கட் தொகை
வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருக்கிறது என்று அவர்கள் எதிர்மறையாக
எடுத்துக் கொள்ளாமல் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு வளர்ச்சிப் பாதையில்
முன்னேறி வருகிறார்கள்.கட்டுமானப் பணிகள் ,தொழிற் சாலைகள் ,உற்பத்தி ,
பாதுகாப்பு,வர்த்தகம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதில் அவர்கள்
தங்களை முதன்மைப் படுத்திக் கொண்டு வருகிறார்கள் .அவர்கள் வளர்ச்சியைக்
கண்டு பல மேலை நாடுகள் அச்சம் கொண்டுள்ளன .

முறையான திட்டங்களும் உண்மையான ஈடுபாடும் இல்லாமல் அத்தகைய
உறுதியான வளர்ச்சியை இந்தியா பெறவே முடியாது.
ஊழல்களை மறைத்து விடுவதால் .ஊழல் நடைபெறவே இல்லை என்ற
எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திவிட முடியும் .ஆனால் ஊழல்
மக்களிடையே மகத்தான வளர்ச்சி பெரும் .அதற்க்கு ஊழலைக்
கண்டுகொள்ளாத அரசே காரணமாக இருக்கமுடியும் .
சுய ஒழுக்கமும் ,சட்டமும் ஊழலைக் கட்டுப்படுத்த முடியாத போது
அதை ஓரளவாவது கட்டுப்படுத்தக் கூடும் என்ற நம்பிக்கையைத் தருவது இந்த
உண்மையான மக்கள் மன்றக் குற்றச் சாட்டுகளே .

Friday, October 21, 2011

arika ariviyal

கொதிக்கும் நீரால் நீரைக் கொதிக்க வைக்க முடியுமா ?

ஒரு சிறிய கலனில் குளிர் நீரை எடுத்துக் கொண்டு, அதை ஒரு பெரிய கலனில் கொதித்துக்
கொண்டிருக்கும் நீரில் ,நீரோடு நீர் கலவா வண்ணம் வைக்கப்படுகிறது. குளிர் நீரின்
வெப்ப நிலை அதிகரிக்கும். அது 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தொட்டு
கொதிக்குமா ?

கொதி நீரால் குளிர் நீரைக் கொதிக்க வைக்க முடியாது. தூய நீர் இயல்பான சூழலில்
100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் கொதிக்கிறது. தொடக்கத்தில் வெப்பக்கடத்தல்
மூலம் கொதி நீரிலிருந்து குளிர் நீருக்கு வெப்பம் கடத்தப்படுவதால் அதன் வெப்ப நிலை
100 டிகிரி செல்சியஸ் வரை உயரும். நீரை ,நீராவியாக்க 100 டிகிரி வெப்ப நிலையில்
அதற்குக் கூடுதல் ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றலைக் கொதி நீர் வெப்ப
மூலத்திலிருந்து எடுத்துக் கொள்வதைப் போல ,குளிர் நீர் ,கொதி நீரிலிருந்து \
எடுத்துக் கொள்ள முடிவதில்லை. ஏனெனில் வெப்ப மானது சம வெப்ப நிலையில்
உள்ள இரு பொருட்களுக் கிடையேயும் , தாழ்ந்த வெப்ப நிலையிலிருந்து உயர்ந்த
வெப்ப நிலை யுடைய இரு பொருட்களுக்கிடையேயும் பாய்வதில்லை

Saturday, October 15, 2011

arika ariviyal

வேலையின்றி விரிவாக்கம்

ஒரு வளிமம் விரிவாக்கம் பெரும் போது,அதிலுள்ள
மூலக்கூறுகளுக்கு இடையேயான ,சராசரி இடைவெளி
அதிகரிக்கிறது .இந்த விரிவாக்கம் சுற்றுப் புறத்திலுள்ள
மூலக்கூறுகளை நெறுக்குகிறது என்பதால் புற அழுத்தத்திற்கு
எதிராக வேலை செய்ய வேண்டியிருக்கிறது .விரிவாக்கத்தின்
போது வளிமம் வேலை ஏதும் செய்யாமல்
ஒரு விரிவாக்கத்தைப் பெற முடியுமா ? பொதுவாக
பேரண்டத்தில் வளிமம் இப்படி விரிவடைவதும் ,சுருக்குவதும்
உண்டு.அப்போது அது வேலை செய்வதற்கான ஆற்றலை
எங்கிருந்து பெறுகிறது ?

வெற்றிட வெளியில் ஒரு வளிமம் விரிவாக்கம் பெரும்
போது அது புற வேலை ஏதும் செய்வதில்லை.

வளிமமா அல்லது ஆவியா ?

காற்றை வளிமம் (gas ) என்றும் அதில் அடங்கியுள்ள நீராவியை
ஆவி (Vapour ) என்றும் கூறுகின்றோம் .வளிமமும் ,நீராவியும்
வளிம நிலையில் இருக்கின்ற பொருளைக் குறிக்கின்றன .
இவை இரண்டிற்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கின்றதா ?
இல்லையென்றால் வேறுபாடின்றி இச் சொற்களைப்
பயன்படுத்தலாமா ?

வளிமம் ,ஆவி இரண்டிற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது.
வளிம நிலையில் இருக்கும் எப்பொருளுக்கும் ஒரு மாறு
நிலை வெப்பநிலை (Critical temperature) உண்டு .இந்த
வெப்ப நிலைக்கு மேற்பட்ட வெப்ப நிலைகளில் ,அந்த
வளிமத்திற்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும்
நீர்மமாக(Liquid) மாற்ற முடியாது. எனவே ஆவி என்பது
மாறு நிலை வெப்ப நிலைக்குக் கீழ் உள்ள வளிம நிலைப்
பொருளாகும்.நீரின் மாறு நிலை வெப்ப நிலை 647.2 K.அதனால்
நீராவி என்கிறோம் .காற்றின் மாறு நிலை
வெப்ப நிலை 132.5 K,ஹைட்ரஜனுக்கு இது 33.2 K,
ஹீலியத்திற்கு இது 5.3 K.எனவே அறை வெப்ப நிலையில்
இவற்றை வளிமம் என்று மட்டுமே கூறலாம் .

Friday, October 14, 2011

vinveliyil ulaa

அல்கோலின் உண்மை நிலை

இரட்டை விண்மீனாகத் தோன்றும் அல்கோலும் ,அதன் துணை
விண்மீனும் மாறுபட்ட பண்புகளை உடையனவாக இருப்பினும் ,
அவை இரண்டும் சம காலத்தில் தோன்றி உருவானவைகளே என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.அல்கோலின் துணை விண்மீன்
ஒரு காலத்தில் அல்கோலைவிட நிறைமிக்க, வெப்பமிக்க
விண்மீனாக இருந்திருக்க வேண்டும். அது
தன்னுடைய ஹைட்ரஜன் இருப்பை எரித்து தீர்த்தவுடன் எலக்ட்ரான்
Electron) பெர்மி(Fermi)அழுத்தத்தால் ஈர்ப்புச் சுருக்கத்திற்கு
(Gravitational contraction) எதிராக விரிந்து பெருஞ் சிவப்பு
விண்மீனாக மாறியது. அப்போது அதன் மூலப்பொருட்களால் அதன்
உருவம் சீர்குலைவிற்கு ஆளாகத் தட்டையான கோளமாக
உருமாறியது. இதன் விளைவாக அதிலிருந்து மூலப்பொருட்களில்
ஒரு பங்கு வெளியேற அதை அருகிலுள்ள அல்கோல் உட்கவர ,
மூலப்பொருள் பரிமாற்றம் நிகழ்ந்தது .அதாவது முதன்மை
விண்மீன் துணை விண்மீனாகவும் துணை விண்மீன் முதன்மை
விண்மீனாகவும் நீண்ட காலத்திற்குப் பிறகு மாற்றம் பெற்றன .

1955 க்குப் பிறகு விண்ணில் செயற்கைக் கோள்களைச்
செலுத்தி எக்ஸ் கதிர் வானவியல் (X-ray astronomy)
மூலம் விண்வெளியை ஆராயும் நுட்பம் வளர்ச்சி பெற்றது.
எக்ஸ் கதிர்களை உமிழும் விண்மீன்கள் பலவற்றை இன்றைக்கு இனமறிந்துள்ளனர்.பெரும்பாலான எக்ஸ் கதிர் உமிழும்
விண்மீன்கள் இரட்டை விண்மீன்களாக உள்ளன. அதிலொன்று
மிகச் சிறியதாக 10 -20 சூரிய நிறையுடன்(solar mass) கூடிய
இருண்ட நியூட்ரான் (Neutron ) விண்மீனாகவும் மற்றொன்று
20 -30 சூரிய நிறையுடன் இயல்பான ஹைட்ரஜன் எரிதல்
தொடரும் விண்மீனாகவும் இருப்பது அறியப்பட்டது .
இக் கண்டுபிடிப்பு அல்கோலுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கத்தை
உறுதி செய்தது .

பெர்சியஸ் வட்டாரத்தில் கசியோப்பியா









பெர்சியஸ் வட்டார விண்மீன் கூட்டத்திற்குச் சற்று விலகி
இருக்கும் மற்றொரு வட்டார விண்மீன் கூட்டம்
கசியோப்பியாவாகும் .ஆல்பா பெர்சி என்ற விண்மீனுக்கும் ,
டெல்டா கசியோப்பியாவிற்க்கும் நடுவில் தனிக் கொத்து
விண்மீன் கூட்டம் ஒன்று உள்ளது . இதை அண்ட வெளிக்
கொத்து விண்மீன் கூட்டம் (Galactic cluster ) என்றும் கூறுவர்.
இது தெளிவான விளிம்பு இல்லாத நீள் வட்ட வடிவில்
ஒளிரும் ஒரு சிறிய மேகக் கூட்டம் போலக் காட்சி தருகின்றது.
உணர்வு நுட்பம் மிக்க தொலை நோக்கியால் பார்த்த போது
அது பல நூற்றுக் கணக்கான ஒளிப் புள்ளிகளாகப்
பகுக்கப்பட்டுத் தெரிந்தது. உண்மையில் இது இரு வேறு
மையத்தைப் பற்றிச் சுருங்கும் இரு தனிக் கொத்து விண்மீன்
கூட்டங்கள் என்பதி அப்போது தெரிந்து கொண்டனர் .
இதை NGC 869 ,NGC 884 என்று அட்டவணைப் படுத்தியுள்ளனர் .
ஒன்றுக்கொன்று மிக அருகாமையிலுள்ள இவ்விரு
தனிக் கொத்து விண்மீன் கூட்டங்களை கை(X)மற்றும் எச்(h)
பெர்சி என அழைக்கின்றார்கள். இவ்விரு விண்மீன் கூட்டங்களும்
சம தொலைவில் இருப்பது போலத் தோன்றினாலும்
57 ஒளி ஆண்டுகள் விட்டமுள்ள ஓரளவு கோளவடிவமுள்ள
எச் பெர்சி 6365 ஒளி ஆண்டுகள் தொலைவிலும்
47 ஒளி ஆண்டுகள் விட்டமுள்ள ஓரளவு கோளவடிவமுள்ள
கை பெர்சி 6700 ஒளி ஆண்டுகள் தொலைவிலும்
உள்ளன

இக் கொத்து விண்மீன் கூட்டங்களின் மையங்களில் விண்மீன்கள்
செறிவுற்றும் மையத்திலிருந்து விலகிச் செல்ல
விட்டு விட்டும் உள்ளன. பிரகாசமிக்க தனிக் கொத்து விண்மீன்
கூட்டங்களுள் இவையிரண்டும் பிரகாசமான
விண்மீன்களால் நிறைந்தவைகளாகும். எச் பெர்சியில் 300 விண்மீன்களும் ,கை பெர்சியில் 200 விண்மீன்களும் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர் .


இவ்விரு கொத்து விண்மீன் கூட்டங்களின் மையப் பகுதியில் வெப்ப மிக்க மாபெரும் விண்மீன்கள்
அதிகமுள்ளன .குறைந்தது 75 இருக்கலாம் எனக் கணக்கிட்டுள்ளனர். மாபெரும் விண்மீன்கள்
விண்வெளியில் மிகவும் அரிதாகக் காணப்படுபவை .இவை இக்கொத்து விண்மீன் கூட்டங்களில்
திரண்டு காணப்படுவது விண்ணியலாரை பெரும் வியப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. வெப்ப மிக்க
வின்மீகள் பெரும்பாலும் O -வகை விண்மீன் களாகும் .அதனால் இக்கொத்து விண்மீன் கூட்டங்களை
o -இணைத் தொகுப்புகள் (o -association ) என்று அழைக்கின்றார்கள் .



பெர்சியஸ் வட்டார விண்மீன் கூட்டத்தில் மற்றுமொரு O - இணைத் தொகுப்பு கொத்து விண்மீன் கூட்டம் உள்ளது.
இது சீட்டா பெர்சியசுக்கு அருகாமையில் ,வெப்ப மிக்க மாபெரும் விண்மீனான சீட்டா பெர்சியை உள்ளடக்கிய
O -இணைத் தொகுப்பு கொத்து விண்மீன் கூட்டமாக உள்ளது .இது பெர்சியசின் காலாக வர்ணிக்கப்பட்ட பகுதியில்
நுனிக்காலுக்கு அருகில் உள்ளது .இந்த இணைத் தொகுப்பை பெர்சியஸ் -II என்று குறிப்பிடுகின்றனர். .இத் தொகுதியில்
முன்னர் குறிப்பிட்ட பெர்சியஸ்- I O-இணைத் தொகுப்பை விடக் குறைந்த அளவு விண்மீன்களே உள்ளன. இதில் 12
விண்மீன்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதில் 982 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள சீட்டா பெர்சியும் அடங்கியுள்ளது.
இதன்புரப்பரப்பு வெப்ப நிலை 30,000 டிகிரி கெல்வினாகும்.நமக்கு மிக அருகில் காணப்படும் O -இணைத் தொகுப்பு இதுவே
என்று கூறுகின்றார்கள் .இது 100 ஒளி ஆண்டுகள் x 150 ஒளி ஆண்டுகள் பரப்புள்ள வெளியில் விரிந்துள்ளதாக அறிந்துள்ளனர் .

Tuesday, October 11, 2011

arika iyarppiyal

வண்ண எழுத்துக்கள்



வெவ்வேறு வண்ணங் களாலான எழுத்துக்கள் மீது ஒரு
கண்ணாடிப் பாளத்தைவைக்க,எல்லா எழுத்துக்களும் ஒரே
மாதிரியாக விலக்கமுற்று மேலெழுந்தது போலத்
தோன்றுவதில்லை. சிவப்பு வண்ண எழுத்துக்கள் பிறவற்றைக்
காட்டிலும் மேலெழுந்தது போலத் தெரிகிறது.
இதற்கு யாது காரணம் ?

ஒளி அலையின் நீளம் அதிகரிக்க ஒளி விலகல் எண்
குறைகின்றது. அதாவது வைலட் நிற ஒளிக்கு
அலைநீளம் 4x10^-7 மீ) ஒளி விலகல் எண் அதிகமாகவும்
செந்நிற ஒளிக்கு (அலைநீளம்8x10^-7 மீ) குறைவாகவும்
இருக்கிறது. தோற்ற இடப்பெயர்வு t (1 - l /u ) என்பதால்
(இதில் t என்பது கண்ணாடிப் பாளத்தின் தடிப்பு, u என்பது
ஒளி விலகல் எண் ), சிவப்பு நிறப் பொருளுக்கு
அதிகமாகவும், வைலட் நிறப் பொருளுக்குக் குறைவாகவும்
இருக்கிறது.

அலைநீளமும் திசைவேகமும்



ஒளி அலைகள் என்பன மின்காந்த அலைகளாகும். இது நீண்ட
அலைநீள நெடுக்கைக்குட்பட்டது.எனினும் மிகச் சொற்ப
நெடுக்கைக்குட்பட்ட அலைநீளங்களை மட்டுமே கண்களால்
உணரமுடியும் .இது வைலட் முதல் (4x10^-7 மீ )சிவப்பு வரை
(8x10^-7 மீ ) உள்ளது. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்
2.997925x10^8 மீ/வி ,அல்லது 186281 மையில்/வி .அலை
மூலம் ஒரு வினாடியில் ஏற்படுத்தும் அதிர்வுகள்
அதிர்வெண் எனப்படும். கட்புலனறி ஒளிக்கு இது
7.5x10௦^14 முதல் 3.75x10^14 வரையுள்ள நெடுக்கையில்
உள்ளது. அலை இயக்கத்தின் ஒரு முக்கியமான தொடர்பு ,
அலைநீளம், அதிர்வெண் இவற்றின் பெருக்கல் பலன்
திசைவேகம் என்பதுதான் .ஒளியின் அளிநீளத்தை இரு
மடங்காக்கினால் ஒளியின் திசைவேகம் எவ்வளவு
இருக்கும் ?

அலைநீளம் அதிகரித்தால் அதிர்வெண் குறையும். குறைந்தால் அதிகரிக்கும் .இவற்றின் மாற்றங்கள் ஒன்றையொன்று
சார்ந்தவை.ஆனால் இவற்றின் பெருக்கல்பலன் வெற்றிட
வெளியில் மாறிலியாகும் மேலும் வெற்றிடத்தில்
ஒளியின் திசைவேகம் பெருமம் மட்டுமில்லை ,வேகத்தில்
அதைவிடக் கூடுதலான வேகத்தோடு இயங்கக் கூடியது
வேறெதுவும் இல்லை. எனவே அலைநீளத்தை அதிகரித்தாலும் ,
குறைத்தாலும் அல்லது அதிர்வெண்ணை மாற்றினாலும்
திசைவேகம் மாறுவதில்லை

Sunday, October 9, 2011

arika iyarppiyal

தொடுவானச் சூரியன்

சூரியன் தினமும் காலையில் கிழக்கில் உதித்து மாலையில்
மேற்கில் மறைகிறது. சூரியன் பூமியைச் சுற்றுவதால்
இப்படி நிகழவில்லை .பூமி தற்சுழலுவதால் இப்படித் தோன்றுகிறது .தொடுவானத்தில் சூரியன் சற்று நீள் வட்டமாக
காட்சி யளிக்கிறது.இதற்க்குக் காரணம் என்ன ?

சூரியனைத் தொடுவானத்தில் காணும் போது,உடனடியாக
மறையப் போகும் அடிவிளிம்பு இன்னும் சற்று நேரத்தில்
மறையப் போகும் மேல் விளிம்பை விடக் கூடுதலான
தொலைவை பூமியின் வளிமண்டலத்தில் கடக்க
வேண்டியுள்ளது .இதற்க்குக் காரணம் அவற்றின்
சாய்மைதான்.இதனால் அது கூடுதலான ஒளி விளக்கம்
பெற்று விலக்க முறுகிறது.ஒளி விலக்க வேறுபாட்டால்
பொருளின் உருவம் பிறழ்ச்சி அடைகிறது. அதனால்
தொடுவானச் சூரியன் வட்டமாகத் தெரியாமல் சற்று
நீள் வட்டமாகத் தெரிகிறது .

நீர் தொட்டியின் அடித்தளம்


ஒரு தொட்டியை நீரால் நிரப்பி அதை மேலிருந்து கீழாக
நோக்க அதன் அடிப்பக்கம் குழிவாய்த் தோன்றும்.ஏன் அப்படி?

ஒளி விளக்கம் என்று சொன்னால் அது முழுமையான
விளக்கமாகாது .எவ்வளவுக் கெவ்வளவு சாய்வாக
நோக்குகின்றோமோ அவ்வளவுக் கவ்வளவு நீரடிப் பொருள்
மேலுயர்ந்தது போலக் காணப்படும். நேர் குத்தாக
நோக்கும் போது அடிப்பக்க எல்லைகளிலிருந்து வரும்
கற்றைகள் கூடுதலான சாய்மை காரணமாக அப்பகுதி
மையப் பகுதியைவிடக் கூடுதலாகக் மேலுயர்ந்தது போலத்
தோன்றும் .இதனால் அடிப்பகுதி குழிவாகத் தோன்றும் .

Friday, October 7, 2011

arika iyarppiyal

சிறிய துவாரமும் பெரிய துவாரமும்

ஓர் ஊசி முனைத் துவாரத்தால் சூரியனின் விட்டத்தை
அளவிட்டறிய முடியுமா ?


முடியும். ஒத்த இரு முக்கோணங்களின் வடிவியலை ஒப்பிட்டு ,
மலையின் உயரம் ,வானளாவிய கட்டடத்தின் உயரம்
இவற்றை அளவிடுவதைப் போல சூரியனின் விட்டத்தையும்
அளவிட்டறிய முடியும்.

பகலில் ஓர் இரவு


பகற் பொழுதில் வீட்டிற்கு வெளியில் இருந்து கொண்டு
திறவலான ஜன்னல் வழியே நோக்கினால் ,ஜன்னல் பகுதி
இருளாகத் தெரிவதேன் ?

பகற் பொழுதில் திறவலான ஜன்னல் கருமையாகத்
தெரிவதற்குக் காரணம் ,அதன் வழிச் செல்லும் பெரும் பகுதி
ஒளி எதிரொளிக்கப் பட்டு திரும்பி வெளியேறுவதில்லை .
கண்ணின் மணி கறுப்பாய்த் தோன்றுவதற்குக் கூட இதுதான்
காரணம் .ஆனால் அறைக்குள் ஒரு மின் விளக்கைப் போட்டால் ,
அது உமிழ்ந்து பொருளில் பட்டுச் சிதறும்
ஒளியால் ஒருவர் ஜன்னலுக்கு வெளியிலிருந்து எப்போதும்
உட்பகுதியைக் காண முடியும்

eluthaatha kaditham

எழுதாத கடிதம்

உலகின் சிறந்த முதல் 200 பல்கலைக் கழகங்களின் பட்டியலில்
இந்தியப் பலகலைக் கழகம் ஒன்று கூட இடம்பெறவில்லை.
இது இந்தியர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை தரக் கூடிய
விஷயமே.பட்டியலைத் தயாரித்த குழு இந்தியப் பல்கலைக்
கழகத்தை தேர்வு செய்யாதது அவர்கள் குற்றமில்லை .
அதற்குத் தகுதியாக இல்லாததும் அதைப் பெறுவதற்கு முயற்சி
செய்யாததும் நம் குற்றமே .

பொதுவாக நாம் நம்மைப்பற்றி எப்போதும் மிகைப் பாடாகவே
மதிப்பிட்டுக் கொண்டுவிடுகிறோம் .நம்முடைய பேச்சில்
இருக்கும் வீரமும் விவேகமும் செயல்பாடுகளில் இருப்பதில்லை.
நாமே திறமையானவர்கள் என்றும் எதிரிகள் நம்மை விட
திறமைக் குறைவானவர்கள் என்றும் நாமாகவே கற்பனை
செய்துகொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் .
நம்முடைய முன்னேற்றத்திற்கு நாமே தடைக் கல்லாக
இருக்கிறோம்.நம்மைக் குறைத்து மதிப்பிட நாம் தயாராக
இல்லாத போது இதை நாம் ஒருபோதும் உணர்வதுமில்லை .
இந்தியப் பலகலைக் கழகங்கள் ஏன் 200க்கு 1 மதிப்பெண் கூட
வாங்காமல் போனது ?

பொதுவாக கல்வி ஒரு வியாபாரப் பொருளாகிப் போனது.
அதனால் கல்விக் கூடங்கள் இலாப நோக்கிலேயே செயல்பட
துவங்கியுள்ளன. .இது ஒரு வளர்ச்சித் தடைக்கு காரணமாக
உள்ளது.

கல்விக் கூடங்களின் கட்டுமானம் மாணவர்களுக்கு போதிய
வசதி தரக் கூடியதாக இல்லை.மாணவர்களின் எண்ணிக்கைக்கு
ஏற்ப வகுப்பறை இடவசதி ,நூலக வசதியோ, கழிவறை வசதி,
விளையாட்டு துறை வசதிகள் இல்லை.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இருப்பதில்லை.
இருக்கும் ஆசிரியர்களும் கற்ப்பித்தல் தவிர்த்த பிற அலுவல்களில்
அதிகம் ஈடுபடுத்தப் படுகின்றார்கள் .

வகுப்புகளில் கணினி, LCD மூலம் presentation ,இன்டர்நெட் ,
மாணவர்கள் - ஆசிரியர் interaction ,question hour போன்றவை
பெரும்பாலும் இருப்பதில்லை.

செய்முறைப் பயிற்சி குறைவு. அதுவும் அவர்களின் செயலாற்றலை தூண்டுவதில்லை .

தங்கும் வசதி ,போக்கு வரத்து வசதி ,சுகாதாரமான சுற்றுச்
சூழல் போன்றவைகள் இன்னும் மேம்படுத்தப் படாமலேயே
இருக்கின்றன.

மாணவர்கள் கற்பதில் முழு அளவில் ஈடுபடவில்லை என்பது
ஒரு புறம் இருக்க ஆசிரியர்களும் முழு அளவில் கற்பித்தலில்
ஈடுபடுவதில்லை.எப்பொழுதும் எதாவது ஒரு காரணத்தைக் காட்டி
போராட்டம் என்று பணியைப் புறக்கணிப்பது.
இதனால் ஆசிரியர்களின் தகுதிப்பாடும் ஒரு கேள்விக்
குறியாகயுள்ளது

இவற்றையும் மீறி ஒரு சில ஆசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள் .
அவர்களால் இன்னும் இந்தியப் பல்கலைக்
கலகங்கள் மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன.

வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று சேர்ந்து இந்தியாவில்
உலகத் தரமான ஒரு மாதிரிப் பலகலைக் கழகத்தை
உருவாக்க முன் வரலாமே . ஏனெனில் இது அவர்களால் தான்
முடியும் .தரமான கல்விக்கு உத்தரவாதம் இருந்தால்
கல்விக் கட்டணம் ஒரு பிரச்சனையே இல்லை.

vinveliyil ulaa

அல்கோல் விண்மீனின் பிரகாச மாற்றம்


பிரகாசம் அதிகரிப்பை எதிரொளிப்பு மூலம் விளக்க முடியும் .வெப்ப மிக்க அல்கோல் ,குளிர்ச்சியான துணை விண்மீனின்
நேர் முகப் பரப்பில் கதிர்வீச்சைப் பொழிய ,அது அதைச் சற்று பிரகாச மிக்கதாகக் காட்டுகிறது.
கலைக்கட்டம் சுழி என்ற நிலையில் குளிர்ச்சியான துணை விண்மீன் வெப்ப மிக்க அளகோலை முழுமையாக மறைக்கின்றது.
அப்போது நாம் துணை விண்மீனின் குளிர்ச்சியான இருண்ட முகப்பரப்பையே காண்கிறோம் .அது சுற்றியங்கும் போது
கலைக்கட்டம் அதிகரிக்கின்றது. அப்போது துணை விண்மீனின் பிரகாசமான எதிரொளிப்புப் பகுதியின் அளவு தொடர்ந்து
அதிகரிக்கின்றது .கண்ணோட்டத் திசைக்கு சுற்றுப் பாதையின் ஆரம் செங்குத்தாக இருக்கும் போது இது பெருமமாக
இருக்கிறது. அதன் பின் துணை விண்மீனின் பிரகாசமான எதிரொளிப்புப் பகுதியின் அளவு தொடர்ந்து குறைய அமைப்பின்
மொத்தப் பிரகாசமும் சிறிதளவு குறைகிறது. பின்னர் துணை விண்மீன் அல்கோலால் மறைக்கப்படுகிறது. அல்கோல் துணை
விண்மீனால் மறைக்கப்படுவதற்கும் அல்கோலால் துணை விண்மீன்மறைக்கப்படுவதற்கும் வேறுபாடு உள்ளது.
அல்கோலைத் துணை விண்மீன் மறைக்கும் போது பிரகாசம் பெருமளவு தடைப்படுகின்றது .அதனால் முதன்மைச் சிறுமம்
விளைகிறது. ஆனால் துணை விண்மீனை அல்கோல் மறைக்கும் போது பிரகாசம் பெருமளவு தடைப் படுவதில்லை .துணை
விண்மீனின் எதிரொளிப்பு ஒளி அல்கோலால் தடுக்கப்படுவதால் பிரகாசத்தில் சிறிதளவு மாற்றமே ஏற்படுகிறது.
அதனால் துணைச் சிறுமம் உண்டாகிறது. அல்கோலால் படிப்படியாக மறையும் அல்லது வெளிப்படும் துணை விண்மீன் மீது
அல்கோல் ஒளியை வீசி அதன் கலைத் தோற்றத்தை ஏற்படுத்துவதால் ,சுற்றுக் கால முறைப்படி பிரகாச மாற்றத்திற்கு
உள்ளாகிறது.
இந்த வரை படத்தின் துணை கொண்டு மறைப்பு மாறொளிர் விண்மீனின் சுற்றுக் காலம் ,பரிமாண அளவு ,நிறை ,அடர்த்தி,
போன்ற பல இயற்பியல் பண்புகளை ஒருவாறு கணிக்க முடியும். இதன் படி அல்கோல் மெல்லிய நீலங் கலந்த வெண்ணிறமுடைய
ஓரளவு மிதமான பரிமாண முடைய ஒரு விண்மீனாகும். இத விட்டம் 4 ,183 ,400 கிமீ ( நமது சூரியனின் விட்டம் 1 ,391 ,000 கி மீ ) .
அல்கோல் ,சூரியனை விட உருவ அளவில் 9 மடங்கு பெரியது. .இத புறப் பரப்பு வெப்ப நிலை 15000 டிகிரி கெல்வின் நெடுக்கையில் உள்ளது .
சூரியனை விட 100 மடங்கு பிரகாசமானது .நிறையோ சூரிய நிறையைப் போல 3 .5 - 4 மடங்காக உள்ளது .அடர்த்தியோ சூரியனை விடக் குறைவு.
அல்கோலின் அடர்த்தி சூரிய அடர்த்தியில் 0 .07 மடங்கு தான்.
இதன் துணை விண்மீன் அளகோலை ஒப்பிட சற்று பெரிய அளவினதாகும். அதன் விட்டம் 4 ,827 ,000 கிமீ ஆக மதிப் பிட்டுள்ளனர் .
இது அல்கோலை விடக் குளிர்ச்சியானது என்பதால் இதன் புறப் பரப்பு வெப்ப நிலை 7000 டிகிரி கெல்வின் நெடுக்கையில் உள்ளது .
அதாவது நமது சூரியனை விட 1000 டிகிரி கெல்வின் புறப்பரப்பு வெப்ப நிலையைக் கூடுதலாகப் பெற்றுள்ளது . எனினும் சூரியனை விட மங்கலாக,
ஆரஞ்சு நிறத்தில் காட்சி தருகிறது.. இதற்குக் காரணம் அதன் நிறை சூரிய நிறைக்குச் சமமாகவும், உருவம் பல மடங்கு பெரியதாகவும் இருப்பதால்
அடர்த்தி குறைவாக இருப்பதாகும் .இதன் அடர்த்தி சூரிய அடர்த்தியில் 0 .04 மடங்கு மட்டுமே .
இரட்டை விண்மீன்களில் புறப்பரப்பு வெப்பநிலையில் ஒரு சில ஆயிரம் டிகிரி கெல்வின் வெப்ப நிலை வேறுபாடே ,மறைப்பு விளைவை வெறும்
கண்களுக்குப் புலப்படுத்திக் காட்டப் போதுமானதாக இருக்கிறது என்பதை இதை ஆராய்ந்த பின்னரே தெரிந்து கொண்டனர்.

அல்கோலுக்கும் அதன் துணை விண்மீனுக்கும் உள்ள இடைப்பட்ட தொலைவு 10 ,458 ,500 கிமீ .சூரியக் குடும்பத்தில் புதனின்
சுற்றுப் பாதையின் ஆறாம் 58 ,000 ,000 கிமீ .அதாவது அல்கோல்- துணை விண்மீன் அமைப்பு சூரியன்-புதன் அமைப்பை விட
நெருக்கமாக உள்ளது எனலாம் .அதாவது அல்கோல்-துணை விண்மீன் புரப்பரப்பிடைத் தொலைவு சுமார் ஒரு மில்லியன்
கிமீ மட்டுமே .
கெப்ளரின் விதியைக் கொண்டு இரட்டை விண்மீன்களில் உள்ள விண்மீன்களின் நிறையைக் கணக்கிட முடியும். இதன் படி ஓர்
அமைப்பில் சுற்றுக் காலத்தின் இருமடி அதன் ஆரத்தின் மும்மடிக்கு நேர் விகிதத்தில் இருக்கிறது எனலாம் .
அல்கோலின் பிரகாசம் மாறாது நிலையாக இல்லை என்பது நெடு நாட்களுக்கு முன்பே அறியப்பட்ட உண்மை என்றாலும்
பிரகாசத்தின் அழிவுக் காலத்தில் ஏற்படும் மாற்றங்களும் மாறாது நிலையாக இல்லை என்பதற்கான காரணம் அண்மைக்
காலத்திலேயே கண்டறியப்பட்டது .அல்கோல் விண்மீன் உண்மையில் ஓர் இரட்டை விண்மீன் இல்லை ,அது மூன்று
விண்மீன்களின் கூட்டமைப்பு என்பது உணர்வுநுட்பம் மிக்க தொலை நோக்கி உணர்த்திக் காட்டியது .அல்கோலின் மூன்றாவது
துணை விண்மீன் ,முதன்மை விண்மீனான அளகோலை விட 1 .87 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இதன் சுற்றுத்
தளம் பார்க்கப் படும் திசைக்கு ஓரளவு சாய்ந்து செங்குத்தாக இருப்பதால் மறைப்பு நிகழ்வை ஏற்படுத்துவதில்லை .
எனினும் இதன் இயக்கத்தினால் அல்கோல் மற்றும் அதன் முதல் துணை விண்மீன்களின் சுற்றுக் காலத்தில் குறிப்படும்
படியான மாற்றம் தூண்டப் படுகிறது. அதாவது அலைவு காலம் அலைவுற்று கால முறைப்படியான மாற்றத்திற்கு
உள்ளாகிறது

Thursday, October 6, 2011

eluthaatha kaditham

எழுதாத கடிதம்
2011 ஆம் ஆண்டிற்கான அமைதி நோபல் பரிசுக்கு இந்திய
அரசியல் தலைவர் ஒருவர் பரிந்துரைக்கப் பட்டார் என்ற
செய்தி நாளிதழ்களில் கண்டேன் .ஓர் இந்தியர் உலக
அளவில் பெருமை பெற்றார் என்றல் அது நமக்கும்
பெருமைதான் .ஆனால் நமக்கு அனுகூலம் என்றால்
நடுவு நிலைமையை மறந்துவிடுகின்றோம்.
அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்கு இன்றைக்கு
இந்தியாவில் எந்த அரசியல் வாதியும் இல்லை.அதைப்
பெறுவதற்கு முழுமையான தகுதியும் தராதரமும் கொண்ட
ஒரே ஒருவர் காந்தியடிகள் என்றொரு மகாத்மா இருந்தார் .
காந்தியம் என்ற மிக அற்புதமான கொள்கையைக் கண்டுபிடித்து,
கடைப்பிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார் .
இறந்த வர்களுக்கு நோபல் பரிசு கொடுப்பதில்லை என்ற
விதிமுறை விடாமல் கடைப்பிடிக்கப் படுவதால்
அவருக்கு அந்தப் பெருமை வழங்கப்படவில்லை.
காந்தியடிகள் நோபல் பரிசுக்காக எதையும் செய்யவில்லை ,
அது அவருடைய நோக்கமும் இல்லை. அதனால் அவருடைய
ஆத்மா அதற்காக வருத்தப்பட்டதுமில்லை .
பொதுவாக ஒருவருடைய கருத்து மக்களுக்கு பயனுள்ளதாக
இருக்கும் போது அதை
ஊக்கப் படுத்துவதற்காக அவருக்குப் பரிசு வழங்குவார்கள் .
காந்தியத்திற்க்காக யாருக்குமே பரிசு வழங்கப் படாவிட்டால்
அது வளர்ச்சி பெறாமல் அழிந்து போய்விடாதா.காந்தியத்தை
பின்பற்றி சமாதானம் செய்துகொண்டவர்களுக்கெல்லாம்
நோபல் பரிசு ஆனால் காந்தியத்திக் கண்டுபிடித்தவருக்கு
அந்தப் பரிசு இல்லை என்றால் இதில் எதோ குறைபாடு
உள்ளது போலத் தோன்றுகிறது .
காந்தியைப் போல இன்னொருவர் இனி பிறக்கப்போவதில்லை
எனவே அதற்காக நோபல் பரிசுக் குழுவினர் காத்திருக்கத்
வேண்டியதில்லை. காந்தியின் சார்பாக அதை இந்திய மக்களுக்கு வழங்கலாம் .காந்தியின் அறக்கட்டளைகள் பல இதனால்
புத்துயிர் பெறுமே.
எதுவும் மாறிக்கொண்டே இருப்பது ஒன்றுதான் இந்த
பிரபஞ்சத்தில் மாற்றம் ஏதுமின்றி நடந்துகொண்டே இருக்கிறது.
எனவே விதி விலக்குகளில் ஒரு மாற்றம் கொண்டுவருவது என்பது இயற்க்கைக்கு மாறானதில்லை.
மகாத்மாவிற்காக விதி விலக்குகளில் ஒரு மாற்றம் செய்வது
நோபல் பரிசுக்கு மேலும் பெருமை சேரும்
.

Monday, October 3, 2011

arika iyarppiyal

செங்குத்தான இரு ஆடிகளில் தோன்றும் பிம்பம்

இரு சமதள ஆடிகளை ஒன்றுக்கொன்று செங்குத்தாக
இருக்குமாறு பொருத்தி ,அதன் தொடுகோட்டிற்கு நேர்குத்தாக
இருந்து கொண்டு உன்னுடைய பிம்பத்தை நீயே பார்க்கும்
போது பிம்பம் எப்படித் தோன்றும் ?

இந்த இரட்டைச் சமதள ஆடி அமைப்பில் உங்களை
நீங்களே பார்க்கின்ற போது உங்கள் ஒரு பகுதி பிம்பம் கூட
சாதாரணமாகப் பார்க்கப்படுகின்ற ஒற்றைச் சமதள
ஆடியிலிருந்து கிடைக்கப் பெற்றதில்லை.அமைப்பிலிருந்து
ஏதாவதொரு ஆடியை நீக்கிவிட்டால் ஒரு பிம்பம் கூட
ஏற்பட்டுத் தோன்றுவதில்லை.
இரட்டை ஆடியின் முன்னுள்ள பொருளின் இடப்பக்கம் ,
இடக்கை ப் பக்கமாய் அமைந்துள்ள சமதள ஆடியில்
45 டிகிரி கோணத்தில் விழுந்து எதிரொளித்து வலப்பக்க
சமதள ஆடியில் 45 டிகிரி கோணத்தில் விழுந்து எதிரொளித்து
வலப்பக்கமாய் வெளியேறுகிறது .இது போல பொருளின் வலப்பக்கம்,இடப்பக்கமாய் வெளியேறுகிறது .இதனால்
பிறர் நம்மை எப்படிப் பார்கின்றார்களோ அது போல
நாம் நம்மைப் பார்க்க முடியும்.நிலைக் கண்ணாடியில்
பார்க்கும் போது இடவலம் மாறித் தோன்றுவதைப் போல
இரட்டைக் கண்ணாடியில் தோன்றுவதில்லை.

பிம்பங்களின் பிம்பங்கள்

இரு சமதள ஆடிகளை செங்குத்தாக நிறுத்தி ஒன்றுக்கொன்று
ஒரு குறுங் கோணத்தில் அமையுமாறு வைக்கவும் .
குறுங் கோணத்தை விரிக்கும் போதும் ,சுருக்கி இணையாக
இருக்குமாறு வைக்கும் போதும் ,அவைகளுக்கு
இடையில் வைக்கப்பட்ட மெழுகு வர்த்தியின் பிம்பம் எப்படித்
தோன்றும் ?

இரு சமதள ஆடிகளுக் கிடையேயான கோணம் குறையக்
குறைய பிம்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து
அதிகரிக்கின்றது. இரு ஆடிகளும் ஒன்றையொன்று
பார்திருக்குமாறு இணையாக இருக்கும் போது
ஆடியில் ஒரு நீண்ட வரிசையில் அடுக்கி வைக்கப்பட்ட
எண்ணிலா மெழுகு வர்த்தி பிம்பங்களைக் காணலாம் .

Saturday, October 1, 2011

vinveliyil ulaa

அல்கோல் -ஒரு விந்தையான விண்மீன்


93 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள பீட்ட பெர்சியில் பிரகாசமான விண்மீன் ஒன்றும் ,மங்கலான விண்மீன் ஒன்றும் ஒன்றையொன்று சுற்றி
வரும்போது ,அவை 2 நாள் 21 மணி நேரத்திற்கு ஒருமுறையென இடைவந்து ஒன்றையொன்று மறைக்கின்றன .இதனால் இதன் தோற்றப்
பிரகாசம் 2 .1 லிருந்து 3 .4 ஆகக் குறைகிறது .இச் சரிவு 10 மணிநேரம் நீடிக்கிறது .வானத் தாரகைகளை ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த
அரேபிய வானவியலார் ,மதுசாவின் கண்களாக வர்ணிக்கப்பட்ட இரு விண்மீன்களில் ஒன்று நிலையாக , பிரகாசத்தில் மாற்றம் ஏதுமின்றி
இருந்தது. ஆனால் மற்றொரு விண்மீனான அல்கோல் நேரத்திற்கு ஏற்ப அதன் பிரகாசம் மாறி மாறி ஒளிர்ந்தது .இதைக் கண்டு பேய் கண்
சிமிட்டிக் கொண்டிருக்கிறது என்று புனைந்து சொன்னார்கள் .


அல்கொலியன் பிரகாச மாற்றத்திக்குக் காரணமான மூலத்தையோ அல்லது இயற்பியல் விதியையோ முதலில் கற்ப்பிக்க முடியவில்லை..
1782 முதல் 1783 வரையில் ,ஒவ்வொரு இரவும் இந்த விண்மீனை ஆராய்ந்து ,அதன் பிரகாச மாற்றத்திற்கான இயற்பியலை இங்கிலாந்து
நாட்டைச் சேர்ந்த ஜான் குட்ரிக் என்ற வானவியலார் கண்டறிந்தார். ஏறக்குறைய இரண்டரை நாட்கள் அல்கோலின்
பிரகாசம் மாறாமல் நிலையாக 2 .2 என்ற தோற்ற ஒளிபொலிவெண்ணுடன் காணப்படுகிறது.பின்னர் சுமார் 10 மணி நேரம் அதன் பிரகாசம்
மங்கிப் போய் 3 .5 என்ற தோற்ற ஒளிபொலிவெண்ணுடன் தோன்றுகிறது. அப்போது அதன் பிரகாசம் 44 சதவீதம் குறைகிறது .அதன் பிறகு
மீண்டும் பழைய நிலையை அடைகிறது. அடுத்தடுத்த இரு சிறுமப் பிரகாச நிலைக்கிடைப் பட்ட நேரம் 2 நாள் 20 மணி 46 நிமிடம் என்று
ஒளிபொலிவெண்- கால வரைபடம் மூலம் ஜான் குட்ரிக் கண்டறிந்தார். மேலும் இதற்கான காரணத்தையும் கண்டறிந்து விளக்கியவர்
இவரே ஆவார் .அல்கோல் விண்மீனைச் சுற்றி ஒரு பெரிய விண்ணுறுப்பு சுற்றி வருவதால் இப்படி நிகழ வாய்ப்பிருப்பதை அப்போது
இவர் சுட்டிக்காட்டினார் .எனினும் இது ஏறக்குறைய 200 ஆண்டுகள் அனுமானக் கொள்கையாக இருந்து வந்தது. 1889 ல் மேற்கொள்ளப்பட்ட
நிறமாலை சார்ந்த ஆய்வுகள் இதற்கு முழுமையான விளக்க அளித்தன.
அல்கோல் விண்மீனின் நிறமாலை நேரத்திற்கு ஏற்ப மாற்றம் பெறுகிறது. இந்த மாற்றமும் ஒரு வட்டச் சுற்று முறையில் உள்ளது.
அதாவது அல்கோல் விண்மீன் ஒளியின் நிறமாலை வரிகள் ஓர் அலைவு கால முறைப்படி இடம் பெயர்ந்து காணப்படுகிறது..
இதன் அலைவு காலமும் ,பிரகாசத்தின் அலைவு காலமும் மிகச் சரியாக ஒன்றாக இருப்பது பின்னர் தெரிய வந்தது. இது அல்கோல் நிறமாலை சார்ந்த ஓர் இரட்டை விண்மீன் என்பதைத் தெரியப் படுத்தியது. முதன்மை விண்மீனை ஒரு துணை விண்மீன் அலைவு கால முறைப்படி
மறைக்கும் போது அதன் பிரகாசமும் ,நிறமாலை வரிகளின் இடப்பெயர்வும் அலைவு கால முறைப்படி மாற்றம் பெறுகின்றன.
முதன்மை விண்மீனின் சுற்றியக்கத்தை டாப்ளர் பெயர்ச்சி (Doppler Shift ) காரணமாக அதன் நிறமாலையில்; ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு
அறியலாம் .விலகிச் சென்றால் செம்பெயர்ச்சி (Red Shift ) நெருங்கி வந்தால் நீலப் பெயர்ச்சி (Blue Shift ) ஏற்படும் என்று ஏற்கனவே உறுதியாக நிறுவப்பட்ட உண்மையால் இதை அறியமுடிகிறது .துணை விண்மீன் பொலிவின்றி மங்கலாக இருந்தால் .பிரகாசமான முதன்மை
விண்மீனின் ஒளிப் பொலிவில் மறைக்கப்படுவதால் ,அது வெறும் கண்களுக்குப் புலப்படுவதில்லை.




அல்கோல் விண்மீனின் பிரகாச- கால வரைபடத்தில் இரு முதன்மைச் சிறுமப் பிரகாசங்களுக்கு நடுவில் ஒரு சிறிய துணைச் சிறுமப் பிரக்காசம் காணப்
படுகின்றது .இது அல்கோலைச் சுற்றி வரும் துணை விண்மீன் முழுமையான கருமையான விண்ணுறுப் பில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது .
துணை விண்மீன் சூரியனைப் போல நிறையுடையதாக இருப்பினும் ,சூரியனை விட அளவில் பெரியது. இது இப்போது பெருஞ் சிவப்பு விண்மீனாக
பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது. நமது சூரியன் இது போன்ற தோற்றத்தைப் பெற அதன் வயது இரு மடங்காக வேண்டும். அதாவது இன்னும்
10 ஆயிரம் மில்லியன் ஆண்டுகள் கடக்க வேண்டும்.
இரட்டை விண்மீன்களில் அல்கோல் பிரகாசமானதாகவும் ,சிறியதாகவும் ,துணை விண்மீன் பிரகாசம் குறைந்ததாகவும் ஆனால் பெரியதாகவும் இருக்கும் போது ,அவை சுற்றி வரும் போது ஒன்றையொன்று மறைக்கும் நிலைகளில் இது
போன்று சிறுமப் பிரகாசம் ஏற்படுகின்றது. பிரகாசமான் அல்கோல் மங்கலான துணை விண்மீனால் மறைக்கப்படும்போது அதாவது
துணை விண்மீனுக்குப் பின்னால் இருக்கும் போது ,முதன்மைச் சிறுமப் பிரகாசம் காணப்படுகின்றது . மங்கலான துணை விண்மீனை
அல்கோல் மறைக்கும் போது அதாவது அல்கோலுக்குப் பின்னால் துணை விண்மீன் இருக்கும் போது, துணைச் சிறுமப் பிரகாசம்
ஏற்படுகின்றது. இவ்விரு வேறுபட்ட மறைப்பு நிலைகளிலும் ,இரட்டை விண்மீனின் சராசரிப் பிரகாசத்தில் குறைவு ஏற்படுகின்றது.
அல்கோலின் பிரகாச- கால வரைபடம் நமக்கு மற்றோர் உண்மையையும் தெரிவிக்கின்றது. அல்கோலின் பிரகாசம் முதன்மைச்
சிறுமத்திலிருந்து துணைச் சிறுமத்தை அடைந்து பின்னர் மீண்டும் முதன்மைச் சிறுமத்தைப் பெருகிண்ட்ரகுடு. அதாவது இரு அடுத்தடுத்த
முதன்மைச் சிறுமத்திற்கு மிகச் சரியாக இடையில் துணைச் சிறுமம் அமைந்துள்ளது. அப்போது முதன்மைச் சிறுமத்திலிருந்து
பிரகாசம் அதிகரித்து துணைச் சிறுமத்தை எட்டி பின் பிரகாசம் குறைகிறது. இது நிலவின் கலைகள் போன்று நிலைக்கட்ட (Phase ) விளைவாகும்.