அல்கோல் -ஒரு விந்தையான விண்மீன்
93 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள பீட்ட பெர்சியில் பிரகாசமான விண்மீன் ஒன்றும் ,மங்கலான விண்மீன் ஒன்றும் ஒன்றையொன்று சுற்றி
வரும்போது ,அவை 2 நாள் 21 மணி நேரத்திற்கு ஒருமுறையென இடைவந்து ஒன்றையொன்று மறைக்கின்றன .இதனால் இதன் தோற்றப்
பிரகாசம் 2 .1 லிருந்து 3 .4 ஆகக் குறைகிறது .இச் சரிவு 10 மணிநேரம் நீடிக்கிறது .வானத் தாரகைகளை ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த
அரேபிய வானவியலார் ,மதுசாவின் கண்களாக வர்ணிக்கப்பட்ட இரு விண்மீன்களில் ஒன்று நிலையாக , பிரகாசத்தில் மாற்றம் ஏதுமின்றி
இருந்தது. ஆனால் மற்றொரு விண்மீனான அல்கோல் நேரத்திற்கு ஏற்ப அதன் பிரகாசம் மாறி மாறி ஒளிர்ந்தது .இதைக் கண்டு பேய் கண்
சிமிட்டிக் கொண்டிருக்கிறது என்று புனைந்து சொன்னார்கள் .
அல்கொலியன் பிரகாச மாற்றத்திக்குக் காரணமான மூலத்தையோ அல்லது இயற்பியல் விதியையோ முதலில் கற்ப்பிக்க முடியவில்லை..
1782 முதல் 1783 வரையில் ,ஒவ்வொரு இரவும் இந்த விண்மீனை ஆராய்ந்து ,அதன் பிரகாச மாற்றத்திற்கான இயற்பியலை இங்கிலாந்து
நாட்டைச் சேர்ந்த ஜான் குட்ரிக் என்ற வானவியலார் கண்டறிந்தார். ஏறக்குறைய இரண்டரை நாட்கள் அல்கோலின்
பிரகாசம் மாறாமல் நிலையாக 2 .2 என்ற தோற்ற ஒளிபொலிவெண்ணுடன் காணப்படுகிறது.பின்னர் சுமார் 10 மணி நேரம் அதன் பிரகாசம்
மங்கிப் போய் 3 .5 என்ற தோற்ற ஒளிபொலிவெண்ணுடன் தோன்றுகிறது. அப்போது அதன் பிரகாசம் 44 சதவீதம் குறைகிறது .அதன் பிறகு
மீண்டும் பழைய நிலையை அடைகிறது. அடுத்தடுத்த இரு சிறுமப் பிரகாச நிலைக்கிடைப் பட்ட நேரம் 2 நாள் 20 மணி 46 நிமிடம் என்று
ஒளிபொலிவெண்- கால வரைபடம் மூலம் ஜான் குட்ரிக் கண்டறிந்தார். மேலும் இதற்கான காரணத்தையும் கண்டறிந்து விளக்கியவர்
இவரே ஆவார் .அல்கோல் விண்மீனைச் சுற்றி ஒரு பெரிய விண்ணுறுப்பு சுற்றி வருவதால் இப்படி நிகழ வாய்ப்பிருப்பதை அப்போது
இவர் சுட்டிக்காட்டினார் .எனினும் இது ஏறக்குறைய 200 ஆண்டுகள் அனுமானக் கொள்கையாக இருந்து வந்தது. 1889 ல் மேற்கொள்ளப்பட்ட
நிறமாலை சார்ந்த ஆய்வுகள் இதற்கு முழுமையான விளக்க அளித்தன.
அல்கோல் விண்மீனின் நிறமாலை நேரத்திற்கு ஏற்ப மாற்றம் பெறுகிறது. இந்த மாற்றமும் ஒரு வட்டச் சுற்று முறையில் உள்ளது.
அதாவது அல்கோல் விண்மீன் ஒளியின் நிறமாலை வரிகள் ஓர் அலைவு கால முறைப்படி இடம் பெயர்ந்து காணப்படுகிறது..
இதன் அலைவு காலமும் ,பிரகாசத்தின் அலைவு காலமும் மிகச் சரியாக ஒன்றாக இருப்பது பின்னர் தெரிய வந்தது. இது அல்கோல் நிறமாலை சார்ந்த ஓர் இரட்டை விண்மீன் என்பதைத் தெரியப் படுத்தியது. முதன்மை விண்மீனை ஒரு துணை விண்மீன் அலைவு கால முறைப்படி
மறைக்கும் போது அதன் பிரகாசமும் ,நிறமாலை வரிகளின் இடப்பெயர்வும் அலைவு கால முறைப்படி மாற்றம் பெறுகின்றன.
முதன்மை விண்மீனின் சுற்றியக்கத்தை டாப்ளர் பெயர்ச்சி (Doppler Shift ) காரணமாக அதன் நிறமாலையில்; ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு
அறியலாம் .விலகிச் சென்றால் செம்பெயர்ச்சி (Red Shift ) நெருங்கி வந்தால் நீலப் பெயர்ச்சி (Blue Shift ) ஏற்படும் என்று ஏற்கனவே உறுதியாக நிறுவப்பட்ட உண்மையால் இதை அறியமுடிகிறது .துணை விண்மீன் பொலிவின்றி மங்கலாக இருந்தால் .பிரகாசமான முதன்மை
விண்மீனின் ஒளிப் பொலிவில் மறைக்கப்படுவதால் ,அது வெறும் கண்களுக்குப் புலப்படுவதில்லை.
அல்கோல் விண்மீனின் பிரகாச- கால வரைபடத்தில் இரு முதன்மைச் சிறுமப் பிரகாசங்களுக்கு நடுவில் ஒரு சிறிய துணைச் சிறுமப் பிரக்காசம் காணப்
படுகின்றது .இது அல்கோலைச் சுற்றி வரும் துணை விண்மீன் முழுமையான கருமையான விண்ணுறுப் பில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது .
துணை விண்மீன் சூரியனைப் போல நிறையுடையதாக இருப்பினும் ,சூரியனை விட அளவில் பெரியது. இது இப்போது பெருஞ் சிவப்பு விண்மீனாக
பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது. நமது சூரியன் இது போன்ற தோற்றத்தைப் பெற அதன் வயது இரு மடங்காக வேண்டும். அதாவது இன்னும்
10 ஆயிரம் மில்லியன் ஆண்டுகள் கடக்க வேண்டும்.
இரட்டை விண்மீன்களில் அல்கோல் பிரகாசமானதாகவும் ,சிறியதாகவும் ,துணை விண்மீன் பிரகாசம் குறைந்ததாகவும் ஆனால் பெரியதாகவும் இருக்கும் போது ,அவை சுற்றி வரும் போது ஒன்றையொன்று மறைக்கும் நிலைகளில் இது
போன்று சிறுமப் பிரகாசம் ஏற்படுகின்றது. பிரகாசமான் அல்கோல் மங்கலான துணை விண்மீனால் மறைக்கப்படும்போது அதாவது
துணை விண்மீனுக்குப் பின்னால் இருக்கும் போது ,முதன்மைச் சிறுமப் பிரகாசம் காணப்படுகின்றது . மங்கலான துணை விண்மீனை
அல்கோல் மறைக்கும் போது அதாவது அல்கோலுக்குப் பின்னால் துணை விண்மீன் இருக்கும் போது, துணைச் சிறுமப் பிரகாசம்
ஏற்படுகின்றது. இவ்விரு வேறுபட்ட மறைப்பு நிலைகளிலும் ,இரட்டை விண்மீனின் சராசரிப் பிரகாசத்தில் குறைவு ஏற்படுகின்றது.
அல்கோலின் பிரகாச- கால வரைபடம் நமக்கு மற்றோர் உண்மையையும் தெரிவிக்கின்றது. அல்கோலின் பிரகாசம் முதன்மைச்
சிறுமத்திலிருந்து துணைச் சிறுமத்தை அடைந்து பின்னர் மீண்டும் முதன்மைச் சிறுமத்தைப் பெருகிண்ட்ரகுடு. அதாவது இரு அடுத்தடுத்த
முதன்மைச் சிறுமத்திற்கு மிகச் சரியாக இடையில் துணைச் சிறுமம் அமைந்துள்ளது. அப்போது முதன்மைச் சிறுமத்திலிருந்து
பிரகாசம் அதிகரித்து துணைச் சிறுமத்தை எட்டி பின் பிரகாசம் குறைகிறது. இது நிலவின் கலைகள் போன்று நிலைக்கட்ட (Phase ) விளைவாகும்.
No comments:
Post a Comment