அல்கோலின் உண்மை நிலை
இரட்டை விண்மீனாகத் தோன்றும் அல்கோலும் ,அதன் துணை
விண்மீனும் மாறுபட்ட பண்புகளை உடையனவாக இருப்பினும் ,
அவை இரண்டும் சம காலத்தில் தோன்றி உருவானவைகளே என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.அல்கோலின் துணை விண்மீன்
ஒரு காலத்தில் அல்கோலைவிட நிறைமிக்க, வெப்பமிக்க
விண்மீனாக இருந்திருக்க வேண்டும். அது
தன்னுடைய ஹைட்ரஜன் இருப்பை எரித்து தீர்த்தவுடன் எலக்ட்ரான்
Electron) பெர்மி(Fermi)அழுத்தத்தால் ஈர்ப்புச் சுருக்கத்திற்கு
(Gravitational contraction) எதிராக விரிந்து பெருஞ் சிவப்பு
விண்மீனாக மாறியது. அப்போது அதன் மூலப்பொருட்களால் அதன்
உருவம் சீர்குலைவிற்கு ஆளாகத் தட்டையான கோளமாக
உருமாறியது. இதன் விளைவாக அதிலிருந்து மூலப்பொருட்களில்
ஒரு பங்கு வெளியேற அதை அருகிலுள்ள அல்கோல் உட்கவர ,
மூலப்பொருள் பரிமாற்றம் நிகழ்ந்தது .அதாவது முதன்மை
விண்மீன் துணை விண்மீனாகவும் துணை விண்மீன் முதன்மை
விண்மீனாகவும் நீண்ட காலத்திற்குப் பிறகு மாற்றம் பெற்றன .
1955 க்குப் பிறகு விண்ணில் செயற்கைக் கோள்களைச்
செலுத்தி எக்ஸ் கதிர் வானவியல் (X-ray astronomy)
மூலம் விண்வெளியை ஆராயும் நுட்பம் வளர்ச்சி பெற்றது.
எக்ஸ் கதிர்களை உமிழும் விண்மீன்கள் பலவற்றை இன்றைக்கு இனமறிந்துள்ளனர்.பெரும்பாலான எக்ஸ் கதிர் உமிழும்
விண்மீன்கள் இரட்டை விண்மீன்களாக உள்ளன. அதிலொன்று
மிகச் சிறியதாக 10 -20 சூரிய நிறையுடன்(solar mass) கூடிய
இருண்ட நியூட்ரான் (Neutron ) விண்மீனாகவும் மற்றொன்று
20 -30 சூரிய நிறையுடன் இயல்பான ஹைட்ரஜன் எரிதல்
தொடரும் விண்மீனாகவும் இருப்பது அறியப்பட்டது .
இக் கண்டுபிடிப்பு அல்கோலுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கத்தை
உறுதி செய்தது .
பெர்சியஸ் வட்டாரத்தில் கசியோப்பியா
பெர்சியஸ் வட்டார விண்மீன் கூட்டத்திற்குச் சற்று விலகி
இருக்கும் மற்றொரு வட்டார விண்மீன் கூட்டம்
கசியோப்பியாவாகும் .ஆல்பா பெர்சி என்ற விண்மீனுக்கும் ,
டெல்டா கசியோப்பியாவிற்க்கும் நடுவில் தனிக் கொத்து
விண்மீன் கூட்டம் ஒன்று உள்ளது . இதை அண்ட வெளிக்
கொத்து விண்மீன் கூட்டம் (Galactic cluster ) என்றும் கூறுவர்.
இது தெளிவான விளிம்பு இல்லாத நீள் வட்ட வடிவில்
ஒளிரும் ஒரு சிறிய மேகக் கூட்டம் போலக் காட்சி தருகின்றது.
உணர்வு நுட்பம் மிக்க தொலை நோக்கியால் பார்த்த போது
அது பல நூற்றுக் கணக்கான ஒளிப் புள்ளிகளாகப்
பகுக்கப்பட்டுத் தெரிந்தது. உண்மையில் இது இரு வேறு
மையத்தைப் பற்றிச் சுருங்கும் இரு தனிக் கொத்து விண்மீன்
கூட்டங்கள் என்பதி அப்போது தெரிந்து கொண்டனர் .
இதை NGC 869 ,NGC 884 என்று அட்டவணைப் படுத்தியுள்ளனர் .
ஒன்றுக்கொன்று மிக அருகாமையிலுள்ள இவ்விரு
தனிக் கொத்து விண்மீன் கூட்டங்களை கை(X)மற்றும் எச்(h)
பெர்சி என அழைக்கின்றார்கள். இவ்விரு விண்மீன் கூட்டங்களும்
சம தொலைவில் இருப்பது போலத் தோன்றினாலும்
57 ஒளி ஆண்டுகள் விட்டமுள்ள ஓரளவு கோளவடிவமுள்ள
எச் பெர்சி 6365 ஒளி ஆண்டுகள் தொலைவிலும்
47 ஒளி ஆண்டுகள் விட்டமுள்ள ஓரளவு கோளவடிவமுள்ள
கை பெர்சி 6700 ஒளி ஆண்டுகள் தொலைவிலும்
உள்ளன
இக் கொத்து விண்மீன் கூட்டங்களின் மையங்களில் விண்மீன்கள்
செறிவுற்றும் மையத்திலிருந்து விலகிச் செல்ல
விட்டு விட்டும் உள்ளன. பிரகாசமிக்க தனிக் கொத்து விண்மீன்
கூட்டங்களுள் இவையிரண்டும் பிரகாசமான
விண்மீன்களால் நிறைந்தவைகளாகும். எச் பெர்சியில் 300 விண்மீன்களும் ,கை பெர்சியில் 200 விண்மீன்களும் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர் .
இவ்விரு கொத்து விண்மீன் கூட்டங்களின் மையப் பகுதியில் வெப்ப மிக்க மாபெரும் விண்மீன்கள்
அதிகமுள்ளன .குறைந்தது 75 இருக்கலாம் எனக் கணக்கிட்டுள்ளனர். மாபெரும் விண்மீன்கள்
விண்வெளியில் மிகவும் அரிதாகக் காணப்படுபவை .இவை இக்கொத்து விண்மீன் கூட்டங்களில்
திரண்டு காணப்படுவது விண்ணியலாரை பெரும் வியப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. வெப்ப மிக்க
வின்மீகள் பெரும்பாலும் O -வகை விண்மீன் களாகும் .அதனால் இக்கொத்து விண்மீன் கூட்டங்களை
o -இணைத் தொகுப்புகள் (o -association ) என்று அழைக்கின்றார்கள் .
பெர்சியஸ் வட்டார விண்மீன் கூட்டத்தில் மற்றுமொரு O - இணைத் தொகுப்பு கொத்து விண்மீன் கூட்டம் உள்ளது.
இது சீட்டா பெர்சியசுக்கு அருகாமையில் ,வெப்ப மிக்க மாபெரும் விண்மீனான சீட்டா பெர்சியை உள்ளடக்கிய
O -இணைத் தொகுப்பு கொத்து விண்மீன் கூட்டமாக உள்ளது .இது பெர்சியசின் காலாக வர்ணிக்கப்பட்ட பகுதியில்
நுனிக்காலுக்கு அருகில் உள்ளது .இந்த இணைத் தொகுப்பை பெர்சியஸ் -II என்று குறிப்பிடுகின்றனர். .இத் தொகுதியில்
முன்னர் குறிப்பிட்ட பெர்சியஸ்- I O-இணைத் தொகுப்பை விடக் குறைந்த அளவு விண்மீன்களே உள்ளன. இதில் 12
விண்மீன்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதில் 982 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள சீட்டா பெர்சியும் அடங்கியுள்ளது.
இதன்புரப்பரப்பு வெப்ப நிலை 30,000 டிகிரி கெல்வினாகும்.நமக்கு மிக அருகில் காணப்படும் O -இணைத் தொகுப்பு இதுவே
என்று கூறுகின்றார்கள் .இது 100 ஒளி ஆண்டுகள் x 150 ஒளி ஆண்டுகள் பரப்புள்ள வெளியில் விரிந்துள்ளதாக அறிந்துள்ளனர் .
No comments:
Post a Comment