Wednesday, December 15, 2010

ஓப்ஹிசூயஸ் (Ophiuchus)


                                                       ஓப்ஹிசூயஸ் (Ophiuchus)



பாம்பைக் கையில் பிடித்து வைத்திருப்பவர் போலத்
தோன்றுவதாக இவ் வட்டாரத்தைக் கருதுவர்.
இது வடக்கில் ஹெர்குலஸ்லிருந்து பேரண்ட
நடுவரைக் கோட்டைக் கடந்து தெற்கில்
ஸ்கார்பியஸ் வரை விரிந்துள்ளது.
இது மருத்துவத்திற்கான கிரேக்க கடவுளான
அசிலிபியசை (asclepius )க் குறிப்பதாகக் கூறுவார்கள்.
இதுவே பிற்காலத்தில் மருத்துவ முறைகளுக்கான
ஒரு குறியீடாக விளங்கியது.


இவ் வட்டாரத்தின் தோற்றப் பிரகாச மிக்க விண்மீனான
ராஸ்அல்ஹாக் (Rasalhague ) எனப்படும் ஆல்பா (α)
ஓப்ஹியூச்சியின் தோற்ற ஒளிப்பொலிவெண்
2.1 ஆகும். அரேபிய மொழியில் இதற்கு
பாம்பாட்டியின் தலை என்று பொருள். இது
47 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ளது .

இவ் வட்டாரத்தின் பிற விண்மீன்கள்

84 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2. 43 தோற்ற
ஒளிப்பொலிவெண்ணுடன் சபிக் (sabik ) என்ற
ஈட்டா ஓப்ஹியூச்சியும், 4.58 ஒளி ஆண்டுகள்
தொலைவில் 2. 54 ஒளிப் பொலிவெண்ணுடன்
கூடிய ஹான் (Han ) என்ற சீட்டா(ς) ஓப்ஹியூச்சியும் ,
170 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.73
ஒளிப்பொலிவெண்ணுடன் யெட் பிரியார்(yed prior)
என்ற டெல்டா(δ) ஓப்ஹியூச்சியும், 82 ஒளி ஆண்டுகள்
தொலைவில் 2.76 ஒளிப்பொலிவெண்ணுடன்
சிபெல்ராய்(cebelrai) என்ற பீட்டா (β) ஓப்ஹியூச்சியும்,
108 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .23 ஒளிப்
பொலிவெண்ணுடன் யெட் போஸ்டீரியர்(Yed Posterior)
என்ற எப்சிலான் (ε) ஓப்ஹியூச்சியும், 166 ஒளி ஆண்டுகள்
தொலைவில்3 .82 ஒளிப்பொலிவெண்ணுடன் மார்பிக்
(Marfik) என்ற லாம்டா(λ) ஓப்ஹியூச்சியும் உள்ளன.
கேப்பா(κ),தீட்டா(θ), உப்சிலான்(υ) , காமா(γ) ஓப்ஹியூச்சி
விண்மீன்கள் முறையே 86 ,563 ,153 ,95 ஒளி
ஆண்டுகள் தொலைவிலும் 3.19, 3.27, 3.32, 3.75
தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் அமைந்துள்ளன.


தேள் வடிவ வட்டாரத்திலுள்ள அண்டாரெசுக்கு
வடக்காக ரோ (ρ) ஒப்ஹியூச்சி என்ற
பலவிண்மீன்களாலான தொகுப்பு விண்மீன்
உள்ளது. இதில் 4 .6 ஒளிப் பொலிவெண்ணுடைய
ஒரு В வகை விண்மீன் அகன்ற இடைவெளியுடன்
ஒளிப் பொலிவெண் 6.8 மற்றும் 7.3 உடைய இரு
துணை விண்மீன்களைப் பெற்றுள்ளது.
தொலைநோக்கி, முதன்மை விண்மீன் 5 . 7 ஒளிப்
பொலிவெண்ணுடன் கூடிய நெருக்கமான ஒரு
துணை விண்மீனைக் காட்டியுள்ளது .இந்த நான்கு
விண்மீன்களும் 'V ' வடிவத்தொகுப்பாக உள்ளன.
இது IC 4604 என்று பதிவு செய்யப்பட்ட ஒரு நெபுலாவில்
புதைந்திருக்கின்றது.



இவ் வட்டாரத்தில் ஒரு சில இரட்டை விண்மீன்கள்
உள்ளன. 20 ஒளி ஆண்டுகள் தொலைவில், ஏறக்குறைய ஒத்த வடிவத்துடன் தோற்ற ஒளிப்பொலிவெண் 5 .2 உடன் ஆரஞ்சு
நிறமுடைய இரு குறு விண்மீன்களாலான இரட்டை
விண்மீனாகும். இதன் சுற்றுக்காலம் 500ஆண்டுகள் என
மதிப்பிட்டுள்ளனர். 70 ஒப்ஹியூச்சியும் ஓர்
இரட்டை விண்மீன்.17 ஒளி ஆண்டுகள் தொலைவில்
88 ஆண்டுகள் சுற்றுக்காலத்துடன், தோற்ற ஒளிப்
பொலி வெண் 4 .2 , 6 . 1 உடைய ,மஞ்சள் மற்றும்
ஆரஞ்சு நிறமுடைய ,சூரியனை விட நிறை தாழ்ந்த
இரு விண்மீன்கள் இதிலுள்ளன.பூமியிலிருந்து நோக்கும்
போது இவை இரண்டும் மெதுவாக விலகிச் செல்வது
போலத் தோன்றுகின்றன.தற்பொழுது இவை 4 .6
வினாடிகள் கோண விலக்கத்துடன் தெரிகின்றன.
இவ் வட்டாரத்தில் பிரக்சிமா மற்றும் ஆல்பா
சென்டாரிக்கு அடுத்து நமக்கு மிக அருகில் இருக்கும்
விண்மீனான பெர்னார்டு விண்மீனும் இவ் வட்டாரத்தில்
உள்ளது. 1857 - 1923 -ல் வாழ்ந்த பெர்னார்டு எட்வர்டு
எமர்சென் என்ற வானவியலார் இதைக்
கண்டுபிடித்ததால், அவர் பெயரையே இவ்விண்மீனுக்குச்
சூட்டியுள்ளனர் .[வியாழனின் துணைக் கோளான
அமெல்தியாவைக் கண்டுபிடித்தவர் இவரே ஆவார்.
9 வயதில் போட்டோ படம் எடுக்கும்
நிலையமொன்றில் பணியாற்றியவர் ,இரவில்
பொழுதுபோக்காக விண்மீன்களைப் பின்தொடர்ந்தார்.
30 வயதிற்குள் 10 வால் விண்மீன்களைக்
கண்டுபிடித்தார். ஒவ்வொரு முறையும் இதற்காக 200
டாலர் அன்பளிப்பு பெற்றார். இதுவே அவருக்கு
வானவியலில் ஈடுபாடு கொள்ளத் தூண்டியது ].

பெர்னார்டு விண்மீன்


பெர்னார்டு விண்மீன் சிவப்பு நிறக் குறு விண்மீனாக
ஓப்ஹியூச்சி வட்டாரத்தின் வடக்கெல்லையில்
உள்ளது. . இவ் விண்மீன் பிற விண்மீன்களைக் காட்டிலும்
உயரளவு தனித்த தன்னியக்கத்தைப்
பெற்றுள்ளது. ஓராண்டில் 10 .4 வினாடிகள் கோண விலக்கம்
பெறுமாறு, அதாவது 180 ஆண்டுகளில் முழு நிலவின்
விட்டத்திற்குச் சமமான தோற்றத் தொலைவை
கடக்குமாறு இடம் பெயருகிறது. இதன்
நிறமாலையில் காணப்படும் பெயர்ச்சி இவ் விண்மீன்
108 கிமீ /வி என்ற உயர் வேகத்தில் நம்மை நோக்கி
வருவதாகத் தெரிவிக்கிறது. அதனால் ஒரு நூற்றாண்டு
காலத்தில் இதன் தொலைவு ௦. 036 ஒளி ஆண்டுகள்
குறைகின்றது. 11000 ஆண்டில் இது மிக நெருக்கமாக
3.85 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் என
மதிப்ப்பிட்டுள்ளனர். இது ஏற்கனவே 10 பில்லியன்
ஆண்டுகள் வயதானதாக இருந்தாலும் இன்னும் 40
பில்லியன் ஆண்டுகள் ஒளிரும் என்றும் அதன்
பின்னரே இது குளிர்ந்து கருந்துளை (Black hole)
குறு விண்மீனாக உருமாறும் என்றும்
கூறுகின்றார்கள். தற்பொழுது 5 .9 ஒளி ஆண்டுகள்
தொலைவில் உள்ள இதன் ஒளிர் திறன்
சூரியனின் ஒளிதிறனில் 2000 ல் ஒரு பங்கு என்றும்,
ஆரம் 0.2 மடங்கு என்றும், நிறை 0.2 மடங்கு என்றும்
அறிந்துள்ளனர். இதன் தோற்ற ஒளிப் பொலி வெண் 9 .54 .

இவ் வட்டாரத்தில் 4000 ஒளி ஆண்டுகள் தொலைவில்
9000 வானியல் அலகு குறுக்கில் NGC 6572
என்று பதிவு செய்யப்பட்ட கோளக நெபுலா ,தோற்ற
ஒளிப்பொலிவெண் 9 உடன், நீள் வட்ட வடிவில்
உள்ளது. இது 70 ஓப்ஹியூச்சிக்கு வடக்காக
அமைந்துள்ளது.

20 விண்மீன்களுடனும் தோற்ற ஒளிப்பொலிவெண்
4.2 உடனும் IC 4665 மற்றும் 60 விண்மீன்களுடன்
தோற்ற ஒளிபொலிவெண் 4.6 உடனும் NGC 6633
என்று பதிவு செய்யப்பட்ட தனிக் கொத்து
விண்மீன்கள் இவ் வட்டராத்தில் உள்ளன. மேலும்
இவ் வட்டாரத்தில் எண்ணிறைந்த கோளகக் கொத்து
விண்மீன் கூடங்கள் காணப்படுகின்றன. அவற்றுள்
சில M.9 (NGC 6333), M.10 (NGC 6254), M.12 (NGC 6218),
M.14(NGC 6402) , M.19 (NGC 6273) ,M.62 (NGC 6266),
M.l07 (NGC 6171) போன்றவைகளாகும். .இதில் M.14
குறைந்த செறிவுடன் கூடிய மையமும்,சிறிய
அளவில் நீள் வட்ட வடிவமும் கொண்டுள்ளது.
M.19 ,27000 ஒளி ஆண்டுகள் தொலைவில் சற்று
நீட்சியுற்ற நீள் கோள வடிவிலும், M.62 மிகவும்
ஒழுங்கற்ற வடிவிலும் இருக்க M..107 கரு வடிவப்
பகுதிகள் உள்ளனன். M.10ம் , M.12 ம் இவ் வட்டாரத்தின்
மையத்தில், பேரண்ட நடுவரைக் கோட்டுக்கு ஓரளவு
கீழே அமைந்துள்ளன. இவை முறையே 19,16
ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.
இவை இரண்டும் ஏறக்குறைய சம எண்னிக்கையில்
விண்மீன்களைக் கொண்டிருந்தாலும் M.12 சற்று
கூடுதலாக வெப்பமிக்க விண்மீன்களைக் கொண்டுள்ளது.

M.62 ம் , M.19 ம் இவ் வட்டாரத்தின் தெற்கத்திய
எல்லையில் சற்றேறக் குறைய சம தொலைவில்
(23 ஆயிரம் ஒளி ஆண்டுகள்) இரட்டை விண்மீன் போல
இரட்டை அண்டங்களாக உள்ளன.M.19ல் கூடுதலான
விண்மீன்களும்M.62 ல் சில குளிர்ந்த விண்மீன்களும்
உள்ளன.

No comments:

Post a Comment