Monday, December 13, 2010

Vinveliyil ulaa

Vinveliyil Ulaa


ஹெர்குலஸ்


விண்வெளியில் அதிகத் தோற்றப் பரப்பை அடைத்துள்ள
பெரிய வட்டார விண்மீன் கூட்டங்களுள் இதுவும் ஒன்று.
இது பெரிய வட்டாரமாக இருப்பினும் .இதில் அதிக
முக்கியத்துவம் பெற்ற விண்மீன்கள் ஏதும் இல்லை.

கிரேக்க நாட்டில் மாவீரனாகத் திகழ்ந்த ஹெர்குலஸ்சை
பெருமைப்படுத்தும் விதமாக இவ் வட்டாரத்திற்கு
அவன் பெயர் சூட்டியுள்ளனர் .இதில் 150 விண்மீன்களை
இனமறிந்துள்ளனர்.பெரும்பாலானவை வெறும் கண்களுக்குப்
புலப்பட்டுத் தெரிகின்றன. ஹெர்குலஸ் விண்மீன் வட்டாரம்
பூட்டெஸ் (Bootes ) வட்டாரத்திலுள்ள ஆர்க்டூரசுக்கும்
வேகா (vega) வட்டாரத்திற்கும் இடையில்
அமைந்திருக்கின்றது. . ஹெர்குலஸ்சின் தலை தெற்கில் ஆல்பா ஹெர்குலஸ் குறிக்கப்பட, பாதங்கள் வடக்கத்திய விண்மீன்களால்
சித்தரிக்கப்பட்டுள்ளன. மைசினேயின் அரசனான
யுரைஸ்தியஸ், ஹெர்குலஸ்யை அழைத்து அவனிடம் 12
அடிமைகளைக் கொடுத்து .டிராகானைக் கொல்லுமாறு கட்டளையிடுகின்றான். இந்த டிராகன் அடுத்துள்ள டிராகோ
(Dirago ) வட்டாரத்தால் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஹெர்குலஸ் வட்டாரத்தில் ஹெர்குலஸ் தனது வலது
முழங்காலை மடக்கி தரையில் வைத்து அமர்ந்து கொண்டு
இடது பாதத்தை டிராகானின் தலை மீது வைத்திருப்பது
போலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ் வட்டாரத்தில் ஆல்பா ஹெர்குலஸ்யை
விடப் பீட்டா ஹெர்குலஸ் தோற்றப் பிரகாசம் மிக்க
விண்மீனாகும். ராஸ்அல்கீத்தி (Rasalgethi) என்ற ஆல்பா
ஹெர்குலஸ் 218 ஒளி ஆண்டுகள்
தொலைவில் உள்ள சிவப்பு நிறப் பெரு விண்மீனாக
(Red giant) உள்ளது.ராஸ்அல்கீத்தி என்றால்
மண்டியிட்டவன் தலை என்று அரேபிய
மொழி பொருள் தருகின்றது. இதன் பரப்பு தொடர்ந்து விரிந்து
சுருங்குவதால் இது ஒரு மாறொளிர் விண்மீனாக
விளங்குகின்றது .அதனால் இதன் தோற்ற ஒளிப்பொலிவெண்
3 .1 முதல் 3 .9 வரை மாற்றத்திற்கு உட்படுகின்றது .இது
ஒரு M5 வகை விண்மீனாகும். இது ஒரியனில்(Orion) உள்ள
பெடல்ஜியூஸ் (Betelgeuse) சை விட ப் பெரியது .
ஆல்பா(α) ஹெர்குலஸ்லிருந்து 4 .6 வினாடி கோண விலக்கத்தில்
மஞ்சள் நிறத் துணை விண்மீன் ஒன்று 5 .4 என்ற
தோற்ற ஒளிப் பொலி வெண்ணுடன் ஹெர்குலஸ்சை
111ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.
இத் துணை விண்மீனே ஒரு நிறமாலை வகை இரட்டை
விண்மீனாகக் காட்சி அளிக்கின்றது. இதன் சுற்றுக் காலம்
52 நாட்கள் என்றும், துணை மற்றும் துணைக்குத் துணை
விண்மீன்கள் விரிவடையும் வளிம மண்டலங்களைக்
கொண்டுள்ளன என்றும் அறிந்துள்ளனர்.

இதன் விட்டம் சூரியனின் விட்டத்தைப் போல
800 மடங்காக உள்ளது. கொரினிபோரஸ் (koreneforos ) என்ற
பீட்டா(β) ஹெர்குலஸ் 102 ஒளி ஆண்டுகள் தொலைவில்
தோற்ற ஒளிப் பொலி வெண்2 .77 உடன் நிறமாலையால்
G .8 வகை விண்மீனாக உள்ளது.எப்சிலான் ஹெர்குலஸ்
85 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .92 தோற்றஒளிப்பொலி
வெண்னுடன் A0 வகை விண்மீனாகவும் மியூ(µ)ஹெர்குலஸ்
27 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .42 தோற்ற ஒளிப்பொலி
வெண்னுடன் G5 வகை விண்மீனாகவும் காமாஹெர்குலஸ்
140 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .75 தோற்ற ஒளிப்பொலி
வெண்ணுடன் A9 வகை விண்மீனாகவும் உள்ளன.
ரோ(ρ) ஹெர்குலஸ் ஒரு தோற்ற இரட்டை விண்மீனாகும்.
நெடிய இடைத் தொலைவுடன் தோற்றத்திற்கு அருகருகே
இருப்பது போலத் தோன்றுவதால் இது உண்மையான இரட்டை விண்மீனில்லை .இவற்றைத் தொலை நோக்கியால் பகுத்துணர
முடியும். இவற்றின் ஒளிப்பொலிவெண்கள் முறையே 4 .6 , 5 .4
ஆகும்.

ஹெர்குலஸ் வட்டாரத்தின் சிறப்பு அப்பகுதியில் காணப்படும்
கோளாகக் கொத்து விண்மீன்கூட்டங்களாகும்.இவற்றுள்
M .13 மற்றும் M .92 என்று பதிவு செய்யப்பட்ட விண்ணுருப்புகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .M 13 வடக்கு வானில் தோற்றத்தில்
அரை நிலவுப் பரப்பில் காணப்படுகின்றது. 23500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதில் சுமார் 5 லட்சம் விண்மீன்கள் உள்ளன .அண்டகக் கொத்து விண்மீன்கள் போலன்றி இதில் பல வெப்பமிக்க பெரு விண்மீன்கள் உள்ளன. எனினும் பிரகாசமிக்க விண்மீன்கள் குளிர்ந்த சிவப்பு நிறப் பெரு விண்மீன்களாக
இருக்கின்றன. வெப்ப மிக்க நீல நிற விண்மீன்கள் இதில்
மிக அரிதாகக் காணப்படுகின்றன. ஒரு சில விண்மீன்கள்
நம்முடைய சூரியன் போல இருக்கின்றன.

கோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் பொதுவாக
அதிகத் தொலைவிலும் மிக அதிக எண்ணிக்கையில் மாறொளிர் விண்மீன்களைக் கொண்டிருக்கும். M .13 ல் , 15 குறுகிய
அலைவு கால சிபிட்ஸ் (Cipids ) வகை மாறொளிர் விண்மீன்களை அறிந்துள்ளனர்.

கோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் 130 - 300
ஒளி ஆண்டுகள் நெடுக்கைக்குட்பட்ட வெளியில்
அடர்த்தியாகச் செரிவுற்றிருக்கும் விண்மீன்கள் உள்ளன.
மிகவும் கவனத்தைக் கவருவது என்னவென்றல் இதில் தூசிப் படலங்களோ,கரு வடிவங்களோ அல்லது படர்ந்து சூழ்ந்து
காணப்படும் நெபுலாக்களோ(Nebula)சிறுதும் காணப்படவில்லை.
மேலும் கோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்கள்
நிலைப்புத்தன்மை மிக்க கட்டமைப்புகளாக உள்ளன.
அவை எப்படி உருவாயின என்பது சரியாகத்
தெரியாவிட்டாலும் பல டிரில்லியன்(trillion)(10 ^ 12 )
ஆண்டுகளுக்கு அவை அடிப்படைமாற்றங்கள் ஏதுமின்றி
தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதை மட்டும் உறுதியாகக்
கூறலாம்.

அயோட்டா (ϊ) மற்றும் ஈட்டா (ε) ஹெர்குலஸ்க்கு மிகச்
சரியாக இடையில் M .92 அமைந்துள்ளது. இது M .13 யை
விடவும் அதிகத் தொலைவில் (24000 ஒளி ஆண்டுகள்)
இருக்கின்றது. இதில் பல வெப்ப மிக்க பெரு விண்மீன்கள்
இருப்பினும் M .13 யை விட குறைந்த எண்ணிக்கையிலேயே
உள்ளன.

No comments:

Post a Comment