Thursday, December 30, 2010

Vanna vanna ennangal

.மரம் போல வாழவேண்டும் மனிதா




மரம் போல வாழவேண்டும் மனிதா

வரமாகும் வாழ்க்கை இனிதாய்



ஓங்கி மரம் வளர்வதற்கும்

ஒடுங்கி இடுங்கிப் போவதற்கும்

சரியான காரணம் சல்லிவேராகும்

மண்ணில் மறைந்திருக்கும் அவை

கண்ணில் என்றும் தெரிவதில்லை



மரத்திற்கு அது வேர்

மனிதனுக்கு அது ஒழுக்கம்



உயர்ந்து மனிதன் வாழ்வதற்கும்

தாழ்ந்து வீழ்ந்து போவதற்கும்

முழுமையான காரணம் ஒழுக்கமாகும்

மனதில் ஒளிந்திருக்கும் அவை

மற்றவனுக்கு உடன் தெரிவதில்லை



மரம் போல வாழவேண்டும் மனிதா

வரமாகும் வாழ்க்கை இனிதாய்



பெருத்து பெருக்கம் செய்வதற்கும்

பெயராமல் உறுதியாய் உய்வதற்கும்

உறுதுணைக் காரணம் ஆணிவேராகும்

பூமிக்குள் புதைந்திருக்கும் அது

புயல் அடித்தாலும் அசைவதில்லை



மரத்திற்கு உறுதி ஆணிவேர் என்றால்

மனிதனுக்கு அது மனமாகும்

 
மரத்தில் விரியும் கிளைகள்


மனிதன் நடக்கும் வழிகள்

கிளையில் துளிர்க்கும் இலைகள்

மனதில் முளைக்கும் எண்ணங்கள்



நஞ்சை உறிஞ்சி நல்லதைத் தரும்

நாளும் பூத்து நற்கனி தரும்

வெயிலைத் தடுத்து நிழலைத் தரும்

வெட்டிய பின்னும் பொருளைத் தரும்



தான்வாழ பிறர்வாழ நினைக்கும்

பிறர்வாழ தான்வாழ நினைக்கும்

இதை மறந்துபோன மனிதனுக்கு

மரமே நீ உணர்த்தவேண்டும்

No comments:

Post a Comment