கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் (Globular cluster)
கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள்
ஒவ்வொரு அண்டத்திலும் விண்மீன்கள் ஓரிடத்தில் கூட்டம் கூட்டமாகவும் வேறிடத்தில் விலகி விரிந்தும்
காணப்படுகின்றன. அண்டவெளி வளிமத்திலிருந்து
விண்மீன்கள் ஒரே சமயத்தில் உருவாகும் போது
அவையாவும் பொது ஈர்ப்பால் கட்டுண்டு ஒரே
மாதிரியான இயக்கத்திற்கு இணைந்து உட்படுகின்றன.
இது போன்ற கொத்துக் கொத்தான விண்மீன்களை
cluster என்பர். கொத்து விண்மீன் கூட்டங்களில்
இரு வகைகள் உள்ளன. அவை அண்டவெளி
அல்லது அண்டகக் கொத்து விண்மீன் கூட்டம்
அல்லது தனிக் கொத்து விண்மீன் கூட்டம்
(galactic or open cluster) மற்றும் கோளகக் கொத்து
விண்மீன் கூட்டம் (Globular cluster)எனப்படும்.
முன்னதில் சில பத்து முதல் சில நூறு
வரையிலான விண்மீன்கள் ஓரளவு தளர்ச்சியாக
கட்டுண்டு குறிப்பிடும்படியான கட்டமைப்புச் சீர்மை
ஏதுமின்றி காணப்படும். பொதுவாக இவை
அண்டத்தட்டின் தளத்தில் அமைந்துள்ளன..
மாறாக கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள்
ஏறக்குறைய கோள வடிவச் சீர்மையுடன்
காணப்படுகின்றன. இதில் விண்மீன்கள் அடர்த்தியாக,
நெருக்கமாகக் கட்டுண்டு இருக்கின்றன. சராசரியாக
பத்தாயிரம் முதல் பத்து இலட்சம் வரை
விண்மீன்களைக் கொண்டிருக்கும் இவை பெரும்பாலும்
அண்டத்தட்டின் தளத்தில் அமைவதில்லை.
அண்ட வட்டத்தில்(halo) அதிகம் உள்ளன
கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் (Globular cluster)
என்பது கோள வடிவில் உருவாகியுள்ள விண்மீன்களின் கூட்டமாகும் .இவை ஒரு கோளின் துணைக் கோள்
போல அண்ட மையத்தை (galactic centre) சுற்றி வலம்
வருகின்றன. ஈர்ப்பினால் மிகவும் வலுவாக இணைக்கப்பட்ட
ஒரு கட்டமைப்பாக இருப்பதால், இது பொதுவாக கோள வடிவிலும்,அடர்த்தி மிக்கதாகவும் விளங்குகின்றது.
இலத்தீன் மொழியில் globulus என்றால் சிறிய கோளம்
என்று பொருள். கொத்துக் கொத்தாய் காணப்படும்
விண்மீன் கூட்டம் அண்டத்தின் கட்டமைப்பிற்கு
வெளியே உள்ள அண்டவெளியில் (halo) மட்டுமின்றி,
அண்டத்தின் கட்டமைப்பிலும் இடம் பெறுவதுண்டு.
அண்டவெளியில் காணப்படும் கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில்
விண்மீன்கள் உள்ளன. இவை மிகவும் கூடுதலான
வயதுடையனவாகவும் இருக்கின்றன. அண்டத் தட்டில்
காணப்படும் அண்டகக் கொத்து விண்மீன் கூட்டங்கள்
(galactic cluster) அல்லது தனிக்கொத்து விண்மீன் கூட்டங்கள்
(open) செறிவு தாழ்ந்தனவாக உள்ளன. கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்கள் என்பது மிகவும் பரவலாக
அண்ட வெளியில் எங்கும் காணப்படுகின்றன. பால்வழி
மண்டலத்தில் (Milky way) 150 -158 கோளகக் கொத்து விண்மீன்
கூட்டங்களை இனமறிந்துள்ளனர் .பெரிய அண்டங்களில்
இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்கள் இருக்கலாம்.நமக்கு அருகில் உள்ள ஆண்ட்ரோமெடா(Andromeda) என்னும் அண்டத்தில் 500 கோளகக்
கொத்து விண்மீன் கூட்டங்களைக் கண்டறிந்துள்ளனர்.
M .87 என்று பெயரிடப்பட்ட மிகப்பெரிய நீள்கோள வடிவ
அண்டத்தில் 13000 கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள்
இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இவை 131,000 ஒளிஆண்டுகள்
ஆரமுள்ள வட்டப்பாதையில் அண்டத்தைச் சுற்றி வலம் வருகின்றன.வட்டார வரம்புக்கு உட்பட்ட பகுதியில்
போதிய நிறையுடைய ஒவ்வொரு அண்டமும் கோளகக்
கொத்து விண்மீன் கூட்டங்களின் குழுமத்தோடு
தொடர்புடையனவாக இருக்கின்றன. சக்கிடாரியஸ்
குறு அண்டம் (Sagittarius dwarf), கானிஸ் மேஜர் (Canis Major )
குறு அண்டம் போன்ற அண்டங்கள் போலோமர் 12
(Polomer 12 ) என்பது போன்ற கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்களை பால் வழி மண்டலத்திற்கு
அளிக்கும் வழி முறையில் உள்ளன. இது கடந்த காலத்தில் அண்டங்களிலிருந்து எவ்வளவு கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதை
விவரிக்கக் கூடியதாக இருக்கின்றது
அண்டத்தில் முதன் முதலாக உருவான சில விண்மீன்கள்
கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் காணப்பட்டாலும்
அவற்றின் மூலமும் அண்டத்தின் பரிணாம வளர்ச்சியில்
அவற்றின் பங்கும் இன்னும் தெளிவாக வரையறுக்கப்
படாமலேயே இருக்கின்றது. கோளகக் கொத்து விண்மீன்
கூட்டங்கள் பொதுவாக 100 - 1000 வரையில் உலோகச்
செறிவு தாழ்ந்த,பழமையான விண்மீன்களைக் கொண்டுள்ளன.
கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் காணப்படும்
இந்த வகை விண்மீன்கள்,சுருள் புய அண்டங்களின்(Spiral galaxy)
மையக் கருப் பகுதியில் இருக்கும் விண்மீன்களைப்
போல இருக்கின்றன. எனினும் மிகக் குறுகிய விண்வெளிப்
பகுதிக்குள் அடங்கியிருக்கின்றன.இவற்றுள்
வளிமமோ ,தூசிப் படலமா காணப்படவில்லை. இது
வெகு காலத்திற்கு முன்பே கவரப்பட்டு விண்மீனாகத்
திரண்டிருக்கலாம் என்பதைத் தெரிவிக்கக் கூடியதாக
இருக்கின்றது.
ஒரு கன பார்செக்(Cubic parsec ) பரும வெளியில் 0௦.4
விண்மீன்கள் என்ற வீதத்தில் கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்களில் விண்மீன்கள் செறிவாக அடங்கி
இருக்கின்றன .எனினும் இக்கட்டமைப்பு விண்மீன்-கோள்
அமைப்பிற்கு அனுகூலமிக்கதாக இல்லை. நெருக்கமாக
உள்ள விண்மீன்களின் கூட்டத்தில் கோள்களின்
சுற்றுப்பாதை இயக்கம் தாய் விண்மீனின் ஈர்ப்புக்கு
மட்டும் கட்டுப்படாமல் பிற விண்மீன்களினாலும்
பாதிப்பிற்கு உள்ளாகிறது. இத்தகைய கட்டமைப்பில்
கோள்களின் சுற்றுப்பாதை இயக்கம் நிலையற்றதாக
இருப்பதால் அவற்றின் வாழ்வுக் காலம் மிகவும்
குறுகியதாக இருக்கும் .பெரும்பாலும் கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்களில் உள்ள விண்மீன்கள்
யாவும் பரிமாண வளர்ச்சிப் படியில் ஏறக்குறைய ஒரே
காலகட்டத்தில் உள்ளன. இது ஒரு கோளகக் கொத்து
விண்மீன் கூட்டத்திலுள்ள விண்மீன்கள் எல்லாம்
சற்றேறக்குறைய ஒரே சமயத்தில் ஒரே மூலத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று தெரிவிக்கின்றது.
பால் வழி மண்டலத்திலுள்ள உமேகா செண்டாரி,
M 31 ல் உள்ள G 1 என்ற கோளகக் கொத்து விண்மீன்
கூட்டம் போன்றவை மாபெரும் நிறை கொண்டவை .
இவற்றின் நிறை பல மில்லியன் சூரிய நிறையாக
உள்ளது.மாபெரும் நிறையுடைய கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்கள் உண்மையில் அவ்வட்டாரத்திலுள்ள
பெரிய அண்டங்களால்உட்கவரப்படும் குறு அண்டங்களின்
(dwarf galaxy )உள்ளகமாக உள்ளன. என்பதற்கு இவை இரண்டும்
சான்றாக உள்ளன. பால் வழி மண்டலத்தில்
காணப்படும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில்
25 விழுக்காடு குறு அண்டத்துடன் உட்கவரப்பட்டவைகளாக உள்ளன .நிறைமிக்க பல கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்களில் மையக் கருப் பகுதிகளில்
கருந்துளை விண்மீன்கள் (Black hole) இருக்கலாம்
என்றும் நம்பப்படுகிறது.
விண்மீன்களை இரு வகையாகப் பிரித்திருக்கின்றர்கள் .
ஹைட்ரஜன், ஹீலியம் தவிர்த்த பிற தனிமங்களின் செழுமை
அதிகமாக இருப்பின் அவற்றை இரண்டாம் வகை
(Population II ) விண்மீன் என்பர்.குறைவான் செழுமை
கொண்டவைகளால் ஆனவற்றை முதல் வகை
(population I ) என்பர். பொதுவாக கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்களில் உள்ள விண்மீன்கள் எல்லாம்
இரண்டாம் வகை விண்மீன்களாக உள்ளன.
உலோகத் தனிமங்கள் ,விண்மீன்களின் பரிமாண
வளர்ச்சிப் படியில் உயர் வெப்ப நிலைகளில்
நிகழும் அணுக்கருச் சேர்க்கை வினைகளால்
ஏற்படுகின்றன. உயர் வெப்ப நிலைகளில் நிகழ்வதால்
ஒரு விண்மீனில் இருக்கும் உலோக அணுக்களின்
செழுமை அவ விண்மீனின் வயதைக் குறிக்கும்
ஒரு காரணியாக விளங்குகிறது .
ஐயா, தங்களுடைய ப்ளாக் மிகவும் சிறப்பாக உள்ளது. தகவல்களுக்கு நன்றி...
ReplyDelete