Friday, October 7, 2011

vinveliyil ulaa

அல்கோல் விண்மீனின் பிரகாச மாற்றம்


பிரகாசம் அதிகரிப்பை எதிரொளிப்பு மூலம் விளக்க முடியும் .வெப்ப மிக்க அல்கோல் ,குளிர்ச்சியான துணை விண்மீனின்
நேர் முகப் பரப்பில் கதிர்வீச்சைப் பொழிய ,அது அதைச் சற்று பிரகாச மிக்கதாகக் காட்டுகிறது.
கலைக்கட்டம் சுழி என்ற நிலையில் குளிர்ச்சியான துணை விண்மீன் வெப்ப மிக்க அளகோலை முழுமையாக மறைக்கின்றது.
அப்போது நாம் துணை விண்மீனின் குளிர்ச்சியான இருண்ட முகப்பரப்பையே காண்கிறோம் .அது சுற்றியங்கும் போது
கலைக்கட்டம் அதிகரிக்கின்றது. அப்போது துணை விண்மீனின் பிரகாசமான எதிரொளிப்புப் பகுதியின் அளவு தொடர்ந்து
அதிகரிக்கின்றது .கண்ணோட்டத் திசைக்கு சுற்றுப் பாதையின் ஆரம் செங்குத்தாக இருக்கும் போது இது பெருமமாக
இருக்கிறது. அதன் பின் துணை விண்மீனின் பிரகாசமான எதிரொளிப்புப் பகுதியின் அளவு தொடர்ந்து குறைய அமைப்பின்
மொத்தப் பிரகாசமும் சிறிதளவு குறைகிறது. பின்னர் துணை விண்மீன் அல்கோலால் மறைக்கப்படுகிறது. அல்கோல் துணை
விண்மீனால் மறைக்கப்படுவதற்கும் அல்கோலால் துணை விண்மீன்மறைக்கப்படுவதற்கும் வேறுபாடு உள்ளது.
அல்கோலைத் துணை விண்மீன் மறைக்கும் போது பிரகாசம் பெருமளவு தடைப்படுகின்றது .அதனால் முதன்மைச் சிறுமம்
விளைகிறது. ஆனால் துணை விண்மீனை அல்கோல் மறைக்கும் போது பிரகாசம் பெருமளவு தடைப் படுவதில்லை .துணை
விண்மீனின் எதிரொளிப்பு ஒளி அல்கோலால் தடுக்கப்படுவதால் பிரகாசத்தில் சிறிதளவு மாற்றமே ஏற்படுகிறது.
அதனால் துணைச் சிறுமம் உண்டாகிறது. அல்கோலால் படிப்படியாக மறையும் அல்லது வெளிப்படும் துணை விண்மீன் மீது
அல்கோல் ஒளியை வீசி அதன் கலைத் தோற்றத்தை ஏற்படுத்துவதால் ,சுற்றுக் கால முறைப்படி பிரகாச மாற்றத்திற்கு
உள்ளாகிறது.
இந்த வரை படத்தின் துணை கொண்டு மறைப்பு மாறொளிர் விண்மீனின் சுற்றுக் காலம் ,பரிமாண அளவு ,நிறை ,அடர்த்தி,
போன்ற பல இயற்பியல் பண்புகளை ஒருவாறு கணிக்க முடியும். இதன் படி அல்கோல் மெல்லிய நீலங் கலந்த வெண்ணிறமுடைய
ஓரளவு மிதமான பரிமாண முடைய ஒரு விண்மீனாகும். இத விட்டம் 4 ,183 ,400 கிமீ ( நமது சூரியனின் விட்டம் 1 ,391 ,000 கி மீ ) .
அல்கோல் ,சூரியனை விட உருவ அளவில் 9 மடங்கு பெரியது. .இத புறப் பரப்பு வெப்ப நிலை 15000 டிகிரி கெல்வின் நெடுக்கையில் உள்ளது .
சூரியனை விட 100 மடங்கு பிரகாசமானது .நிறையோ சூரிய நிறையைப் போல 3 .5 - 4 மடங்காக உள்ளது .அடர்த்தியோ சூரியனை விடக் குறைவு.
அல்கோலின் அடர்த்தி சூரிய அடர்த்தியில் 0 .07 மடங்கு தான்.
இதன் துணை விண்மீன் அளகோலை ஒப்பிட சற்று பெரிய அளவினதாகும். அதன் விட்டம் 4 ,827 ,000 கிமீ ஆக மதிப் பிட்டுள்ளனர் .
இது அல்கோலை விடக் குளிர்ச்சியானது என்பதால் இதன் புறப் பரப்பு வெப்ப நிலை 7000 டிகிரி கெல்வின் நெடுக்கையில் உள்ளது .
அதாவது நமது சூரியனை விட 1000 டிகிரி கெல்வின் புறப்பரப்பு வெப்ப நிலையைக் கூடுதலாகப் பெற்றுள்ளது . எனினும் சூரியனை விட மங்கலாக,
ஆரஞ்சு நிறத்தில் காட்சி தருகிறது.. இதற்குக் காரணம் அதன் நிறை சூரிய நிறைக்குச் சமமாகவும், உருவம் பல மடங்கு பெரியதாகவும் இருப்பதால்
அடர்த்தி குறைவாக இருப்பதாகும் .இதன் அடர்த்தி சூரிய அடர்த்தியில் 0 .04 மடங்கு மட்டுமே .
இரட்டை விண்மீன்களில் புறப்பரப்பு வெப்பநிலையில் ஒரு சில ஆயிரம் டிகிரி கெல்வின் வெப்ப நிலை வேறுபாடே ,மறைப்பு விளைவை வெறும்
கண்களுக்குப் புலப்படுத்திக் காட்டப் போதுமானதாக இருக்கிறது என்பதை இதை ஆராய்ந்த பின்னரே தெரிந்து கொண்டனர்.

அல்கோலுக்கும் அதன் துணை விண்மீனுக்கும் உள்ள இடைப்பட்ட தொலைவு 10 ,458 ,500 கிமீ .சூரியக் குடும்பத்தில் புதனின்
சுற்றுப் பாதையின் ஆறாம் 58 ,000 ,000 கிமீ .அதாவது அல்கோல்- துணை விண்மீன் அமைப்பு சூரியன்-புதன் அமைப்பை விட
நெருக்கமாக உள்ளது எனலாம் .அதாவது அல்கோல்-துணை விண்மீன் புரப்பரப்பிடைத் தொலைவு சுமார் ஒரு மில்லியன்
கிமீ மட்டுமே .
கெப்ளரின் விதியைக் கொண்டு இரட்டை விண்மீன்களில் உள்ள விண்மீன்களின் நிறையைக் கணக்கிட முடியும். இதன் படி ஓர்
அமைப்பில் சுற்றுக் காலத்தின் இருமடி அதன் ஆரத்தின் மும்மடிக்கு நேர் விகிதத்தில் இருக்கிறது எனலாம் .
அல்கோலின் பிரகாசம் மாறாது நிலையாக இல்லை என்பது நெடு நாட்களுக்கு முன்பே அறியப்பட்ட உண்மை என்றாலும்
பிரகாசத்தின் அழிவுக் காலத்தில் ஏற்படும் மாற்றங்களும் மாறாது நிலையாக இல்லை என்பதற்கான காரணம் அண்மைக்
காலத்திலேயே கண்டறியப்பட்டது .அல்கோல் விண்மீன் உண்மையில் ஓர் இரட்டை விண்மீன் இல்லை ,அது மூன்று
விண்மீன்களின் கூட்டமைப்பு என்பது உணர்வுநுட்பம் மிக்க தொலை நோக்கி உணர்த்திக் காட்டியது .அல்கோலின் மூன்றாவது
துணை விண்மீன் ,முதன்மை விண்மீனான அளகோலை விட 1 .87 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இதன் சுற்றுத்
தளம் பார்க்கப் படும் திசைக்கு ஓரளவு சாய்ந்து செங்குத்தாக இருப்பதால் மறைப்பு நிகழ்வை ஏற்படுத்துவதில்லை .
எனினும் இதன் இயக்கத்தினால் அல்கோல் மற்றும் அதன் முதல் துணை விண்மீன்களின் சுற்றுக் காலத்தில் குறிப்படும்
படியான மாற்றம் தூண்டப் படுகிறது. அதாவது அலைவு காலம் அலைவுற்று கால முறைப்படியான மாற்றத்திற்கு
உள்ளாகிறது

1 comment:

  1. சார், கொஞ்சம் ஆங்கிலப் பெயர்களை உட்புறத்தில் எழுதினீர்கள் என்றால் எங்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். ஆங்கிலமும், தமிழும் கலந்து படித்ததால் எதிலும் முழுமையில்லை. மன்னிக்கவும். உ.ம் கலைக்கட்டம் சுழி ? எனக்குப் புரிவது போல் தெரிந்தாலும், உண்மையாகப் புரியவில்லை.

    ReplyDelete