விண்வெளியில் உலா
லியோ விண்மீன் வட்டாரம்
36 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டென போலா (Denebola ) என்றழைக்கப் படும் பீட்டா லியோனிசின் தோற்ற ஒளிப் பொலிவெண் 1.6. இது சிங்கத்தின் வால் பகுதியில் அமைந்துள்ளது. இதை நம்மவர்கள் உத்திரம் என அழைப்பார்கள் .
அல்ஜிபா (Algieba) என்றழைக்கப்படும் காமா லியோனிஸ் 126 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள ஓர் இரட்டை விண்மீனாகும்.இவை இரண்டும் 600 ஆண்டுகள் சுற்றுக் காலத்துடன் பொன்னிற ஆரஞ்சு நிறத்துடன் ஒளிரும் பெரு விண்மீன்களாகும் .இவற்றின் ஒளிப் பொலிவெண் முறையே 2.4 ,3.5 ஆகும் தொலை நோக்கியால் பார்க்கும் போது அகன்ற தொலைவில் 5 கொண்ட ஒரு விண்மீன் இருப்பதைக் காணலாம் எனினும் இது அல்ஜிபாவுடன் ஈர்ப்புத் தொடர்பின்றி உள்ளது. ஜோஸ்மா (zosma) எனப் பெயரிடப்பட்ட டெல்டா லியோனிஸ் 58 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.56 ஒளிப் பொலி வெண்ணுடன் காணப்படுகிறது . ஆசாத் ஆஸ்ட்ராலிஸ் (Asad Australis) என்ற எப்சிலான் லியோனிஸ் 251 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.97 ஒளிப் பொலி வெண்ணுடனும், சோர்ட்( Chort) என்ற தீட்டா லியோனிஸ் 178 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.33 ஒளிப் பொலிவெண்ணுடனும் அட்காபேரா (Adhafera) என்ற சீட்டா லியோனிஸ் 99 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.43 ஒளிப் பொலிவெண்ணுடனும் ,ஈட்டா லியோனிஸ் 2130 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.48 ஒளிப் பொலி வெண்ணுடனும் சுப்பரா என்ற உமிகிறான் லியோனிஸ் 135 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.52 ஒளிப் பொலிவெண்ணுடனும் ,ரோ லியோனிஸ் 5720 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.84 ஒளிப் பொலிவெண்ணுடனும், ராசெலாஸ் (Rassalas) என்ற மியூ லியோனிஸ் 133 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.88 ஒளிப் பொலிவெண்ணுடனும் இக் கூட்டத்தில் காணப் படுகின்றன. இவற்றுள் அருகருகே அமைந்துள்ள தீட்டா மற்றும் டெல்டா லியோனிஸ்ஸை நம்மவர்கள் பூரம் என்று அழைக்கின்றார்கள். சீட்டா
லியோனிஸ் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அகன்ற இடை வெளியுடன் கூடிய
மும்மீனாகும். இதை வடக்கு மற்றும் தெற்கில் 35,39 லியோனிஸ் என்று அழைக்கின்றார்கள் . இவற்றின் ஒளிப் பொலி வெண் 6 . இவ்வட்டாரத்தில் ஆர் லியோனிஸ்என்ற ஒரு பெருஞ் சிவப்பு விண்மீன் மீரா மாறொளிர் விண்மீன் போல தன பிரகாசத்தை 10 மாதத்திற்கு ஒரு முறை பெரும, சிறும பிரகாசமாக 4 மற்றும் 11 என்ற ஒளிப் பொலி வெண்களுக்கிடையே அலைவுறச் செய்கிறது.
M.65 (NGC 3623) என்று பதிவு செய்யப்பட்ட Sb வகை சுருள் புய அண்டம் 35 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலும் ஒளிப் பொலி வெண் 9.3 உடனும், M.66 (NGC 3627) என்று பதிவு செய்யப்பட்ட M .65 உடன் ஒட்டியுள்ள மற்றொரு Sb வகை சுருள் புய அண்டம் ஒளிப் பொலி வெண் 9 உடனும் M.95 (NGC 3351) என்ற SBb வகை சுருள் புய அண்டமும் M.96 ( NGC 3368) என்ற Sb வகை சுருள் புய அண்டமும் இவ்வட்டாரத்தில் உள்ளன. M.105, E 1 வகை நீள் வட்ட அண்டமாகக் காட்சியளிக்கின்றது. இந்த அண்டங்களின் தோற்ற ஒளிப் பொலி வெண் 9-10 என்ற நெடுக்கைக்குள் உள்ளது. M.65 யும் M.66 ம் சற்று சாய்வாகத் தோன்றுவதால் நீள் வட்டம் போன்ற உருவத்தில் தெரிகின்றன.M.95 மற்றும் M.96 இரண்டும் ஏறக்குறைய 20 -25 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.
இவ்வட்டாரத்தில் 7.78 ஒளி ஆண்டுகள் தொலைவில் வுல்ப் (Wolf)359 என்று குறிப்பிடப் படுகின்ற ஒரு குறு விண்மீன் உள்ளது .இது பிராக்சிமா செண்டரி,பெர்னார்டு விண்மீனுக்கு அடுத்து மூன்றாவதாக நமக்கு அருகில் இருக்கும் ஒரு விண்மீன். இது 1918 ல் மாக்ஸ் வுல்ப் என்பாரால் கண்டுபிடிக்கப் பட்ட மிகவும் மங்கலான குறுஞ் சிவப்பு விண்மீனாகும்.இதன் ஒளிர் திறன் சூரியனின் ஒளிர் திறனில் 50000 ல் ஒரு பங்குதான். தோற்ற ஒளிப் பொலி வெண் 13.45 .இது அவ்வப்போது தன் மூலப் பொருளை பீற்றி வெளியேற்றுகிறது.