Sunday, October 14, 2012

Short story


கருணைக் கொலைகள் கம்பியூட்டர் பொறிஞரான தர்மராஜன் வெளிநாடுகளில் வேலை பார்த்து விட்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு திரும்பி வந்தார்.நாற்பது வயது, ஏனோ இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஆட்சியிலும்,அலுவலகங்களிலும் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களையும்,குடி மக்களின் நலன்களுக்குப் பெரும்பாலும் எங்கும் முக்கியத்துவம் அளிக்கப்பாடாத நிலையையும் கண்டு மனம் வெகுண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஒரு சமுக ஆர்வலராக மாறிவிட்டார். பொதுவாக நடுத்தர இந்திய மக்களிடையே சமுக ஆர்வலராகும் எண்ணம் ஓங்கி வளர்ந்திருந்தாலும் பேச்சில் ஒலிக்கும் அளவிற்கு செயலில் வெளிப்படுவதில்லை.தர்மராஜன் இதற்கு விதிவிலக்காக இருந்தார்.

கொலைகாரர்கள்,கொள்ளைக்காரர்களை விட மக்களைத் தொடர்ந்து ஏமாற்றும் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் அவருக்கு கொடுமைக்காரர்களாகத் தெரிந்தனர் . சாட்சியே இல்லாமல் குற்றங்களைச் செய்யவும் ,சாட்சிகள்,தடையங்கள் ஏதுமிருந்தால் அதை தங்கள் செல்வாக்கைக் கொண்டு அழித்துவிடவும் ,அவர்களால் வெகு எளிதாக முடிவதால் சாதாரண மக்களால் அவர்களுடைய குற்றங்களை போதிய சாட்சிகள் இன்றி நிரூபிக்க முடியாமல் போய்விடுகின்றது.இதனால் அவர்கள் செய்யும் குற்றங்களிலிருந்து தப்பிப்பதுடன் ,மேலும் குற்றங்கள் செய்வதற்குத் துணிவும் கொள்கின்றார்கள். அவர்கள் செய்த குற்றத்திற்கு அவர்களைத் தவிர வேறு சாட்சியே இல்லாததால் சாதாரண மக்களால் சாட்சி கொடுக்கவே முடியாது போனது.அவர்களுடைய வாழ்க்கைத் தரத்திலும்,சொத்துச் சேர்க்கையிலும் காணப்படும் முரண்பாடான மாற்றங்களைக் கொண்டே அவர்கள் குற்றவாளிகள் என வாதிட்டாலும் நீதி மன்றத்தில் எடுபடுவதில்லை.

மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிப் பிழைப்பு நடந்ததும் அரசியல் வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் ,நிழல் உலகத் தாதாக்களையும் இனமறிந்து சூரசம்காரம் செய்யவேண்டும் என்று ஒருநாள் தர்மராஜன் விபரீத முடிவெடுத்தார். அவர் படித்த விஞ்ஞானம் எந்தத் தடையமும் இல்லாமல் சாமர்த்தியமாக ஆளை முடித்து விட்டுத் தப்பித்துக் கொள்ளும் வழிமுறைகளில் சில யுத்திகளைத் தெரிந்து கொள்ள துணை செய்தது. சினிமாவில் வந்த ரமணா போல மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என அடுத்தடுத்து கொலை செய்ய மாநிலம் மிகவும் பரபரப்பானது. இறந்த உடலுக்கு அருகில் ஒரு துண்டுக் காகிதத்தையும் விட்டுச் செல்வது அவர் வழக்கமாக இருந்தது. அதில் சித்திரகுப்தன் பாணியில் கொலை செய்யப்பட்ட ஆள் என்னென்ன தவறுகளைத் திரை மறைவில் செய்துள்ளார், அவருக்கு இருக்கும் சொத்துக்கள் எப்படி எப்பொழுது வந்தது என்று பல உண்மைகளை எழுதி,மக்களுக்குத் துரோகம் செய்து ஏமாற்றிப் பிழைக்கும் இவர்கள் இனி இல்லாமல் இருப்பதே நல்லது. அடுத்த பிறவியிலாவது இவர்கள் நேர்மையுடன் செயல் படவேண்டும் என்பதற்காகவும்,நொந்து நூலாகி வெந்து கூழாகிப் போன மக்களுக்காகவும் செய்யப்பட்ட இது ஒரு கருணைக் கொலை என்று குறிப்பிட்டு இருந்தார்.

காவல் துறையினர் கொலையாளியை வலை போட்டுத் தேடிக் கொண்டிருந்தனர்.- சட்டத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக இல்லை அவர்களுக்கும்,அரசியல் வாதிகளுக்கும் பிழைப்பில் மண் விழுந்து விட்டதே என்பதற்காக .கொலையாளி யார் வேண்டுமாலும் இருக்கட்டும்,நாங்கள் கேட்டுக் கொண்டும் அரசியல்வாதிகள்,அதிகாரிகள் மாற்றிக் கொள்ளாததாலும் ,நாங்கள் வேண்டிக் கொண்டு காவல் துறையினர் தடுத்து நிறுத்தாததாலும் நாங்கள் விரும்பி எங்களால் முடியாத காரியத்தை அவர் செய்து முடித்து விட்டார். அவருடைய பணி இன்னும் முடியவில்லை . அவர் போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் பிரார்த்தித்துக் கொண்டார்கள்

கருணைக் கொலை செய்த கொலையாளியைக் கண்டு பிடித்து பாராட்டும் பரிசும் கொடுக்கவா தேடுகின்றார்கள் .இல்லவே இல்லை .அவனை இல்லாதவனாக்கிவிட்டு,தடையேதுமில்லாமல் மீண்டும் மக்களை ஏமாற்றிப் பிழைக்கத்தானே வழி தேடுகின்றார்கள்.மாறாவிட்டால் இயற்கை கூட செயற்கையின் துணையை நாடும் போலும். நல்லது என்றால் இயற்கை கூட தப்பு செய்யத் தயங்காது போலும்.

No comments:

Post a Comment