Sunday, October 7, 2012

Arika ariviyal



அறிக அறிவியல்

மொசார்ட் விளைவு (Mozart effect ) என்றால் என்ன ?

மொசார்ட் (Wolfgang Amadeus Mosart )ஆஸ்ட்ரியா நாட்டில் 1756 பிறந்து 1756 – 1791 காலத்தில் வாழ்ந்த ஒரு மாபெரும் இசை மேதை . 1993 ல் ரௌச்சர் (Rauscher) என்பார் மொசார்ட்டின் சொனாட்டா(Sonata)(K448) இசையை 10 நிமிடம் கேட்டால் சாதாரணப் பொருட்களுடன் தொடர்புடைய காலம் மற்றும் இடம் பற்றிய கற்பனைத் திறன் தற்காலியமாக மேம்படுகிறது என்று கூறினார். இந்த அக நிலை மாற்றம் 10 -15 நிமிடங்களுக்கு மட்டுமே இருந்தது . சில ஆராய்ச்சியாளர்கள் அதை உறுதி செய்தாலும் வேறு சிலர் இதை ஒப்புக் கொள்ள மறுத்தனர். இசையில் மயங்கி தன் மனதைப் பறிகொடுத்துவிட்டு மகிழ்ச்சியால் துள்ளி எழும்போது ஏற்படும் உற்சாகமே இப்படி வெளிப்படுகின்றது என்றும்,நுகர் உணர்வு இல்லாவிட்டால் இப்படி நிகழ வழியில்லை என்றும், மொசார்ட் விளைவு என்று ஒன்றும் இல்லை என்றும் இவர்கள் கூறினார்கள். இதனால் ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து மொசார்ட் இசையின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது என ஆராய்ந்தனர். எலிகளின் சுறுசுறுப்பு இசை கேட்ட பின் இயல்பு நிலையைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. ரசிப்புத் தன்மை ,திறன் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கவில்லை எனக் கண்டறிந்தனர்.சிறு வயதுக் குழந்தைகளுக்கு இசைப் பயிற்சி அளித்த போது அவர்கள் இசைப்பயிற்சி பெறாத குழந்தைகளை விட செயல் திறன்மிக்கவர்களாக இருந்தனர்.இதை PET எனப்படும் பாசிட்ரான் உமிழ்வு வரைபடம் காட்டி(Positron emission tomography ) மூலமும் காந்த ஒத்ததிர்வு வரைபடம் காட்டி மூலமும் மூளையை விரிவாக ஆராய்ந்தனர். இசை கேட்டு ரசிக்கும் போது மூளையின் பல பகுதிகள் ஒரு சேர தூண்டப்படுகின்றன. இசையின் சுருதி,தாளம்,பண்திறம் அதிர்வெண், ஒத்ததிர்வு, சுரம்,ஒலிப்பண்பு,ஏற்ற இறக்கம் போன்ற பல இயற்பியல் தன்மைகள் மூளையின் வெவேறு பகுதிகளினால் உணரப்படுகின்றன. அதாவது இசை மூளையின் பல பகுதிகளை சட்டென உறக்க நிலையிலிருந்து இயக்க நிலைக்கு உயர்த்தி விடுகின்றது. அது போல ஒரு பொருளைக் கொண்டு வினையாற்றும் போதும் மூளையின் வேறு பல பகுதிகள் தூண்டப்படுகின்றன. இப் பகுதிகள் யாவும் இசை உணர் பகுதிகளுடன் மேற் பொருந்தியிருக்கின்றன (ovrerlap) .இதனால் இசை கேட்டுக் கொண்டே வினையாற்றும் போது செயல் திறன் வெகுவாக மேம்படுகின்றது எனக் கண்டறிந்துள்ளனர். ஆடிப் பாடி வேலை செய்தா அலுப்புத் தெரியாது .இசை கேட்டுக் கொண்டே வேலை செய்தாலும் உற்சாகம் குறையாது. இதனால்தான் துணி துவைப்பவர்கள், தேய்ப்பவர்கள் ,தைப்பவர்கள் ,கட்டட வேலை செய்பவர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள் எனப் பலதரப்பட்ட தொழிலாளிகள் சினிமாப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே அலுப்புத் தெரியாமல் வேலை செய்கின்றார்கள் போலும். காதலர்களுக்கு இசை காதலை வளர்க்கும் மயக்கும் மொழி.கோகுலத்தில் கண்ணன் தன் குழலோசையால் பசு மாடுகளைக் கவர்ந்தான். பாம்பாட்டி தன் மகுடியால் பாம்புகளை மயக்கிப் பிடிப்பார். இசைக்கு இறைவனும் அடிமை என்று பக்திப் பாடல்களைப் பாடுவார்கள்.இசையால் தாவரங்களின் வளர்ச்சி முடுக்கப்படுகின்றது எனப் பலரும் சொல்லக் கேட்டிருக்கின்றோம். இசைக்கும், உயிரினங்களுக்கும் ஒரு உள்ளார்ந்த தொடர்பு இருப்பதையே இவை தொட்டுக் காட்டுகின்றன.

உணர் திறனைக் கொண்டு நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு மொசார்ட் விளைவு ஒரு சான்று .கவிதை மற்றும் வேற்று மொழி கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றில் திறன் மேம்படுகிறது. சிறிது நேரமே மொசார்ட் இசையை கேட்டாலும் குழந்தைகளின் செயல் திறன் பெரிதும் மேம்படுகின்றது. கற்பனைத் திறனில் குறிப்பிடும்படியான தற்காலிய மாற்றமும், கணக்குப் போடுதல்,சதுரங்கம் விளையாடுதலில் புத்திசாலித்தனமும்,குழப்பமின்றி விரைந்து செயல்படும் தன்மையும் ஏற்படுகின்றன .வலிப்பு நோய்(epilepsy) உள்ளவர்கள் இசையால் ஓரளவு குணமடைகின்றார்கள்.இசை,நரம்புகளின் மூலம் நடைபெறும் செய்திப் பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துவதால் இந்த உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன எனக் கண்டறிந்துள்ளனர்.  

No comments:

Post a Comment