Saturday, October 13, 2012

Eluthatha kaditham


எழுதாத கடிதம்
உடலுறுப்புகள் எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாய் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதனால் உயிர் உடலென்னும் கூட்டில் மகிழ்ச்சியாக இருந்தது. உடலும் தன் வேலைகளைச் செவ்வனே செய்து வந்தது. ஒருநாள் சிறுநீரகத்திற்கு புத்தி கெட்டுப் போச்சு .நீரைப் பிரித்து வெளியே அனுப்ப மறுத்து விட்டது. சிறிது நேரத்தில் உடலிலுள்ள மற்ற உறுப்புகள் வெலவெலத்துப் போய்விட்டன. ஒவ்வொன்றாக சிறுநீரகத்திடம் போய் கொஞ்சிக் கெஞ்சிப் பார்த்தன.சிறுநீரகம் ,"உடலில் பல உறுப்புகள் பகலில் மட்டுமே அதாவது பாதி நாள் மட்டுமே வேலை செய்கின்றன. இரவில் ஓய்வெடுத்துக் கொள்கின்றன. நான் மட்டும் ஓய்வின்றி முழுநாளும் வேலை செய்யவேண்டுமா ? நானும் இனிமேல் உங்களைப் போல பாதி நாள் மட்டுமே வேலை செய்வேன் " என்று கூறியது. உடலுறுப்புகளுக்கு ஒன்றும் புரியவில்லை. உடலுக்குத் தலைமைப் பொறுப்பேற்றுள்ள மூளையிடம் போய் முறையிட்டன. மூளையும் சிறுநீரகத்தைப் பார்த்து, " ஏய், சிறுநீரகமே உனக்கு புத்தி கெட்டுப் போச்சா இல்லை இதயமே இல்லையா நீ பாதி நாள் மட்டுமே வேலை செய்தால் நாம் எல்லோரும், உன்னையும் சேர்த்துத்தான் மடிந்து போவோம். நான் உனக்குக் கட்டளை இடுகின்றேன் .நீ என்ன வேலை செய்வதாக உடல் பிறக்கும் போது ஒப்புக் கொண்டாயோ அதை மறுப்பின்றி செய் " என்றது. சிறுநீரகம் பிடிவாதமாக நீரைப் பிரித்து வெளியே அனுப்ப மறுத்தது. தலைமையின் கட்டளைக்கும் உடன்பட மறுத்தது. சிறுநீரகத்திற்கு அறிவான மூளையும் இல்லை ,அன்பான இதயமும் இல்லை. ஓரிரு நாட்களில் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது. காலங் கடந்து உணர்வதற்குக் கூட சிறுநீரகத்திற்கு காலம் இல்லை கர்நாடகா காவிரி நதி நீரை தானாக உணர்ந்து இரக்கப்பட்டும்,தலைமைக்குக் கட்டுப்பட்டும் தமிழகத்திற்கு உரிய பங்கைத் தராமல் பிடிவாதமாக இருப்பது இந்த சிறுநீரக உருவகக் கதையைத்தான் நினைவூட்டுகிறது. ஸ்ரீ லங்காவில் தமிழ் இனத்தவர்கள் கொல்லப்பட்டபோது இந்தியாவில் தமிழ் மாநிலத்தில் உள்ள தமிழர்கள் வேற்று நாட்டினருக்காக குரல் கொடுத்தார்கள் .ஆனால் நீங்கள் ஒரே நாட்டில் அண்டை மாநில மக்களுக்கே மனமிறங்க மாட்டேன் என்கிறீர்களே.நாம் இந்தியர்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் பேச்சுக்குத்தானா.அடுத்தவன் வீட்டில் நிகழ்ந்த சோகத்திற்கு நாங்கள் ஆறுதல் கூறினோம். அது தமிழர்களின் மேம்பட்ட நாகரிகம். எங்கள் வயிறு பற்றி எரியும் போது நீங்களோ குளிப்பதற்கு தண்ணீர் தரவேண்டாம்,குடிப்பதற்காவது கொஞ்சம் தண்ணீர் தரக்கூடாதா ? மாறாக எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஆளாளுக்கு ஊற்றுகின்றீகள். இது தான் உங்கள் நாகரிகமா ?

1 comment:

  1. அப்பா !! உங்களின் சமூக பார்வை, போற்றுதலுக்குரியது. நம் நாட்டை, ஒரு மனித உடலுக்கு உருவகப்படித்தியது, மிகவும் அருமை.

    ReplyDelete