Wednesday, October 17, 2012


Mind without fear     இந்தியாவில் தற்கொலைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது மிகவும் கவலை தரக்கூடிய விஷயம் .  உலகில் அதிகம் தற்கொலை நிகழும் நாடுகளில் இந்தியா முதலிடம்                    பெற்றிருக்கிறது. பிறரோடு சேர்ந்து வாழப் பிடிக்காமலோ அல்லது அவர்களோடு சேர்ந்து வாழத் தகுதி இல்லை என்று நினைப்பதாலோ தற்கொலை செய்து கொள்ளும் முடிவை சிலர் எடுத்து விடுகின்றார்கள் . இதைத் தடுப்பதற்கு அரசு முறையிலான திட்டங்கள், முயற்சிகள் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இல்லை என்றாலும் ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனநோய் மருத்துவ மனைகள் இப் பணியைத் தமிழகத்தில் செய்து வருகின்றன.தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதைக் கண்டு விழித்துக் கொண்ட அண்ணா பல்கலைக் கழகம் போன்ற ஒரு சில பல்கலைக் கழகங்கள் அப்படிப்பட்ட மாணவர்களுக்கு ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தி வருவது போற்றுதற்குரியது .

தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகளா இல்லை தைரியசாலிகளா? தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்ள பொதுவாக யாருக்கும் துணிவு வருவதில்லை. உடல் உள்ளுணர்வின் கட்டுப்பாட்டில் இருப்பதே இதன் அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. அறிவு மட்டுமே  அதைத் தீர்மானிப்பதற்கு உள்ளுணர்வு விட்டு விடுவதில்லை. எல்லா உயிரினங்களும் எந்தச் சூழ்நிலையிலும் தொடர்ந்து வாழவே நினைப்பதால் எதிர்ப்புகளைச் சமாளிக்கப் போராடுகின்றன. இப்படிப் போராட வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் உடலமைப்பில் ஒரு தனிச் சிறப்பை பிறக்கும் போதே இயற்கை அளித்திருக்கின்றது.காட்டில் தன்னைக் கொன்று உண்ணும் சிங்கத்திடமிருந்து மான் விரைந்து ஓடி தப்பிப் பிழைப்பதில்லையா ? யானைகளுக்கு அசுர பலம், மாடுகளுக்கு கொம்பு, பறவைகளுக்கு இறக்கை ,தவளைகளுக்கு பின்னங்கால்கள் ,ஓணானுக்கு சுழலும் கண்கள் ,பனிக் கரடிக்கு மோப்ப சக்தி ,பாம்புகளுக்கு கொடிய நஞ்சு இப்படிப் பலப் பல .மனிதனுக்கு என்ன சிறப்பை  இயற்கை அளித்திருக்கின்றது என்று கேட்டால் திறன் மிகு மூளை என்றுதான் சொல்வார்கள். உண்மையில் வாழ்கைப் போராட்டத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு மனதில் தைரியம் வேண்டும். தற்கொலை செய்து கொள்வதற்கு அது தேவை இல்லை. வாழ்க்கைப் போராட்டத்தில் போராடத் தைரியம் இல்லாதவர்கள் என்று சொல்வதை விட இவர்கள் புறமுதுகு காட்டி ஓடுபவர்கள் என்றே சொல்ல வேண்டும். இவர்களே தற்கொலையில் தஞ்சம் அடைகின்றார்கள். கரையான் வந்து விட்டது என்பதற்காக வீட்டையே யாரவது கொளுத்துவார்களா? பத்தாத செருப்புக்காக தன் காலையே யாரவது வெட்டிக்கொள்வார்களா ? யதார்த்தமான வாழ்க்கையை அனுபவிக்கும் போது வாழ்கைப் போராட்டம் ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை

யதார்த்தவாதிகள் தைரியசாலிகள் என்று சொல்வதை விட கோழைகளாக இருப்பதில்லை என்றே சொல்லலாம். வாழ்கையில் எவ்வளவு துயர் வரினும்,தற்கொலைக்கு ஒருபோதும் துணிய மாட்டார்கள்.வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கையில் முழு நம்பிக்கை கொண்டிருப்பார்கள். இதற்கு சரியான உதாரணமாக காலத்தால் அழியாத பல பாடல்களைச்  சாதாரண மக்களுக்காக எழுதிக் குவித்த பிறவிக் கவிஞன் கண்ணதாசனைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.அவரிடம் இல்லாத தீய பழக்கங்கள் இல்லை என்றாலும் அவர் யதார்த்தவாதியாக வாழ்ந்ததால் எந்தப் பிரச்சனையையும் சர்வ சாதாரணமாக எதிர்கொள்ளும் மனப் போக்கைப் பெற்றிருந்தார். தன்னைப் பெற்ற தந்தை பிறந்தவுடனேயே வேண்டாமென்று விற்று விட்டார் என்று சிறுவனாக இருக்கும் போது தெரிந்து கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) மன மொடிந்து தற்கொலை செய்து கொள்ளவில்லை.மாறாகத் தன்னை யார் என்று உலகிற்கு காட்ட தன்தனித் திறமைகளை வளர்த்துக் கொண்டார்.அவரிடம் கூடவே வளர்ந்து வந்த சில கெட்ட பழக்கங்கள் அவருடைய இமாலய வெற்றிகளுக்கு முன்னால் காற்றுத் தூசியாக மறைந்து போயின. இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், நம்மிடம் குறைகள் இருக்கும்,குறைகளே இல்லாத மனிதர்கள் இல்லை. அதுவே நம் வாழ்கையைத் தீர்மானிப்பதும் இல்லை.அந்தக் குறைகளையும் புறந்தள்ளக் கூடிய அளவிற்கு நம்மிடம் புதைந்து கிடக்கும் தனித் திறமைகளை வெளிப்படுத்தியாக வேண்டும். ஸ்டீவ் ஜாப்ஸ்ஸை யாரும் அவருடைய கெட்ட பழக்க வழக்கங்களுக்காக தூக்கி எறிந்து விடவில்லை,அவருடைய அளவில்லாத சாதனைகளுக்காக போற்றுகின்றார்கள். நம்பிக்கை தரக்கூடிய திறமைகளை வளர்த்துக் கொள்ளாத நிலையில் அறியாமலும் புரியாமலும் ஏற்றுக்கொண்ட ஒரு சில வேண்டாத விஷயங்கள்  உள் எதிரி ஆகிவிடுகின்றன. 
 
  

1 comment: