Friday, October 5, 2012

sonnathum sollaathathum


சொன்னதும் சொல்லாததும் அறிந்ததும் அறியாததும் காதல் செய்ய விருப்பப்படுங்கள்
“காதல் செய்ய விருப்பப் படுங்கள்,அதுவும் குழந்தைப் பருவத்திலிருந்தே” என்று சொன்னால் புருவத்தை உயர்த்தி சந்தேகமாகத்தான் பார்ப்பார்கள்.இதற்குக் காரணம் காதலை நாம் கொச்சைப்படுத்திவிட்டோம் என்பதுதான்.காதலுக்குப் பல பொருண்மைகள் உண்டு. காதல் என்பது உண்மையான,மாறாத , அப்பழுக்கில்லாத,ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் நேசிப்பு. சமுதாயத்தின் நலனுக்காகத் தன்னைத் தானே தயார் படுத்திக்கொள்ளும் ஒரு வகையான உள்ளுணர்வு.இது அன்பு,நட்பு,நேயம்,பாசம்,விருப்பம்,ஆசை,காமம் போன்ற எல்லாவற்றின் கலப்பு. காதல் என்றால் ஆண் ஒரு பெண்ணையும்,பெண் ஓர் ஆணையும் திருமணத்திற்கு முன்பு விரும்புதல் என்று மட்டுமே இக்காலத்து இளைஞர்கள் காதலுக்குப் பொருள் கொண்டுள்ளனர்.திருமணத்திற்குப் பிறகும் காதல் இருக்கிறது என்பதை வெகு சிலரரே அறிவர். இன்றைக்கு காதலில் உள்ள காமம் மட்டுமே விஞ்சி நிற்க பிற பொருண்மைகளின் பங்களிப்பு வெகுவாக மங்கிவிட்டது. அதனால் காதலின் சமுதாய அக்கறை ஏறக்குறைய முழுதுமாக மறைந்து விட்டது என்றே கூறலாம் ஒருவர் தான் விரும்பும் பெண்ணை அவள் விருப்பம் தெரியாமல் தானே நேசித்தல் என்பதும் ஒரு வகையில் காதல் தான். இலக்கியங்களில் இது ஒரு தலைக் காதல் என்று கூறப்பட்டுள்ளது. செய்யும் தொழிலை விரும்புவதும் காதல்,படிக்கும் பாடத்தில் ஆர்வம் கொள்வதும் காதல்,உறவினர்களையும்,நண்பர்களையும் நேசிப்பதும் காதல்,ஒரு பொருள் மீது அளவில்லாத ஆசை கொள்வதும் காதல்,எல்லாமே ஒரு வகையில் காதல்தான்.எவர் இளம் வயதிலேயே காதலிக்கக்கற்றுக் கொள்கின்றார்களோ அவர்களே எதிர்காலத்தில் மிகச் சிறந்த சிந்தனையாளர்களாக ,செயல் வல்லுனர்களாக விளங்குகின்றார்கள் என்பதை உளவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர் ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கும் போது மொழிப் புலமை இல்லாவிட்டாலும் காதலர்கள் பெரும் கவிஞர்களாகவே ஆகி விடுகின்றார்கள் .குரல் வளம் இல்லாவிட்டாலும் பாடகனாகி விடுகின்றார்கள்.இசைக் கருவிகளைப் பற்றித் தெரியாவிட்டாலும் அவற்றை இசைக்கக் கூடிய இசைக் கலைஞர்களாகவே மாறி விடுகின்றார்கள். இதை காதல் படுத்தும் பாடு என்று சொல்வதை விட காதல் அவர்களுக்கு ஒரு சிறந்த ஆசிரியனாக இருந்து மிகக் குறுகிய காலத்தில் கற்றுக்கொடுக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.அதாவது ஒரு மொழி ஆசிரியருக்கு இல்லாத வலிமை, இசைப் பயிற்சியாளருக்கு இல்லாத வலிமை காதலுக்கு உண்டு. காதலித்தால் எதையுமே எளிதாகவும் விரைவாகவும் கற்றுக்கொள்ள முடியும். காதலுக்கு முன்னே இயலாதது எதுவுமே இல்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை காதல் பற்றிய இக் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறுவயதில் பிடில் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு ஒரு பயற்சியாளரிடம் சேர்ந்தார். அவர் பிடிலை பயன்படுத்தும் முறையை மட்டுமே தொடர்ந்து விளக்கி பயிற்சியளித்தது அவருக்கு மிகவும் உற்சாகம் அளிக்கவில்லை. ஆனால் இசை மேதை மொசார்ட்டின் சொனாட்டா (mozart 's sonatas) இசையின் இனிமை அவர் உள்ளத்தைக் கவர்ந்தது. சொல்லப்போனால் ஐன்ஸ்டீன் அந்த இசைக்கு மனதைப் பறிகொடுத்து விட்டார்.அதை அவர் காதல் என்றே கூறுகின்றார். அதன் பிறகு இசையில் அவர் அதிக நாட்டம் கொண்டார்.அதன் பிறகே பிடிலைக் கையாளும் நுட்பங்களில் தேர்ச்சி பெற்றார். பிற்காலத்தில் இது பற்றி அவர் குறிப்பிட்டுச் சொல்லும் போது 'காதல் என்பது கடமையை விட மிகச் சிறந்த ஆசிரியர்" என்று. இசை மிக எளிதாக ஒருவருடைய மனத்தைக் கவர்ந்து விடும்.இசையைப் போல ஒருவருடைய மனதைத் தூண்டக் கூடியது உலகில் வேறு எதுவும் இல்லை இசை என்பது இயற்கையின் மொழி,அது உலகப் பொதுவானது மட்டுமில்லை பிரபஞ்சத்திற்கே பொதுவானது.பெற்றோர்களே உங்கள் குழந்தை சாதனைகள் படைத்து சிறந்து விளங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் சிறு வயதிலிருந்தே இசையைக் கற்றுக்கொள்ள வாய்ப்பளியுங்கள் உங்கள் குழந்தை விருப்பப்பட்ட துறையில் தானாகவே சிறந்து விளங்கும்.நீங்கள் நேரடியாக கல்வி கற்பித்தாலும் இசைப் பயிற்சி அதை விடப் பல ஆயிரம் மடங்கு வலிமையானது

No comments:

Post a Comment