Thursday, February 28, 2013

Eluthatha Kditham


எழுதாத கடிதம்

ராஜ பட்ஷி போல வானில் இப்போது நீ பறக்கலாம் .ஆனால் ஒருநாள் நீயும் வேட்டையடப்படுவாய் .இந்த உலகில் நிரந்தரமாக வென்றவனும் இல்லை, தோற்றவனும் இல்லை..ஹிட்லரை நீ நல்லவனாக்கி விட்டாய். அவனை விட மோசமான, கொடுமைக்காரன் இல்லை என்று இதுநாள் வரை ஒரு ஜெர்மானியரை மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.இனி உன்னைக் காட்டி ஜெர்மானியர்கள் ஓரளவு மனம் மகிழ்வார்கள் .

மக்களை மக்களே அழிப்பது என்பது மிகவும் கொடூரமானது .அதை ஒரு நாட்டின் தலைவனே செய்வதை எவரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் ஆக்கத்திற்காக அன்றி அழிப்பதற்காக ஒரு தலைவன் உருவாவதில்லை. ஆக்கத்திற்காக அர்பணித்துக் கொண்டவர்கள் ஆட்சியில் இருந்த போதும், இல்லாதபோதும் ,வாழ்ந்து கொண்டிருக்கும் போதும் ,மறைந்து விட்ட பின்பும் சாகாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் .ஆனால் அழிவில் ஆர்வப்பட்டவர்கள் அந்த அழிவிற்கு ஒருநாள் அவர்களே உணவாகிப் போவார்கள். இதை நான் சொல்லவில்லை.கத்தி எடுத்தவன் கத்தியால் தான் செத்துப் போயிருக்கின்றான்.கரை படிந்த சரித்திரத்தின் பதிவுகள் இதைத்தான் நமக்குப் பாடமாகப் புகட்டுகின்றன. இந்தியாவின் அண்டை நாடுகள் இதை ஏனோ இன்னும் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள் .உன்னால் மடிந்தவர்கள் மடிந்த பின்பும் வாழ்வார்கள். நீ கொடுமையாகத்தான் சாகப் போகின்றாய் .உன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு நீ நல்லது பண்ணவில்லை.தீர்வு செய்யமுடியாத சிக்கலைக் கொடுத்து விட்டுப் போகின்றாய். அவர்கள் மட்டுமில்லை, உன்னை உலகம் தூற்றும் .

 

 

Wednesday, February 27, 2013

Sonnathum Sollathathum-15


சொன்னதும் சொல்லாததும் -15


வேதியியல் துறையில் இரு முறை நோபெல் பரிசு பெற்ற ஒரேயொருவர் பெடரிக் சேனர் (Frederick Sanger) என்ற இங்கிலாந்து நாட்டு உயிர் வேதியியல் விஞ்ஞானியாவார்.1918 ல் பிறந்த இவர் 1956 ல் புரோட்டீன்,குறிப்பாக இன்சுலினின் கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புக்காக ஒரு முறை தனித்தும் 1980 ல் நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடர் தொடர்பான உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக மறு முறை இருவரில் ஒருவராகவும் நோபெல் பரிசு பெற்றார் .

இவருடைய தந்தையார் மருத்துவத் துறையில் இருந்தார்.அதனால் பெடரிக் சேனருக்கு ஆரம்பத்தில் தந்தையாரைப் போல மருத்துவராக வரவேண்டும் என்ற விருப்பம் இருந்தது .ஆனால் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கற்கத் தொடங்கியபின் அவர் அவருக்கு உண்மையிலேயே எத் துறையில் விருப்பம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார். தன்னுடைய விருப்பத்திலும் ,செயல்பாடுகளிலும் சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் வாய்ப்பு நிச்சியமாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை மட்டுமே கொண்டு வாழ்க்கை முழுதும் செயல்படும் தந்தையாரின் மருத்துவத் துறை தராது என்பதைப் புரிந்து கொண்டார்.அதன் பின்னர் உயிரி வேதியியல் துறையில் அவரது ஆர்வம் வெளிப்பட்டது .

“புகழ் ஈட்டவேண்டும் ,பொருள் குவிக்கவேண்டும் என்பதற்காக நாங்கள் ஆராச்சியில் ஈடுபடவில்லை.ஆர்வமும்,மன மகிழ்ச்சியும் கொண்டிருப்பதாலும் ,மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று முழுமையாக நம்புவதாலும்,இப் பணியில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம் என்றே நான் நம்புகின்றேன்” என்றும்நானும் என் தோழர்களும் மெய்யறிவைப் பெறுவதில் நாட்டம் கொண்டு செயல்படுகிறோம்” என்றும் அடிக்கடி கூறுவார்

அறிவியல் ஆராய்ச்சி என்பது மிகவும் பிரமிப்பூட்டுவது,உறுதியான வெகுமதி தரக்கூடிய ஒரு அற்புதமான பணி .அதில் உண்மையாக ஈடுபடுபவர்கள் மட்டுமே இந்த ஆனந்தத்தை அளவில்லாமல் பெறுவார்கள் என்று அறிவியல் ஆராய்ச்சி பற்றி பெருமைபடப் பேசுவார்.

இந்தியாவில் ஆராய்ச்சிகள் எல்லாம் இரண்டாம் தரமாக இருக்கின்றன.ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் தரத்தால் மிகவும் பின்தங்கியுள்ளன. உயர் ஆராய்ச்சிகளுக்கான கட்டமைப்புகள் விரிவாகவும்,உண்மையான நோக்கத்தின் அடிப்படையிலும் ஏற்படுத்தப் படுவதோடு ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தலும் வேண்டும் .

சுயமாக தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்ட ஒரு சில விஞ் ஞானிகளும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள் .காலங் கடந்து உணர்ந்து கொண்ட இந்திய அரசு அவர்களை எல்லாம் இந்தியாவிற்கு அழைத்து வர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது .அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட உண்மையான செயலாக வும் ,விஞ்ஞானிகள் தன்னிச்சையாகச் செயல்பட வாய்ப்பும் கொடுக்கப்பட்டால் முன்னேற்றப் பாதையில் நாம் ஓரடி முன்னுக்குச் செல்லலாம்.

Tuesday, February 26, 2013

Creative thoughts


முடியும் என்பது முடியாது என்ற எண்ணம் எண்ணத்தில் இருக்கும் வரைதான் .முடியாதது என்பது பிறரால் செய்து முடிக்கும் வரை நம்மால் எது முடியாததோ அதுவாகும்.

முடியும் என்பதற்கும் முடியாது என்பதற்கும் அதிக இடைவெளி இல்லை .ஏனெனில் அவை இரண்டும் மனதின் ஒரே இடத்திலிருந்துதான் வெளிப்பட்டுத் தோன்றுகின்றன .ஒன்றிலிருந்து மற்றொன்றை எட்டுவது எல்லோருக்கும் இயலக்கூடியதுதான் .

அகத் திறமையைப் பெறும் ஆக்கப்பூர்வமான முயற்சியில் கொண்டுள்ள விருப்பத்தின் அளவால் முடிவதும்,முடியாததும் தீர்மானிக்கப்படுகின்றன

இயற்கையின் வரம்பிற்கு உட்பட்ட எதுவும் இயலும் .இயற்கைக்குப் புறம்பானவைகள் எதுவும் இயலுவதில்லை .நாம் செய்யத் தொடங்கும் வேலை எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெரிந்து கொண்டால் ,காலத்தை வீணாக்கும் நிலை ஏற்படாது .

பித்தளையைத் தங்கமாகும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் இறுதிவரை வெற்றி பெறாமல் போனதற்கு க் காரணம் இயற்கைக்கு அப்பாற்பட்டுச் செயல்பட்டதே ஆகும் .

இயற்கையை மிஞ்சிய ஒரு வலிமையான தூண்டுகோல் இந்தப் பிரபஞ்சத்தில் வேறெதுவும் இல்லை .இயற்கையைப் பார்த்துப் பார்த்துப் பாடம் கற்றுக் கொண்டால் மனிதர்களும் இயற்கையைப் போல வெல்லமுடியும்.

அனுபவங்களே செயல்களை நெறிப்படுத்துகின்றன .நெறிப்படுத்தப்பட்ட செயல்கள் யாவும் வெற்றிகரமாக முடிவடைகின்றன .

இடைத்தடைகள் இல்லாமல் உலகில் எதுவும் நடந்து முடிவதில்லை இடைத்தடைகள் என்பன புதிய வாய்ப்புக்களைத் தேடும் வாய்ப்புக்களைத் தருகின்றன.

வெற்றியின் ஒரு இரகசியம் நாம் நாமாக இருந்து கொண்டே செயலாற்றுவதுதான் .

முடியும் என்று சொல்லிவிட்டால் நாம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும் .முடியாது என்று சொல்லிவிட்டால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் .மனதை நீ ஆள்கின்றாயா இல்லை மனம் உன்னை ஆள்கின்றதா என்பதைப் பொறுத்து இது அமைகின்றது