Tuesday, February 5, 2013

Micro aspects of developing inherent potentials


மனதை தயார் படுத்திக்கொள்ளுதல்

மனதைத் தயார் படுத்திக் கொள்ளாததால் நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்ளும் இழப்பு அளவில்லாதது.அந்த இழப்பை நாம் எந்த ஒரு நிலையிலும் மதிப்பிடுவதில்லை.அதனால் அதைப்பற்றி நாம் கவலைப்படுவதுமில்லை.மனதின் செயல்படு திறன் நாளுக்கு நாள் குறைந்து போக இது இடம்தருகின்றது .சரியான காலத்தில் சரியான காலத்திற்குள் சரியாகச் செய்யவேண்டிய செயல்களைச் செய்து முடிக்க தொடக்கத்திலிருந்து நிறைவேறும் வரை மனம் மேற்கொள்ளும் முயற்சிகளே அதன் செயல்படு திறனாகும்.ஒரு செயலுக்குத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல் தேவையில்லாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளுதல்,காலத்தை தேவையில்லாமல் விரயம் செய்தல்,முன் திட்டமிடாமல் முன்பின்னாகச் செயல்களைச் செய்து பயன் இழத்தல்,மனக் குழப்பத்தால் தவறு செய்தால், ஆக்கத்தின் பயனுறு திறன் குறைந்து போகக் காரணமாக இருத்தல் இப்படிப் பலவகையாலும் ஒருவரின் செயல்பாடு திறன் குன்றிப் போகலாம் .

வியாபாரத்தில் தோல்வி ,சமுதாய உறவுகளில் விரிசல் ,குடும்பத்தில் குழப்பம் ,நேரான பாதையை விட்டு விலகி தவறான பாதையைத் தேர்வு செய்து துன்பத்தில் சிக்கிக் கொள்ளுதல் போன்ற பல்வேறு தனிமனிதப் பிரச்சனைகளுக்கு இருக்கும் சரியான,முழுமையான தீர்வு நாமே நமது மனதை ஒழுங்கமைத்துக் கொள்வதாகும். ஒருவருக்கு அவரின் மனம்       கட்டுப்படுமானால் இது இயலும்,மனதிற்கு அவர் கட்டுப்படுவாரேயானால் இது இயலாது .வழக்கமான ஒரு சில நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றி இயல்பாக்கிக் கொள்வதினால் காலப்போக்கில் இது மேம்படுகின்றது. ஒரு செயலைத் தொடங்கு முன் நோக்கத்திற்கு ஏற்ப தேவையின் அளவை திட்டமிட்டுக் கொள்ளவேண்டும் .செயலைச் செய்யக் கூடிய அளவை விட சுருக்கிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும், கடுமையாக்கிக் கொள்வது அறியாமையாகும்.செயலைச் செய்யது முடிக்க முன் திட்டமிடும் போது இருக்கும் பலத்தையும் பலவீனத்தையும் ஒருசேர எடைபோடவேண்டும்.பலத்தை முழு அளவில் பயன்படுத்திக் கொண்டு பலவீனத்தை முடிந்த வரை தவிர்க்க முயற்சிகள் எடுத்துக் கொள்ளவேண்டும் .ஒழுங்கமைத்து மனதைத் தயார் படுத்த ஒருவருக்கு அவரே சிறந்த வல்லுனர் .இதற்கு வெளி ஆட்களின் முயற்சி முழு அளவில் நற்பயன் அளிப்பதில்லை. பெரும்பாலானோர் இதற்கான தகுதிப் பாட்டை வளர்த்துக் கொள்ளாததால் மனதைத் தயார்படுத்துவதில் தொடக்க நிலையிலேயே தோற்றுப் போய்விடுகின்றார்கள்.மனம் போல     வாழ்வு என்பார்கள்.மனம் உண்மையாக என்ன நினைக்கின்றதோ அதுவே அவரவர் வாழ்க்கையாக அமைகின்றது. எனவே எண்ணத்திற்கும், சிந்தனைக்கும் காரணமான மனதை கட்டுப்படுத்த நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .மனத்தைக் கட்டுப்படுத்தாமால் ஒருவர் 100 க்கு 100 வெற்றியைப் பெற முடியாது.கையிலிருக்கும் ஒரு விதை ஒருநாள் பசியைப் போக்கலாம் வெறும் பகற்கனவில் காணும் கனிகள் ஒருநாளும் பசியைப் போக்கிவிடாது என்பதைப் புரிந்து கொண்டால் பகற்கனவு காண்பதை விட்டுவிட்டு கற்பனை யோடு சிந்திக்கத் தொடங்குவீர்கள்.

No comments:

Post a Comment